கிழக்கு மாகாணத்தில் தேடுதல் என்ற பெயரில் இராணுவ ஒடுக்குமுறை மீண்டும் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் நிலையில், திட்டமிட்ட குடியேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்பு, பௌத்த சிங்கள மயமாக்கல் போன்றன அதிகரித்திருக்கும் நிலையில் இந்திய அரசுடனும் இணைந்து இனப்பிரச்சனைக்கான பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசு மேற்கொள்ளவிருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
காஷ்மீர் உள்ளான பல தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை இராணுவ ஆக்கிரமிப்பினூடாக ஒடுக்கிவரும் இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை என்பது கேலிக்கிடமானது என்பது ஒருபுறமிருக்க, போலி இடதுசாரிகள், தொடர்ச்சியாக மக்கள்விரோதக் கருத்துக்களை முன்வைத்து பேரினவாதத்தை மேலும் வளர்க்க முற்படுகின்றனர்.
இனப்பிரச்சினை விவகாரம் தொடர்பாக தமிழ்க் கட்சிகளுடன் மட்டுமல்லாது இந்தியாவுடனும் அரசாங்கம் பேச்சுகளை நடத்த ஆரம்பித்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இடதுசாரி சிரேஷ்ட அமைச்சர்கள், எனினும் இந்தியஇலங்கை ஒப்பந்தத்தை அடுத்து கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவது இலங்கைக்கு பொருந்தாத ஒன்று என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.
கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள சிரேஷ்ட அமைச்சர்களுக்கான அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்தக் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இதன்போது பேசிய லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும் சிரேஷ்ட அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவிக்கையில்;
“சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் 3 வருடங்களுக்கு அதிகமாக பேசி அதில் அங்கம் வகித்த அரசியல் கட்சிகளிடையே 21 அரசியல் விடயங்கள் பற்றி இணக்கம் கண்டிருக்கிறோம். அதிகாரப் பகிர்வு பற்றியும் இணக்கம் காணப்பட்டிருக்கிறது.
ஆகவே தமிழ் மக்களுக்கு சரியான அந்தஸ்து வழங்கப்படுவதில்லை என்று வெளிநாடுகளின் விமர்சனத்தை இல்லாமல் செய்ய இதை நாம் தொடர்ந்து முன்கொண்டு செல்ல வேண்டும். அப்போது தமிழ் மக்களுக்கு சரியான இடத்தை வழங்குவதற்கான திட்டமொன்று எம்மிடம் இருப்பதை நாம் காட்ட முடியும்.
அதுமட்டுமல்லாது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் அரச தரப்புப் பிரதிநிதிகள் குழுவைச் சந்தித்து சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் யோசனைகளை அவர்களுக்கு சமர்ப்பித்திருக்கிறேன்.
இதேநேரம், பொதுப்பட்டியல் முறைமை உள்வாங்கப்படக் கூடாதென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவிக்கின்றனர். பொதுப் பட்டியல் முறைமையில் மத்திய அரசாங்கத்துக்கும் மாகாணங்களுக்கும் இடையில் அதிகாரங்கள் பகிரப்படுவது இல்லை என்பதே அவர்களின் நிலைப்பாடு.
ஆகவே, பொதுப்பட்டியல் இன்றி மத்திய அரசுக்கும் மாகாணங்களுக்கும் இடையில் சரியான முறையில் அதிகாரங்கள் பகிரப்படுவது தொடர்பாக நாம் கலந்து பேசி இணக்கப்பாடொன்றையும் எட்டியிருக்கிறோம்.
இதற்கமைய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுகளில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் முன்மொழிவுகளையும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தைப் பொறுத்தவரை மாகாணங்களுக்குப் பொலிஸ் அதிகாரம் பற்றித் தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு தனித்தனி மாகாணத்துக்கும் வெவ்வேறு பொலிஸ் ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டுமென்று அதில் தெரிவிக்கப்படுகிறது. எனினும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் இவ்விடயம் பற்றி நாம் கலந்துரையாடி அதை நிராகரித்திருக்கிறோம்.
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களும் மிகப்பெரியது. எனினும் இலங்கை போன்றதொரு சிறிய நாட்டில் ஒவ்வொரு மாகாணத்துக்கும் தனித்தனி பொலிஸ் ஆணைக்குழுக்களை நியமித்தால் அது மத்திய அரசுக்கு பிரச்சினையாகிவிடும். ஆகவே இந்தமுறை இலங்கைக்கு பொருந்தாது.
எனினும் பொலிஸ் சேவைக்கான ஆட்சேர்ப்பானது மாகாண அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
தமிழ், முஸ்லிம் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றுக்குச் செல்ல வேண்டும். நாடு ஒன்றுபடுத்தப்பட்டுள்ள நிலையில் அனைவரும் இலங்கையர்கள் என்ற நிலைமையை ஏற்படுத்த வேண்டும்’ என்றார்.