ஆனந்தவிகடன் இதழை, அதில் வெளியாகும் நகைச்சுவைத்துணுக்குகளுக்காகவே ஆரம்பத்தில் விரும்பிப்படித்தேன். ஆரம்பத்தில் ஆர்வமுடன் ஜோக்குகளை ரசித்தபோதிலும் காலப்போக்கில் தரமான இலக்கியவிடயங்கள் ஆனந்தவிகடனில் வெளியானால் அவற்றை கத்திரித்து சேகரித்தும் வைத்திருப்பேன்.
சிலவற்றை இன்றளவும் மறக்கமுடியவில்லை. நினைத்து நினைத்து வாய்விட்டுச்சிரித்த துணுக்குகளை நண்பர்கள் வட்டத்திலும் குடும்பத்திலும் உறவினர்கள் மத்தியிலும் பகிர்ந்து அவர்களையும் மகிழ்ச்சிப்படுத்துவது எனது இயல்பு.
1985 ஆம் ஆண்டு ஏழு கவிஞர்கள், பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, சிலிர்ப்பு, பொறுப்பு, மூப்பு, இறப்பு என்ற தலைப்புகளில் எழுதிய கவிதைகளை தொகுத்து இலவச இணைப்பைத்தந்திருந்தது ஆனந்தவிகடன்.
முதலாவது கவிதை
பிறப்பு
இரண்டு மெய்யெழுத்துக்களின் உரசலில் உருவாகும் ஓர் உயிரெழுத்து
இதுவே மனித வாக்கியத்தின் முதல் வார்த்தை
கருவில் அச்சாகித்தெருவில் வருகின்ற இந்தப்புத்தகத்தை
காலம் படித்துவிட்டுக் கடைசியில் கிழித்துப்போடுகிறது.
இந்தப்பிறப்பிலக்கியத்தை படிக்கவொண்ணா ஆபாசம் என்று அறிவித்தது –
சித்தர் வேதாந்தம்
அளவோடு படிக்கச்சொன்னது சிவப்பு முக்கோணம்.
எந்தக்கட்டிலறையும் கருவறையும் – இதைக்காதில் வாங்கிக்கொள்ளாததால்…
இந்திய நூலகத்தில் இதன் எண்ணிக்கை ஏறிக்கொண்டுதான் இருக்கிறது.
பிறப்பு – ஆண்பால் பெண்பால் என பேதப்பட்டாலும் அது தழைப்பதென்னவோ
தாய்ப்பாலில்தான்.
பிறகு – அறிவுப்பசியைத் தமிழ்ப்பாலும்
ஆசைப்பசியைக் காமத்துப்பாலும், ஆன்மீகப்பசியை அறத்துப்பாலும்
தொடர்ச்சியாகத் தீர்த்து வைத்தாலும் –
பிறப்போடு வந்த பாலுணர்வு… இறப்பிற்குப்பின்னரும்
இருக்கக்கூடுமோ என்ற எண்ணத்தில்தான் –
இறந்தவனுக்கு இருப்பவர்கள் பாலூற்றுகிறார்கள்.
பிறப்பின் சிறப்பு பிறப்பில் தெரியாது… அது இறப்பில் தெரியும்…
உலகம் வடிக்கும் கண்ணீரில் புரியும்.
இந்தக்கவிதையை யார் எழுதியிருப்பார்கள் என்பதை வாசகர்களுக்குச்சொல்லவேண்டிய அவசியம் இல்லை.
இந்தப்பத்தியில் பதிவாகும் கவிஞரின் படத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
ஆனந்தவிகடனின் குறிப்பிட்ட இலவச இணைப்பில், வாலியுடன், தமிழன்பன், சிற்பி, நா.காமராசன், நிர்மலாசுரேஷ், அப்துல்ரகுமான், பொன்மணி வைரமுத்து ஆகியோரும் கவிதைகள் எழுதியிருந்தனர்.
பொதுவாகவே கவிஞர்கள் உணர்ச்சிமயமானவர்கள். வாலியும் அதற்கு விலக்கல்ல. தமிழில் பாரதி முதல் இன்றைய தமிழ்த்திரையுலக கவிஞர்கள் மற்றும் கவியரங்கு கவிஞர்கள் வரையில் உணர்ச்சிமயமானவர்கள்தான்.
