கொழும்பு மேல்நீதிமன்றத்தினால் இருபது வருடக் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஊடகவியலாளர் திஸநாயகம், அவருக்கு எதிரான குற்றத் தீர்ப்பு விவகாரம் குறித்து மேன்முறையீடு செய்யப்பட்ட நிலையில் நேற்றுப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் மருத்துவக் காரணங் களின் அடிப்படையில் அவரை ஐம்பதாயிரம் ரூபா காசுப் பிணையில் செல்ல நேற்று அனுமதி அளித்தது. அவரது கடவுச் சீட்டையும் தடுத்து வைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றின் நீதியரசர்கள் லேக்கம்வாசம், ரஞ்சித் சில்வா ஆகியோரைக் கொண்ட ஆயம் இந்தப் பிணை அனுமதியை நேற்று வழங்கியது.
பிணை விண்ணப்பத்தை திஸநாயகத்தின் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி அனில் சில்வா தாக்கல் செய்து வாதிட்டார். அரசுத் தரப்பில் ஆஜரான பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் விஜித மணல்கொட, திஸநாயகத்தைப் பிணையில் செல்ல அனுமதிப்பதை சட்ட மா அதிபர் ஆட்சேபிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
அதையடுத்து மேற்படி பிணை அனுமதியை நீதிமன்றம் வழங்கியது. ஊடகவியலாளர் திஸநாயகம் 2008 மார்ச் 7 ஆம் திகதி கொழும்பில் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்குத் தாக்கல் செய்தது.
இன அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் விதத்தில் “நோர்த் ஈஸ்டன்” சஞ்சிகையில் கட்டுரை எழுதினார், புலிகள் இயக்கத்துக்கு நிதி சேகரித்தார் என்பன போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் அவருக்கு 2009 ஓகஸ்ட் 31 ஆம் திகதி கொழும்பு மேல்நீதிமன்றம் இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கியது.
அத்தீர்ப்புக்கு எதிராகத் திஸநாயகம் சார்பில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மேன்முறையீடு நிலுவையில் இருக்க அவரை நீதிமன்றம் இப்போது பிணையில் வெளியே வர அனுமதித்திருக்கின்றது.