கடந்த ஜூன் 28 ம் நாள் இரவு சத்திஸ்கார் மாநிலத்தில் உள்ள பீஜப்பூர் மாவட்டத்தில் சுமார் இருபது மாவோயிஸ்டுகளை ஒரு நீண்ட துப்பாக்கிச் சண்டைக்குப் பின் சுட்டு வீழ்த்தியதாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையும் சத்திஸ்கார் போலிசும் அறிவித்தன. இந்தியத் தொலைக் காட்சிகள் அதிலும் குறிப்பாக ஆங்கிலச் செய்தி நிறுவனங்கள் இந்த வெற்றியை நாள் முழுவதும் மீண்டும் மீண்டும் அறிவித்த வண்ணம் இருந்தன. மாவோயிஸ்டுகளுடனான போரில் இது ஒரு மிகப் பெரும் வெற்றியாக நாடு முழுவதும் பறை சாட்டப்பட்டது. தொலைகாட்சிகளில் போலீஸ் அதிகாரிகள், ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் மீண்டும் மீண்டும் தோன்றி இது ஓர் மிகப் பெரும் வெற்றி என்ற கொண்டாடிக் கொண்டிருந்தனர்.
கூடவே, அமைச்சர் சிதம்பரம் தொலைக் காட்சியில் தோன்றி தமது தலைமையில் இயங்கும் படைகள் இந்த அரும் சாதனையை நிறைவேற்றியதாக மகிழ்ச்சி பொங்க அறிவித்தார். ஒரு தேர்ந்த பொய்யனுக்குரிய பம்மாத்துடன் சம்பவம் குறித்துப் பசப்பினார். இந்த நடவடிக்கை மிகவும் திட்டமிட்டு, பல நாட்களாக சேகரிக்கப்பட்ட உளவுச் செய்திகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பப்டதாக அறிவித்தார். இந்தப் போரில் ஒரு போலீஸ்காரர்கூட சாகவில்லை என்றும் ஆறு பேருக்குக் காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். இது மாவோயிஸ்டுகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், இனி வரும் காலங்களில் போலீஸ் படைகள் தீவிரமாகப் போராடும் என்றும் மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.
ஆனால், அவரது பெருமை அடுத்த சில மணி நேரத்தில் அம்பலமாகி விட்டது. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்ற பழமொழி பொய்யாகி சிதம்பரத்தின் பொய் எட்டு மணிநேரம் தான் என்று உணர்த்தியது. உண்மை கசியத் தொடங்கி குற்றக் கும்பலான மன்மோகன், சிதம்பரம், விஜயகுமார் ஆகியோரின் கோரமுகங்களை வெளிக் கொண்டு
வந்துள்ளது.
நடந்தது என்ன?
பழங்குடியினரது வாழ்வில் ஆட்டமும் பாட்டமும் கூடிய திருநாட்கள் பல. அவற்றில் ஒன்று விதைப்புத் திருநாள். மழைக்காலம் தொடங்கும் ஜூன் – ஜூலை மாதத்தில் ஊர்கூடித் திட்டமிட்டு செய்யும் பயிர் பற்றியும், பாசன விபரம் பற்றியும் விவாதிக்க அவர்கள் ஆண்டு தோறும் கூடுவது வழக்கம். மனிதர்களின் கூட்டு உழைப்பையும் இயற்கையின் தயவையும் மட்டுமே நடைபெறும் பழங்குடி விவசாயத்தில் இந்த நாள் மிகவும் முக்கியமானது. குறிப்பிட்ட இந்த நாளில் அனைவரும் கூடித் திட்டமிடுவது பழங்குடி விவசாயிகளின் நடைமுறை. இந்த நாளில், வரிசைக்கிரமமாக யார் விதைப்பது, என்ன விதைப்பது என்று ஊர் கூடி முடிவு செய்வார்கள். மழை கடந்து போகும் முன் மிஞ்சியிருக்கும் மிகக் குறுகிய காலத்தில் விவசாயப் பணிகளை முடிக்க வேண்டுமானால் ஒவ்வொரு குடும்பமும் அடுத்த குடும்பத்தை, அடுத்த ஊர்க்கார்களை நம்பி ஒருவருக்கு ஒருவர் கொடுத்து வாங்கி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அப்படித்தான், பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள சிறுகூடம், கொத்தகூடம், ராஜூபெண்டா என்ற மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சுமார் எண்ணூறு பேர் அன்று கூடினர். ஆட்டமும், பாட்டும், இசையும், இரவு முழுக்க நடந்து கொண்டிருந்தது.