பாரதி படங்களுக்கு பாட்டெழுதாவிட்டாலும் அவரது பாடல்கள் ஏராளமான திரைப்படங்களில் இனிமையான இசையுடன் வெளியாகிவிட்டன.
சங்ககாலத்தில் அரசவைப்புலவர்கள் மன்னர்களை வாழ்த்திப்பாடி பொற்காசுகளும் அன்பளிப்புகளும் பெற்றுச்சென்றார்கள். இக்காலக்கவிஞர்கள் முதலமைச்சர்களை வாழ்த்தி அவர்களின் உச்சந்தலையை குளிர்வித்தார்கள்.
கவிஞர் அப்துல்ரகுமான் திரைப்படங்களுக்கு பாடல் எழுதாதமைக்குச்சொன்ன காரணம் “ அம்மி குத்துவதற்கு சிற்பிகள் தேவையில்லை.” ஆனால் அவரும் வருடாந்தம் கலைஞர் கருணாநிதியின் உச்சிகுளிர்விக்கும் கவியரங்கு பாடல்களை புனைந்தவர்தான்.
அந்த வரிசையில் அப்துல்ரகுமானின் பார்வையில் கவிஞர் வாலி, அம்மியும் குத்தியவாறு முன்னைய முதல்வர் கலைஞரையும் பாடினார்.
தமிழக முதல்வர்கள் இருவர் (எம்.ஜீ.ஆர்ஜெயலலிதா) திரையில் தோன்றிய காலங்களில் அவர்களுக்காகவும் பாட்டெழுதினார். அதனால் வாலிக்கு சினிமாக்கவிஞர் என்ற அடையாளமே தூக்கலாகத்தெரிந்தது.
தமிழ்த்திரையுலகில் ஏனைய கவிஞர்களைவிட அதிகமான பாடல்களை ஆயிரக்கணக்கில் எழுதிய கவிஞர் வாலி. ஒருவகையில் கின்னஸ் சாதனைதான்.
தமிழ்சினிமாப்படங்களை பார்ப்பதில் எனக்கிருக்கும் ஆர்வம் ஏனோ சினிமாத்துறைசார்ந்தவர்களை சந்திப்பதில் இல்லை. அப்படிச்சந்தித்திருந்தாலும் எதிர்பாராத நிகழ்வாக அல்லது தற்செயல் நிர்ப்பந்தமாகவிருந்திருக்கும்.
எங்கள் ஊரில் வீடு அமைந்துள்ள தெருவில் கடல்தொழிலுக்குச்செல்லும் இளைஞர்களின் வாயில் உதிரும் பாடல்கள் பெரும்பாலும் எம்.ஜீ.ஆர் படப்பாடல்கள்தான். இனிமையான குரலில் அவர்கள் பாடும் பாடல்களை ரசித்திருக்கின்றேன்.
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்….அவன் யாருக்காக கொடுத்தான்
தரைமேல் பிறக்கவைத்தான்
நான் ஆணையிட்டால்…அது நடந்துவிட்டால்
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
எங்கள் ஊரில் அப்பொழுது நான்கு தியேட்டர்கள் இருந்தன. எம்.ஜீ.ஆர் படங்கள் பலநாட்களுக்கு ஹவுஸ்ஃபுல் காட்சிகள்தான்.
வாலியின் பாடல்களுக்காகவும் எம்.ஜீ.ஆரின் சண்டைக்காட்சிகளுக்காகவும் மீண்டும் மீண்டும் பார்க்கும் இளைஞர் கூட்டம் அங்கிருந்தது. எம்.ஜீ.ஆர் படங்களில் அணியும் சிவப்பு நிற ரீசேர்ட் அந்த கடற்;றொழிலாளர்கள் மத்தியில் பிரசித்தம். பாடல்களினால் வாலியும் பிரசித்தம்
இலங்கையில் சில காட்சிகள் எடுக்கப்பட்ட ஸ்ரீதரின் மேகனப்புன்னகை படத்திற்காகவும் வாலி பாடல்கள் எழுதினார். சிவாஜி கதாநாயகன். அவருக்கு இலங்கை சிங்கள நடிகை கீதாகுமாரசிங்கவும் ஒரு ஜோடி. இவர்களுக்காக வாலி இயற்றிய பாடல் இப்படித்தொடங்கும்.
