தெலங்கானாவில் இன்று நடந்து வரும் முழு அடைப்பு காரணமாக பல இடங்களில் வன்முறை ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று முதல் வரும் 19ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது பற்றி ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் 5 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்தது. இக்குழு அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனை நடத்தி டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தர விட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி மற்றும் தெலங்கானா மாணவர்கள் கூட்டு நடவடிக்கை குழுவும், தெலங்கானா பகுதியில் இன்று முழு அடைப்பு நடத்த அழைப்பு விடுத்திருந்தது.
இதையடுத்து தெலங்கானா பகுதியில் உள்ள ஹைதராபாத், ஆதிலாபாத், நிஜாமாபாத், நல்கொண்டா, கரீம்நகர் உள்பட 10 மாவட்டங்கள் முடங்கியுள்ளன. அங்குள்ள கடைகள், கல்வி நிறுவனங்கள், தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.
ஆந்திராவில் தெலுங்கானா விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கிறது. இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்குகிறது. இதனையொட்டி சட்டசபை முன்பாக தெலுங்கானா ஆதரவாளர்கள் கூடியுள்ளனர். பலர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சபாநாயகர் காலை அளித்த விருந்தை பல எம்.எல்.ஏ., க்கள் புறக்கணித்துள்ளனர். நேற்று இரவு உஸ்மானியா பல்கலை., மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் மேலும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
12 பேர் ராஜினாமா ஏற்பு : தனித்தெலுங்கானா அமைவது தொடர்பாக ஸ்ரீ கிருஷ்ணா கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி மேற்கொள்ள வேண்டிய வரைமுறைகளை மத்திய அரசு அறிவித்தது. இது தனித்தெலுங்கானா அமைவதிலல் காலம் தாழ்த்தும் செயல் என தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதிக் கட்சியைச் சேர்ந்த 10 பேர், ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு பேர், பா.ஜ.,வைச் சேர்ந்த ஒருவர், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ஒருவர், பிரஜா ராஜ்யம் கட்சியைச் சேர்ந்த ஒருவர் என 15 எம்.எல்.ஏ.,க்கள், ராஜினாமா கடிதம் கொடுத்தனர். இதில் 12 பேர் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கிரன்குமார் ரெட்டி அறிவித்தார்.
போலீசார் குவிப்பு : இந்நிலையில் இன்று காலை ஆந்திர சட்டசபை துவங்குகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்குவதால் இன்று கடும் அமளி நிலவும் , தொடர்ந்து பல எம். எல்.ஏ.,க்க்ள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்சபை முனபாக தெலுங்கானா ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏதும் அசம்பாவிதம் நடக்காத வண்ணம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் உஸ்மானியா பல்கலை., மாணவர்கள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. இதில் போலீசார் 22 பேர் , மாணவர்கள் 13 பேர் காயமுற்றனர். தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுகிறது. போலீஸ் செக் போஸ்ட்டுக்கு தீ வைக்கப்பட்டது.