வெளிநாடுகளிலும் தமது அமைப்பைப் பரப்பிப் பலப்படுத்தும் நோக்குடன் அமெரிக்கா சென்றுள்ள பொது பல சேனா அமைப்புக்கு அங்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் பிரதிநிதிகள் தங்கி இருக்கும், கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள விகாரையின் நிர்வாகமே இந்த எதிர்ப்பைக் கிளப்பி உள்ளது.
அவர்களை அங்கிருந்து உடனடியாக வெளியேற்றுமாறு விகாரையின் தலைமைப் பிக்குவிடமும் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
விகாராதிபதி வண. சுமண தேரரின் நடவடிக்கையால் நாம் பெரிதும் குழப்பமடைந்துள்ளதுடன் விசனமும் அடைந்துள்ளோம்.
விகாரை நிர்வாகத்துடன் கலந்தாலோசிக்காமல் சுமண தேரர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
விகாராதிபதியை சந்தித்த ஆலய நிர்வாகம், பொது பல சேனா பிரதிநிதிகளை விகாரையில் தங்க அனுமதிக்க வேண்டாம் என்றும் அவர்களுடன் சேர்ந்து போதி பூஜை நடத்த வேண்டாம் என்றும் வலியுறுத்தினோம் என விகாரை நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கலிபோர்னியாவின் சிறிரட்ண விகாரை பொது பல சேனாவுக்கு ஆதரவு அளிக்கக் கூடாது என்பதே எமது நிலைப்பாடு என்றும் நிர்வாகம் கூறுகின்றது.
விகாரை வளாகம், வெறுப்பை வளர்ப்பதற்கும், தீவிரவாதக் குழுக்களை ஊக்குவிப்பதற்கும் பயன்படக்கூடாது என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.