தென்னிலங்கை மங்கை
வெண்ணிலவின் தங்கை
தேனருவி நீராடினாள்
தாமரையைப்போலே
பூமகளும் நின்றாடினாள்
தற்காலத்தில் வாலியினால் இப்படிப்பட்ட பாடல்களை எழுதியிருக்கவும் முடியாது. இலங்கையில் தமிழ்நாட்டவர் படம் எடுக்கவும் முடியாது. ஆனால், இலங்கையில் போருக்குப்பின்னரும் தென்னிந்திய படங்கள் வழக்கம்போலவே திரைக்கு வருகின்;றன. தமிழ்நாட்டில் தற்போதைய ஜெயலலிதா அரசு, சமீபத்தில் உலகநாயகன் கமலின் விஸ்வரூபம் தளபதி விஜய்யின் தலைவா படங்களை தற்காலிகமாக தடைசெய்தாலும், இலங்கையில் உரியநேரத்தில் அவை திரைக்கு வந்தன.
நீர்கொழும்பில் எனது நீண்ட கால நண்பரும் பின்னாளில் எனது மைத்துனருமான கவிஞர் காவ்யன் முத்துதாசன் விக்னேஸ்வரன் தமிழ்நாட்டில் சென்னை பச்சையப்பா கல்லூரியில் படிக்கச்சென்றவேளையில் கண்ணதாசன் குடும்பத்தினருடன் நெருக்கமானார். அதனால் அவருக்கு கவிஞர் வாலி உட்பட பல திரையுலகத்தினரையும் நன்கு தெரியும்.
கண்ணதாசன் பதிப்பகத்தில் பகுதி நேர வேலை செய்துகொண்டே தென்றல்விடுதூது என்ற கவிதை நூலையும் பலரது பார்வையில் கண்ணதாசன் என்ற தொகுப்பையும் வெளியிட்டவர். கலைவாணன் கண்ணதாசனின் வா அருகில் வா என்ற திரைப்படத்தில் நடித்ததுடன் உதவி இயக்குநராகவும் பணியாற்றியவர்.
அவருக்கும் அவரது பெற்றோர் சகோதரிகளுக்கும் கவிஞர் வாலி நன்கு அறிமுகமானவர்.
கண்ணதாசன், வாலி குறித்த பலசுவாரஸ்யமான தகவல்களை கவிஞர் காவ்யன் எனக்கு பல சந்தர்ப்பங்களில் சொல்லியிருக்கிறார்.
1990 ஆம் ஆண்டு சென்னையில் கோடம்பாக்கம் உமாலொட்ஜில் குடும்பத்துடன் சில வாரங்கள் தங்கியிருந்தேன். பக்கத்து அறைகளில் பேச்சுக்குரல்கள் கேட்கும். படத்தயாரிப்பாளர்கள் படத்துறை சார்ந்த கலைஞர்களின் நடமாட்டம் எப்பொழுதும் இருக்கும்.
பக்கத்து அறையில் அக்ஷன் கிங் அர்ஜூன் நடிக்கவிருந்த ஆத்தா நான் பாசாயிட்டேன் (இப்படியும் படப்பெயர்கள்) திரைக்கதைபற்றிய கலந்துரையாடல் சில நாட்கள் நடந்தன.
ஒரு நாள் மாலை மெட்டுக்கு பாட்டெழுத கவிஞர் வாலி வந்திருப்பதாக தயாரிப்பு நிருவாகி ராம்சிவா என்பவர் என்னிடம் சொன்னார்.
அருகில் நின்ற எனது குழந்தைகள், “ அப்பா…வாளி வந்திருக்கா? எதற்கு? இங்கே கிணறு இருக்கா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்கள்.
அங்கு நின்ற ஒருவர் சிரித்தவாறு, “ ஆமா…வாளிதான்… சிறிது நேரத்தில் வரும் பார்க்கலாம்.” என்றார்.
