தேசிய இனப்பிரச்சனை என்பதும் போராட்டம் என்பதும் ஏகாதிபத்தியங்களுக்கு எதிரானது. இது ஜனநாயகத் தன்மையையும் முற்போக்கு அம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. பிற்போக்கான அரசியல் தலைமைகள் தேசிய இனப்போராட்டத்தைச் சிதைத்துச் சீர்குலைத்துள்ள போதிலும் மீண்டும் தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் தவிர்க்க முடியாததாகவே இலங்கையில் காணப்படுகிறது. இந்த நிலையில் தேசிய இனப்பிரச்சனையை வெறும் மதங்கள் சார்ந்த பிரச்சனையாக மாற்றும் முயற்சியில் ஏகாதிபத்திய நாடுகளும் அதன் அடியாள் அமைப்புக்களான ஐக்கிய நாடுகள் நிறுவனமும் செயற்பட்டுவருகின்றன.
நோர்வே மற்றும் ஏகாதிபத்திய நாடுகளின் நிதி வளத்திலும் கோத்தாபய ராஜபக்சவின் ஆதரவுடனும் செயற்படும் பொது பல சேனா என்ற பயங்கரவாத அமைப்பு தேசிய இனப்பிரச்சனையை மதப் பிரச்சனையாக மாற்றுவதற்குரிய முதலாவது நச்சு விதையாகும். பொது பல சேனாவின் வன்முறைகளுக்கு எதிராகக் கருத்து வெளியிடும் ஏகபோக அரசுகள் மத வன்முறை இலங்கையில் பிரதானமான பிரச்சனை எனக் கருத்து வெளியிடுகின்றனர்.
வன்னியில் சாரிசாரியக மக்கள் கொல்லப்படும் போதும், தமிழ்ப் பேசும் மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இனச்சுத்திகரிப்பு நடைபெற்ற போதும் மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்த பன் கீ மூன் இன்று இலங்கையில் மதப் பிரச்சனை இருப்ப்தாகக் கண்டுபிடித்துள்ளார். இலங்கையில் சிறுபான்மை மதச் சமூகத்தவர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அனைத்து இன மக்களினதும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தினதும் மதத் தலைவர்களினதும் பொறுப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
மதத்தில் பெயரால் வன்முறைகளில் ஈடுபடுவது, மதங்களின் அடிப்படை கொள்கைகளுக்கு முரணானது என்ற கோட்பாட்டையும் பன்கீ மூன் முன்வைத்துள்ளார்.
இஸ்லாமியத் தமிழர்கள் மீதும் வட கிழக்குத் தமிழர்கள் மீதும் மலையகத் தமிழர்கள் மீதும் பேரினவாத அரசின் ஒடுக்கு முறை கட்டவிழ்த்து விடப்ப்பட்டுள்ளதன் ஒரு பகுதியே பொது பல சேனா பன் கீ மூனும் நோர்வே அமெரிக்கா போன்ற நாடுகளும் இலங்கயில் கூர்மையடைந்துள்ள தேசிய இனப்ப்பிரச்சனையை மதப் பிரச்சனையாக மாற்றத் தலைப்படுகின்றனர்.