சிதம்பரம் மந்திரியாக இருக்கும் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வரும் பாம்புப் படை (COBRA forces) என்ற பெயரில் அழைக்கப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படைகள் சுமார் முன்னூறு பேர் அடங்கிய போலீஸ் படைகள் இந்தக் கூட்டத்தைச் சுற்றி வளைத்தது. கண்மண் தெரியாமல் சுடத் தொடங்கின. இந்தப் படைகள் பழங்குடிகளைக் கொலைகள் செய்வதில் பேரின்பம் கொள்ளும் போலீஸ் அதிகாரியான விஜயகுமார் தலைமையில் இயங்குகின்றன. இரவில் இறந்தது பெரும்பாலும் குழாந்தைகள். இரவு விடிந்து மறுநாள் சிக்கிய இளைஞர்களை பிடித்துக் கொன்றனர். போலிஸ் சுட்டுக் கொன்ற இருபது பேர்களும் அப்பாவிப் பழங்குடிகள் அவர்களில் ஒருவரும் மாவோயிஸ்டுகள் இல்லை.
கொலை செய்யப்பட்டவர்களில் பத்துப்பேருக்கும் மேலானவர்கள் குழந்தைகள். இவர்களில், பள்ளி செல்லும் மாணவர்கள் விடலைப் பையன்கள், இளஞ் சிறுமிகள் அடக்கம். அத்துடன் வயதான முதியவர்கள்
ஓடமுடியாத கிழவிகள் அடக்கம். பின் வரிசையிலும் முன் வரிசையிலும் அமர்ந்திருந்தவர்கள் முதலில் கொல்லப்பட்டவர்கள். இதில் தபேலா வாசித்துக் கொண்டிருந்த இசைக்கலைஞர் தபேலாவைத்த தழுவியபடியே கொல்லப்பட்டார். இருளில் தப்பியோடும் போது போலீசின் கண்ணில் தட்டுப் பட்ட சிறுவர்களை கோழியை அமுக்குவது போல அமுக்கி அவர்களை முதலில் காலில் சுட்டும் பின்னர் தொண்டையில் சுட்டும் கொலை செய்தனர். மறு நாள் காலையில்தான் நிகழ்வின் முழுக் கோரமும் தெரியத் தொடங்கியது. மனதைத் திடப்படுத்திக்கொண்டு பிணங்களைச் சேகரிக்க வந்த முதியவர்கள், பெண்களை அடித்தும், மானபங்கப் படுத்தியும், சிலரது முலைகளை அறுத்தும் சிலரை போலீஸ் கொலை செய்த்தது.
எந்த ஆயுதமும் இன்றி திருவிழாவில் கூடியிருந்த அப்பாவிகளை கொலை செய்ததைத்தான் இப்படி வீரம் மிக்க போராக சிதம்பரம் சித்தரித்தார். இந்திய தொலைக் காட்சிகள் தங்கள் படைகளின் இத்தகைய தீரத்தைத்தான் நாள் முழுதும் கொண்டாடின. அடுத்த இரண்டு நாட்களில் உண்மை சிறுகச்சிறுக கசியத் தொடங்கியதைக கண்ட சிதம்பரம் இறுக்கமான முகத்துடன் தொலைக்காட்சியில் தோன்றி தமது படைகள் முதலில் துப்பாக்கிகளால் சுடப் பட்டதால் திருப்பித் தாக்கினர் என்றார். இப்படிப்பட்ட நேரங்களில் தொடர்பில்லாதவர்கள் யாராவது அடிபட்டிருந்தால் அது கொல்லப்பட்டவர்கள் தான் பொறுப்பு என்றார். இரவில் அவர்கள் ஏன் கூட வேண்டும். மாவோயிஸ்டுகள் அப்பாவி மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று ஒரு புளுகையும் அவரது எடுபிடிகள் அவிழ்த்து விட்டார்கள்.