நான் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்தினேன். எனது மூன்றுவயது மகன் வாளி… வாளி… என்று சொல்லிக்கொண்டு ஓடித்திரிந்தான்.
சிறிது நேரத்தில் அந்த அறையிலிருந்து வெளிப்பட்ட கவிஞர் வாலியை காவ்யன் விக்னேஸ்வரன் எனக்கு அறிமுகப்படுத்தினார். குழந்தைகளின் அறியாப்பருவ குறும்புத்தனத்தை அவர் ரசித்தார். எனது மகனை அருகே அழைத்து அணைத்துக்கொண்டார்.
ஒரு துறவி போன்று காட்சியளித்தார். அவரது நரைத்த தாடியும் வெற்றிலை குதப்பிய சிவந்த உதடுகளும் கழுத்தில் காணப்பட்ட உருத்திராட்ச மாலையும் சிரித்த முகமும் உரையாடிய தோரணையும் எவரையும் உடன் கவர்ந்துவிடும்.
என்னையும் எழுத்தாளன் என்று காவ்யன் சொன்னதும் தோளிலே கைபோட்டு உரிமையுடன் பேசினார். என்வசம் அப்பொழுதிருந்த சோவியத் பயணக்கதை சமதர்மப்ப+ங்காவில் நூலை பெற்றுக்கொண்டார். காவியன் எங்கள் இருவரையும் படம் எடுத்தார்.
இலங்கை, அவுஸ்திரேலியா பற்றி கேட்டுத்தெரிந்துகொண்டபொழுது, தானும் பாரதியைப்போன்று பாஸ்போர்ட் இல்லாத கவிஞன்தான் என்றார்.
“ ஆனால் உங்கள் பாடல்கள் உலகெங்கும் கேட்கிறது.” என்றேன்.
“கண்ணதாசனும் விஸ்வநாதனும் சோவியத் நாட்டுக்குப்போய்வந்தார்கள். நீங்களும் போயிருக்கிறீர்கள். அவசியம் உங்கள் புத்தகத்தை படிப்பேன்.” என்றார்.
எதிர்பாராதவாறு வாலி மீண்டும் அந்த உமாலொட்ஜூக்கு மறுநாள் மாலையும் வந்தார். வாசலில் என்னைக்கண்டதும், “ நேற்றிரவே உங்கள் பயணக்கதையை முழுவதும் படித்துவிட்டேன். இறுதியாக ஒரு வசனம் எழுதியிருக்கிறீர்கள். அது என்னை மிகவும் கவர்ந்துவிட்டது” என்றார்.
“என்ன வசனம்?”
“ சோஷலிஸம் மரணத்தைப்போன்று நிச்சயமானது. என்றைக்கிருந்தாலும் வரும்”
பொதுவாகவே மனிதர்கள் சக மனிதர்களின் மேன்மையான குணங்களை பார்ப்பது அரிது. வாலியிடம் குடியிருந்த இயல்பு முன்னுதாரணமானது. கவிஞர்களில் அவர் மூத்தவர். எனினும் மேட்டிமைத்தனம் அவரை நெருங்கவில்லை. இளம்கவிஞர்களையும் ஊக்குவித்தார். அன்றைய முதல் சந்திப்பில் அவர் என்னைப்பொருட்படுத்தாமல் விட்டிருந்தால்கூட ஆச்சரியமில்லை.
ஒரு படைப்பாளியின் நூலை பெற்றுச்சென்று முழுவதும் படித்து கருத்துச்சொல்லும் அவரது பரந்த இயல்பை, அவரது மறைவுக்கு பின்னர் வெளியான பல நினைவுக்கட்டுரைகளின் ஊடாக மீட்டுருவாக்கி நினைத்துப்பார்க்கின்றேன்.
வாலி அங்குதான் வசப்படுகிறார்.
ஸ்ரீரங்கத்திலிருந்து சினிமாவில் சந்தர்ப்பம் தேடி சென்னைக்கு வந்து சிரமப்பட்ட காலத்தில், 1960 களில்
நன்கறிந்த ஜோதிர்லதா கிரிஜாவை தேடிச்சென்று அவர் சந்தித்த காட்சியை சமீபத்தில் திண்ணை இணையத்தில் படித்தேன்.
