08.08.2008.
ஜோர்ஜியாவின் அரசாங்கப் படைகளுக்கும், பிரிவினைவாதப் படையினருக்கும் மோதல்கள் நடக்கும், தெற்கு அசட்டியா பிராந்தியத்தின் தலைநகரான ஸ்கின்வலிக்குள் ரஷ்ய துருப்புகள் நுழைந்துள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.
முன்னதாக, ரஷ்ய ஆதரவைப் பெற்ற தெற்கு அசட்டியா பிராந்தியத்தின், தலைநகரை தமது படைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக ஜோர்ஜிய அரசாங்கம் கூறியிருந்தது.
தலைநகரான ஸ்கின்வலியின் மீதான குண்டுவீச்சுக்களுடன் இரவு வேளையில் ஜோர்ஜிய இராணுவ நடவடிக்கை ஆரம்பமாகியிருந்தது. அதற்கு ஆதரவாக பீரங்கிகளும், தாங்கிகளும் மற்றும் விமானங்களும் பயன்படுத்தப்பட்டன
ஸ்கின்வலி மீதான ஜோர்ஜியர்களின் தாக்குதலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக, தெற்கு அசட்டியாவின் பிரிவினைவாதத் தலைவர் கூறியுள்ளார். ஆனால் அதனை சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.
அமைதிகாப்புக்கான படைகளுடன் அந்தப் பிராந்தியத்தில் இருந்த தமது சிப்பாய்கள் 10 பேர் இந்த சண்டைகளில் கொல்லப்பட்டதாக ரஷ்யா கூறுகிறது.
பதில் தாக்குதல்களுக்கான படைகளை அசட்டியாவுக்கு தாம் அனுப்பியுள்ளதாக மாஸ்கோவில் உள்ள பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
அத்துடன் ரஷ்யாவின் 58 வது படைப்பிரிவு ஸ்கின்வலியை அண்மித்துவிட்டதாக மூத்த தளபதி ஒருவரை ஆதாரம் காட்டி செய்திகள் கூறுகின்றன.
தெற்கு அசட்டியா மோதல்கள் குறித்த சர்வதேச கவலை!
———————————————————-
தெற்கு அஸ்ஸெட்டியாவில் நடக்கும் மோதல்கள் ஒரு முழு அளவிலான யுத்தமாக உருவெடுக்க வாய்ப்புள்ளது என்று ஐரோப்பிய பாதுகாப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.
அப்படி ஒரு யுத்தம் வருமானால் அது மொத்தப் பிராந்தியத்துக்குமே மிகப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஐரோப்பிய பாதுகாப்பு அமைப்பின் தற்போதையத் தலைவரான பின்லாந்து வெளியுறவு அமைச்சர் அலெக்ஸாண்டர் ஸ்டப் கூறினார்.
தற்போதைய பதற்றநிலை தொடர்பில் மிகுந்த கவலையும் கரிசனையும் கொண்டுள்ளதாக நேட்டோ கூட்டணி நாடுகளும் தெரிவித்துள்ளன.
சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புமே விவேகத்தையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டுமென ஜெர்மன் சான்செல்லர் ஆங்கலா மெர்கெல் கேட்டுக்கொண்டுள்ளார்
BBC