கொலைகாரன் விஜயகுமார்
இந்தக் கொலைகளைத் தான் தமது படைகள் ஏதோ பெரும் போர் ஒன்று நடத்தி இருபது தீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்றதாக போலீஸ் துறை தலைவர் விஜயகுமார் பெருமைப்பட்டார். இந்த நபர் நடத்திய கொலைகள் தமிழ் நாட்டில் அனைவருக்கும் தெரிந்ததே. வீரமணி, வெங்கடேச பண்ணையார் போன்ற உள்ளூர் ரவுடிகளை போலிமோதலில் சுட்டுக் கொன்று ஜெயலலிதா முன்பு தன்னை ஒரு வீரப் பிரதாபியாக அனைவருக்கும் காட்டிக் கொண்டவர். ஆனால், இவரது கொலைகள் கடந்த எண்பதாம் ஆண்டுகளிலேயே கோமாளி எம்.ஜி.ஆரின் ஆட்சியின் போது தொடங்கியது. தர்மபுரியில் பல புரட்சியாளர்களையும், புரட்சிகர இயக்கங்களின் ஆதரவாளர்களையும் பிடித்துச் சென்று சுட்டுக் கொன்றதில் இவரது பெருமைகள் தொடங்கின. இன்னொரு கொலைகாரனான தேவாரம் இவருக்கு நேரடிக் குருநாதர்.
இந்த இருவரும் பின்னாளில், வீரப்பனைப் பிடிக்கிறோம் என்று ஆயிரக் கணக்கான பழங்குடிகளைத் துன்புறுத்தியதிலும் நூற்றுக்கும் மேலானவர்களை கொன்றதும் அனைவருக்கும் தெரிந்த செய்திதான். இறுதியில், விசம் கொடுத்துக் கொல்லப்பட்ட வீரப்பனை நான் தான் பிடித்தேன் என்று மார் தட்டியவர் இவர்.
அப்பாவிகளைக் கொலை செய்யும் தமது பெருமையை மூலதனமாக்கி மிக முக்கியமான இந்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு தலைவராக சிதம்பரத்தின் தயவில் வந்து சேர்ந்தார்.
பொய் சொல்வதில் இவர் சிதம்பரத்தையும் விஞ்சியவர். பல பெண்களது முலைகள் வெட்டிச் சிதைக்கப்பட்டுள்ளதைத் தாம் கண்டதாகவும், போலீசார் அப்பாவிகளைக் கொன்றிருப்பதாகவும் பிணங்களைக் கண்ட பத்திரிகையாளர்கள் சொல்கிறார்களே இதற்கு உங்கள் பதில் என்ன? என்று இவரிடம் கேட்டனர். அதற்கு விஜயகுமார் சொன்னார், “எங்கள் படைகள் அப்பாவிகளை சித்திரவதை செய்வது என்பது நினைத்துப் பார்க்க முடியாதது, அப்படிப்பட்ட எண்ணம் அவர்களின் ரத்தத்தில் கூடக் கிடையாது” என்று புளுகினார்.
இந்தப் பேர்வழி செய்த சித்திரவதைகளை சதாசிவம் கமிசன் உட்பட பல விசாரணைகள் மூலம் வெளி வந்துள்ளது. நீதிமன்றம் விஜயகுமார் செய்த சித்திரவதைகளுக்கு நட்ட ஈடு வழங்க உத்தரவிட்டுள்ளது. பல புகார்கள் பதிவு செய்யப்படாத வழக்குகள் இன்னமும் இந்த நபர் மீது நிலுவையில் உள்ளன. இவரின் கூட்டாளியான சங்கர் பிதரி என்ற கர்நாடக் போலீஸ் அதிகாரியை உயர் நீதிமன்றம் இதே குற்றச் சாட்டுகளின் அடிப்படையில் “கொலைகார்கள் போலீஸ் துறைத் தலைவராக பணியாற்ற தகுதியில்லாதவர்கள் என்று தீர்ப்பளித்துப் பணி நீக்கம் செய்தது. ஆனாலும் சிதம்பரம் மன்மோகன் சிங்கின் தயவு இருப்பதால் இந்த கொலைகாரன் சிறு பிள்ளைகளைக் கொல்வதை அபாரமான துணிச்சலாகக் காட்டிக் கொள்கிறார். எந்த ஒரு இந்தியப் பத்திரிகையும் தொலைக் காட்சியும் இந்தக் கொலைகாரனை எதிர்க் கேள்வியும் கேட்கவில்லை.