சினிமாவுக்காக அலைய வந்துள்ள வாலியை, ஜோதிர்லதா கிரிஜா அக்காலகட்டத்தில் பெரிதாக கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. எனினும் பிற்காலத்தில் ஜோதிர்லதா கிரிஜாவின் எழுத்தாற்றலை வியந்து போற்றி புகழ்ந்தார் வாலி. அத்துடன் தனது மனைவியையும் தொலைபேசி ஊடாகவே அறிமுகப்படுத்தி பேசவைத்திருக்கிறார் என்ற தகவலை அறியமுடிகிறது.
எந்தவொரு கவிஞருக்கும் படைப்பாளிக்கும் பின்னால் ஏராளமான சுவாரஸ்யமான கதைகள் இருக்கின்றன.
வாலியும் விதிவிலக்கல்ல. அவரது மறைவின் பின்னர் வெளியான தகவல்கள் அவரது இயல்புகளை ஓரளவு பதிவுசெய்துள்ளன.
இவரும் கண்ணதாசன் போன்று உயர்ந்த தரத்திலும் தாழ்ந்த தரத்திலும் தமிழ் சினிமாவின் சமரசங்களை உள்வாங்கியவாறு எழுதிய கவிஞர்தான்.
பாசமலருக்காக மலர்ந்தும் மலராத… எழுதிய கண்ணதாசன்தான் பணமா பாசமாவுக்காக எலந்தைப்பழம் செக்கச்சிவந்த பழம் எழுதினார்.
மாதவிப்பொன்மயிலால் தோகை விரித்தாள கடவுள்தந்த இருமலர்கள் உட்பட பல இலக்கிய நயம்மிக்க பாடல்களை எழுதிய வாலிதான் முக்காலா முக்காபுலூ என்ற பொருளற்ற பாடலும் எழுதினார்.
அத்தை மடி மெத்தையடி பாடலைப்பற்றியும் ஒரு பின்னணிக் கதை இருக்கிறது.
ஒரு ஸ்ரூடியோவில் கற்பகம் படத்திற்காக இயக்குநர் கோபாலகிருஷ்ணன் காட்சிப்பின்னணியை விளக்கி பாடல் எழுதித்தருமாறு சொன்னபொழுது, வாலி எழுதத்தொடங்கினார்.
அத்தை மடி மெத்தையடி… ஆடி விளையாடம்மா… ஆடும் வரை ஆடிவிட்டு அள்ளிவிழி மூடம்மா… மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி முல்லை மல்லிகை மெத்தையிட்டு தேன் குயில்கூட்டம் பண்பாடும் என்று எழுதிக்கொண்டிருந்த வாலி, அடுத்து என்ன எழுதுவது? என்று நீண்ட நேரம் யோசித்துக்கொண்டிருக்கிறார்
அடுத்த வரி வரவில்லை. அந்தப்பக்கமாக கவியரசு கண்ணதாசன் வந்திருக்கிறார். பாடலின் வரிகளைச்சொல்லிவிட்டு அடுத்த வரிதான் வருவதற்கு சிரமப்படுகிறது அண்ணே என்றார் வாலி.
தேன் குயில் கூட்டம் பண்பாடும் இந்த மான் குட்டி கேட்டு கண்மூடும் என்று எழுதப்பா என்று சொல்லிவிட்டு கண்ணதாசன் அகன்றாராம்.
இவ்வாறு இரண்டு கவிஞர்களும் அந்நியோன்யமாகவே நட்புறவு பராட்டியிருக்கிறார்கள். அதனால்தான் சில வாலியின் பாடல்களை கண்ணதாசன் எழுதியது என்றும் சிலர் நம்புகிறார்கள். ஆனால் அதில் கிஞ்சித்தும் உண்மையில்லை.
உயர்ந்த மனிதன் படத்தில் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே,,டையிடையே வசனங்களும் வரும். சிவாஜிக்காக ரி. எம். சவுந்தரராஜன் பாடுவார். வசனங்களை மேஜர் சுந்தரராஜன் லயத்துடன் சொல்வார். கண்ணதாசன்தான் எழுதியிருப்பார் என சிலர் நம்பினார்கள். ஆனால் அந்தப்படத்தின் அனைத்துப்பாடல்களையும் இயற்றியவர் வாலிதான்.
