இனியபாரதி என்ற போர்க்குற்றம் சுமத்தப்பட்ட நபர் பிரான்சிற்கு வந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் குறித்த மேலதிக தகவல்கள் ஆதாரங்களுடன் கொழும்பு ரெலிகிராப் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தால் குழந்தைகளை இராணுவத்தில் இணைத்துக்கொண்டமைக்காக இவர் போர்க்குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர். பொத்துவில், அக்கரைப்பற்று, திருக்கோவில், விநாயகபுரம் போன்ற பகுதிகளில் நடைபெற்ற பல கொலைகளுக்கும் காணாமல் போதல் போன்ற சம்பவங்களிலும் இனியபாரதி பிரதான பாத்திரம் வகித்தவர். கருணாவின் பாரளமன்றக் குழுவின் இயங்கு சக்தியும், அம்பாறை மாவட்டத்திற்கான ராஜபக்சவின் இணைப்பதிகாரியும் இனியபாரதியே.
அம்பாறை மாவட்டத்தில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணத்திற்கான ஆணைக்குழு அமர்வில் சாட்சியமளித்த 90 வீதமானவர்கள் இனியபாரதியே தமது உறவுகளின் கொலைக்கும் காணமல்போதலுக்கும் பொறுப்பானவர் எனச்சாட்சியமளித்திருந்தனர்.
கல்முனை நீதிமன்றத்தால் பத்துவருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டவர். கிழக்கில் ஜனாதிபதித் தேர்தலிலிருந்து அனைத்துத் தேர்தல்களிலும் ராஜபக்ச அரசிற்கு வாக்களிக்குமாறு கொலைமிரட்டல் விடுத்தவர்.
இவை அனைத்துக்கும் மேலாக மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது உயர்ந்த தேசிய விருதான “தேசாபிமானி” விருது இனியபாரதிக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் இந்த விருது இனியபாரதிக்கு வழங்கப்பட்டது.
இவ்வளவு தகமைகளையும் கொண்ட இனியபாரதி விருதை வாங்கிக்கொண்ட 30 நாட்களில் பிரான்சை நோக்கிப் பயணமானார்.
இனியபாரதி பின்நவீனத்துவத்தின் கலகக் குரலாக பிரான்சில் வாழும் ராஜபக்ச அடிவருடிகளுக்கு ஒலித்தாலும் வியப்படைவதற்கில்லை.