கொலைகள் அம்பலமான பிறகு நாளுக்கு ஒரு பொய் என்ற அளவில் அவிழ்த்து விட்டார். “மாவோயிஸ்டுகள் குழந்தைகள் பெண்களை முன்னிறுத்தி கேடயமாகப் பாவித்திருக்கலாம் என்றும் தாம் இப்படிப்பட்ட சம்பவங்களை ரகசியம் கருதி இதுவரை வெளியிடவில்லை என்றும், இப்போது நேரம் வந்ததால் வெளியில் சொல்கிறேன்” என்றார்.
சிதம்பரத்தின் பொய்யை அவர் ஒட்டிக கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்களே நேரடியாக கேள்வி கேட்கத் தொடங்கி விட்டனர். சத்திஸ்கர் மாநில காங்கிரஸ் கட்சி சிதம்பரம் சொன்னதில் சிறிதும் உன்மைமையில்லை என்று அறிக்கை வெளியிட்டது. கூடவே, கொலை செய்யப் பட்டவர்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் எந்த தொடர்புமில்லை என்றும் சொன்னது.
போலீசார் துப்பாக்கியால் சுடப்பட்டது உண்மையா?
மாவோயிஸ்டுகள் வைத்திருக்கும் குருவி சுடும் துப்பாக்கிகள் மூலம் போலீசார் சுடப்பட்டனர் என்றும் அதன் பின்னரே இந்தத் தாக்குதல் தொடங்கியது என்றும் ஒரு கதையை அவிழ்த்து விட்டனர். கூடவே, சில குருவி சுடும் துப்பாக்கிகளையும் கொண்டு வந்து மாவட்டப் போலீசார் காட்டத் தொடங்கினர். ஆறு போலீசார் சுடப்பட்டு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக சிதம்பரம் சொன்னார்.
சுடப்பட்ட போலீசாரை நேரில் காணச் சென்ற இந்து பத்திரிக்கை நிருபரிடம் மருத்துவமனை தலைமை டாக்டர் சொன்னது: “மொத்தத்தில் இரண்டு பேருக்கு சிறிய துப்பாக்கி தோட்டாச் சில்லுகளால் காயம் ஏற்பட்டுள்ளது. மற்ற இருவர் தடுமாறி விழுந்து கால் சுழுக்கியதினால் நடக்க முடியாமல் இங்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் என்றார்”. துப்பாக்கிகளை கண்மண் தெரியாமால் சுட்டதில் பாறைகளில் பட்டுச் சிதறிய தோட்டாச் சில்லுகள் இந்தக் காயத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று ஒரு மருத்துவர் சொன்னதாக இந்து பத்திரிகையின் நிருபர் எழுதியிருக்கிறார்.
கடைசியில் மாவோயிஸ்டுகள் சுட்டதாகச் சொன்னதும் பொய் என்று அம்பலமானது.
ஏன் இந்தக் கொலைகள்?
சிதம்பரம் ஏன் இந்தக் கொலைகளுக்கு தலைமை தாங்கி நடத்துகிறார் என்பது நாம் அறிந்து கொள்ள வேண்டும். இந்தக் கிராமங்கள் அமைந்திருக்கும் நிலங்கள் அளப்பரிய தாதுக்களைக் கொண்டிருக்கின்றன. இரும்பு, செப்புத் தாதுக்கள் இதில் மிகவும் முக்கியமானது. மன்மோகன் சிங் தலைமயில் அறிவித்து நடத்தப்பட்டு வரும் புதிய பொருளாதார கொள்கை என்பது உலக வங்கியின் புதிய காலனியாதிக்க முறை. இந்த பொருளாதார கொள்கையின்படி பல உள்ளூர் வெளியூர் கம்பெனிகள் முளைத்து நிலங்களை அபகரிக்கக் காத்துக் கொண்டிருக்கின்றன.