தமது மறைவுக்கு சில மாதங்களுக்கு முன்னர் ஒரு மேடையில் வாலி பேசும்பொழுது, “இயக்குநர் சங்கர், தரமான பாடல்களையெல்லாம் வைரமுத்துவுக்கு கொடுத்துவிட்டு, சிக்குப்புக்கு ரயிலே முக்காலா முக்காபுலா போன்ற பொருளற்ற பாடல்களை எழுதும் சந்தர்ப்பங்களைத்தான் எனக்குத்தருகிறார். பொருளில்லாத காலத்தில் பொருள் பொதிந்த பாடல்கள் எழுதினேன். பொருள் நிரம்பிய காலத்தில் பொருளற்ற பாடல்கள் எழுதினேன் – என்று தன்னைத்தானே சுயவிமர்சனம் செய்துகொண்டார்.
ஆரம்பத்தில் இந்தப்பத்தியில் குறிப்பிட்டவாறு கவிஞர் வாலியும் கண்ணதாசன் போன்று மேடைகளில் உணர்ச்சிகரமாக அவசரப்பட்டு வார்த்தைகளை உதிர்த்தவர்தான்.
கலைஞர் கருணாநிதியை பாராட்டி கவியரங்கப்பாடல் பாடியபொழுது, எதிர் அணியிலிருந்த வைக்கோவை வைக்கோல் என்றும் வர்ணித்தார். ஆனால் வைக்கோ, வாலி மறைந்த செய்தி கேட்டதும் ஓடோடிவந்து அஞ்சலி செலுத்தினார்.
இன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா நடித்த பல படங்களுக்கு வாலி பாடல்கள் இயற்றியிருக்கிறார். வாலி, கலைஞருக்கு நெருக்கமானவர் என்ற காரணத்தினாலேயே ஜெயலலிதா அஞ்சலி செலுத்துவதற்கு வரவேயில்லை.
ஜெயலலிதாவின் ஓய்வுப்பிரதேசம் கொடநாடு பற்றியும் வாலி எங்கோ எள்ளலுடன் பாடியிருக்கிறார் என்றும் காரணம் கூறப்பட்டது.
பாரதநாட்டின் எல்லைக்கு அப்பால் என்றைக்குமே செல்லாத இந்தக்கவிஞரின் பல பாடல்களுக்கான காட்சிகள் வெளிநாடுகளில் எடுக்கப்பட்டுள்ளன.
தென்னிலங்கை மங்கை பாடலும் அத்தகையதே.
எம்.ஜீ.ஆர் உட்பட பல நடிகர் நடிகைகளுக்காகவும் பாடல் இயற்றினார். விடுதலைப்புலித்தலைவர் பிரபாகரனுக்காகவும் அவரது தாயார் பார்வதி அம்மாவுக்காகவும் பாடல் இயற்றினார்.
தமிழ்சினிமாவின் ஏற்ற தாழ்வுகளை நன்கு தெரிந்துவைத்திருந்த வாலி, தியாகராஜபாகவதர், சந்திரபாபு, சாவித்திரி ஆகியோரின் அந்திமகால நிலை பற்றியும் தனது குறிப்புகளில் பதிந்துள்ளார்.
கால் நூற்றாண்டுக்கு முன்னர் வாலி ஆனந்தவிகடனில் எழுதியிருப்பதுபோன்று, பிறப்பின் சிறப்பு பிறப்பில் தெரியாதுதான். இறப்பில் தெரியும் உலகம் வடிக்கும் கண்ணீரில் புரியும்.
நேரம் கிடைத்தபோதெல்லாம் நிறைய வாசித்தார். இராமாயணம். மகா பாரதம் முதலான இதிகாசங்கள் குறித்தும் எழுதினார். மேட்டிமைக்குணமற்ற வாலி, இளம்கவிஞர்கள் புதிய பாடலாசிரியர்களுடன் உதட்டால் உறவாடாமல் உள்ளத்தால் பழகினார்.
அவர் தேடிப்பெற்றது ஞானம், தேடாமல் பெற்றது யோகம்.
—-0—