பிரித்தானியாவிற்கே முதலிடம் என்ற தேசியவாதக் கட்சி பிரித்தானியாவில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான தீவிரவாதக் கருத்துக்களை முன்வைக்கும் கட்சிகளில் ஒன்று. நேற்று, 17.10.2015 அன்று ஸ்டாபோர்சயர் என்ற நகரத்தில் வாழும் இஸ்லாமியர்களின் மசூதி ஒன்றை விரிவாக்க நகர சபை அனுமதி வழங்கியதற்கு எதிராக அக் கட்சி ஆர்ப்பாட்டம் ஒன்றை ஒழுங்கு செய்திருந்தது. சமூக வலைத் தளங்களில் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு ஒழுங்கு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் 210 பேர் கலந்துகொண்டதாக போலிஸ் தரப்புத் தெரிவித்தது. அதே வேளை பிரித்தானியாவிற்கே முதலிடம் என்ற கட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று பாசிசத்திற்கு எதிரான ஐக்கியம் என்ற குழுவினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
தீவிர வலதுசாரிகளான பிரித்தானியாவிற்கே முதலிடம் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு போட்டியாக நடைபெற்ற அந்த ஆர்ப்பாட்டத்தில் 250 பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளதாகப் போலிஸ் தரப்புத் தெரிவிகிறது.
தீவிர வலதுசாரிக் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவானதே என்றும் போலிஸ் அதனை மிகைப்படுத்துகிறது என்றும் பாசிசத்திற்கு எதிரான ஐக்கியம் என்ற அமைப்பினர் கூறுகின்றனர்.
ஐரோப்பா முழுவதும் பெருகிவரும் இடதுசாரி அலைக்கு எதிராக நிறவாத அமைப்புக்களை அதிகாரவர்க்கம் திட்டமிட்டு ஊக்கப்படுத்தும் போக்கு அதிகரித்து வருகின்றது. பிரான்சில் தேசிய முன்னணி என்ற நிறவாதக் கட்சியும், ஜேர்மனியில் தேசிய ஜனநாயகக் கட்சியும், கிரேக்கத்தில் தங்க விடியல் என்ற கட்சியும். டெனிஷ் மக்கள் கட்சி என்ற டென்மார்க் கட்சியும், ஓஸ்திரிய சுதந்திரம் என்ற ஓஸ்திரியக் கட்சியும் தம்மைத் தேசியவாதக் கட்சிகள் எனக் கூறுகின்றன.
தமது நாட்டு மக்களின் நலனுக்காகப் போராடுவதாகக் கூறும் இக் கட்சிகள் ஏனைய மக்கள் மீது வன்முறையப் பிரையோகின்றன. வெறுப்புணர்வையும், இனவாதத்தையும், நிறவாதத்தையும் தூண்டுகின்றன. இடதுசாரிகளுக்கும், வெளி நாட்டவர்களுக்கும், வெள்ளையர் அல்லாதோருக்கும், அகதிகளுக்கும் எதிரான வெறுப்பூட்டும் கருத்துக்களைப் பரப்பிவருகின்றன.