அரசியல் கட்சிகள் மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெறும் நோக்கோடுதான் உருவாக்கப்படுகிறது. மக்களின் ஆதரவைப் பெற பல விதமான வாக்குறுதிகளையும் மக்களுக்கு அளிக்கிறது. அதே கட்சி ஆளும் கட்சி ஆனால் கொடுத்த வாக்குறுதிகளை ஓரளவு நிறைவேற்றி தங்கள் அணுகுமுறையால் வெல்கிறது.
ஆனால், திமுக, திராவிட இயக்கத்தை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கோடு உருவான கட்சிதான் நாம் தமிழர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முதல் அக்கட்சியின் கீழ் மட்ட பிரமுகர்கள் வரை வாயைத் திறந்தால் வன்முறை வாடை வீசுகிறது. தலைவர்களை அறுவருப்பாக பேசுவது. அரசியல் தலைவர்களின் குடும்பங்களை கீழ்த்தரமாக விமர்சிப்பது, பெண்களை அவதூறாகப் பேசுவது என இதையே அரசியல் பணியாகச் செய்து வருகிறார்கள்.
புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களிடம் இருந்து ஆண்டுதோறும் பல லட்சம் ரூபாயை நன்கொடையாகப் பெறும் நாம் தமிழர் கட்சி அந்த நிதி பற்றி எதுவும் பேசுவதில்லை. இந்திய தேர்தல் கமிஷனால் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு அரசியல் கட்சி எந்த வெளிநாட்டிடம் இருந்தும் தேர்தல் நிதி பெறக்கூடாது. ஆனால், நாம் தமிழர் கட்சி வெவ்வேறு காரணங்களைச் சொல்லி நிதி பெறுகிறது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் முதல்வரின் பிறப்பைப் பற்றி மோசமாகப் பேசி சட்டை துரைமுருகன் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சரி, இவ்வளவு பேசும் இவர்கள் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் வெல்வதில்லை. இப்போது நடந்து முடிவுகள் வெளியாகி வரும் உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றியக் கவுன்சிலர் பதவிகள் ஒன்றில் கூட வெல்ல முடியவில்லை. சரி மாவட்ட அளவில்தான் வெல்ல முடியவில்லை. ஒரு வார்டிலாவது வென்றார்களா என்றால் இல்லை.
வார்ட் என்பது போட்டியிடும் வேட்பாளர்கள் வசிக்கும் பகுதி அன்றாடம் மக்களோடு புழங்கும் இடம் என்பதால் ஓரளவுக்கு போட்டியிடும் அனைவருக்குமே மக்களிடம் செல்வாக்கு இருக்கும். ஆனால், நாம் தமிழர் கட்சி ஒரு வார்ட் தேர்தலில் கூட வெற்றி பெற முடியவில்லை. அந்த அளவுக்கு மக்களோடு நெருக்கமாக இருக்கிறார்கள்.
மைக், மேடை, வாட்சப், பேஸ்புக் போன்றவற்றின் மூலமாகவே ஒரு கட்சியை வளர்த்து விட முடியாது என்பதையே நாம் தமிழர் கட்சி துவங்கிய நாள் முதல் சந்தித்து வரும் தோல்விகள் எடுத்துக் காட்டுகின்றன.