இப்படி இதுவரை சத்தீஸ்கரில் மட்டும் சுமார் 650 கிராமங்கள் சிதம்பரத்தின் தலைமையில் காலி செய்யப் பட்டுள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு முன் சுமார் 10 லட்சம் மக்கள் வாழ்ந்த இந்தப் பகுதியில் இன்று பாதிப் பேர் கூட கிராமாங்களில் இல்லை. எங்கே போனார்கள் என்பதற்குக் கூட அரசிடம் கணக்கு இல்லை. அவர்கள் உள்நாட்டில் அகதிகளாக ஆந்திர மாநிலத்தில் தஞ்சம் புகுந்திருப்பதாகவும் பலர் காடுகளுக்குள் சென்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்வதாகவும் சில அறிக்கைகள் சொல்கின்றன.
இப்படி கிராமங்களைக் காலி செய்து நிலைகளை கைப்பற்றுவது முதலில் சல்வா ஜூடும் என்ற கூலிப் படைகள் செய்து வந்தனர். இந்திய உச்ச நீதிமன்றம் இந்தக் கூலிப் படைகளை தடை செய்தவுடன் விஜயகுமாரின் மத்திய ரிசர்வ் படைகள் நேரடியாக களம் இறங்கியுள்ளன.
மக்களை வெளியேற்று நிலங்களைக் கைப்பற்று: புதிய பொருளாதாரம்
இப்படி கிராமங்களை ஒழித்து எஞ்சிஇருக்கும் மக்களை கூண்டுகள் போன்ற காலனிகளில் தள்ளுவது நூறு ஆண்டுகளுக்கு மேலாக செய்யப்பட்டு வரும் ஒரு நடைமுறைதான். இலங்கைப் போரிலும் இதே வழிமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த மூன்று கிராமங்களையும் சுரங்கம் தோண்டுவதற்காகவே சிதம்பரத்தின் கூலிப் படைகள் தாக்கியிருக்கின்றன. இனி வரும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ரூர்கேலா போன்ற மிகப் பெரும் இரும்பு ஆலைகளுக்குத் தேவையான தாதுக்கள் இந்தக் கிராமங்களில் இருந்து தான் தோண்டவேண்டும். அதற்கென அமைக்கப்படும் தனி ரயில் பாதையில் இப்படி இன்னும் சுமார் ஐநூறு கிராமங்கள் உள்ளன. இவர்களது எதிர்ப்பை சமாளிக்க ஒரே அடியாக இந்தக் கிராமங்களை அழித்து விடுவது என்ற வழிமுறையை சிதம்பரம் வகுத்து செயல் படுத்தி வருகிறார். மக்களை ஒரேயடியாக கொலை செய்வது மிஞ்சியவர்களை ஓரிடத்தில் குவிப்பது, நிலங்களைக் கைப்பற்றுவது இது தான் புதிய பொருளாதாரக் கொள்கையின் வழி முறை.
கொலைகளை நிறுத்து !! கொலைகாரர்களை கைதி செய்!
அப்பட்டமான கொலை நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் உள்துறை அமைச்சர் சிதம்பரம், ரிசர்வ் போலீஸ் தலைவர் விஜயகுமார், மாநில முதல்வர் ராமன் சிங் அதை நியாயப் படுத்தும் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை செயலர் வி.கே. சிங் ஆகியோரை இந்திய சட்டங்களின் படியும், சர்வதேசப் போர் நடத்தை சட்டங்களின் படியும் உடனடியாக கைது செய்து, சிறையில் அடைத்து விசாரணை செய்து,. தண்டனை வழங்க கோருவது.அணைத்து சனநாயக உரிமையாளர்களின் கடமையாகும்.
Description: Maoist encounter
சிதம்பரம்-விஜயகுமார் கொலை செய்த குழந்தைகள்- வயது 6 முதல்14
கொலை செய்யப்படதில் பெரும் பகுதி சிறுவர்கள்:
http://www.ndtv.com/video/player/news/6-minors-killed-in-Chhattisgarh-encounter-congress-report/238237
கொல்லப்பட்டவர்களின் பிணாங்களைக் கூட கொடுக்க மறுக்கும் சிதம்பரத்தின் நிர்வாகம்:
http://www.ndtv.com/video/player/news/the-unclaimed-maoist-leader/238229
This is indeed an Internal Security problem of India. Nobel Prize winning economist Amartya Sen wanted the Indian Government to talk to the Maoists.