இலங்கையில் வாழும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் என்பது வட கிழக்கு மக்களின் உரிமையாகக் குறுக்கப்பட்டு மலையக மற்றும் இஸ்லாமியத் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர். பின்னதாக வடக்கு மக்களின் உரிமைக்கான போராட்டம் என மட்டுப்படுத்தப்பட்டது. இன்று யாழ்ப்பாணம் என்ற எல்லைக்கு அப்பால் உரிமைக் குரல்கள் செல்வதில்லை.
இலங்கைப் பேரினவாத அரசின் திட்டட்ட செயற்பாட்டிற்குக் கிடைத்த பெரும் வெற்றியாகவே இது கருதப்படுகின்றது. யாழ்ப்பாணத்தின் எல்லைக்குள் மட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முரண்பாடுகளுக்குள் குறுகிப் போன தமிழ்த் தேசிய அரசியல் மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சனைகளைக்கூடப் பேசுவதில்லை.
புலிகளின் காலத்தில் வட – கிழக்கு பிரதேசங்களுக்கு வெளியில் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு அப்பால்பட்ட பிரச்சனைகளௌயே பேசிப்பழகிப்போன அரசியல்வாதிகள் தமது வழமையைத் தொடர்கின்றனர். போர்க்குற்ற விசாரணை, ஐ.நா, கனிமொழி, அமெரிக்கா போன்ற சர்வதேச அரசியலைப் பேசும் தமிழ் தேசிய வாக்கு வேட்டைக் கட்சிகள் தமது காலடியில் நடக்கும் அழிப்புக் குறித்து சிந்திப்பது கூடக் கிடையாது.
சுன்னாகமும் அது சார்ந்த பிரதேசத்திலும் திட்டமிட்டு நஞ்சாக்கப்பட்ட நிலத்தடி நீர் தொடர்பாக வட மாகாண சபை கருத்துக் கூறுவதைக் கூட நிறுத்திவிட்டது. மக்களின் அழுத்தங்கள் அதிகரித்தால் மீண்டும் ஒரு அதிரடித் தீர்மனத்தை நிறைவேற்றிவிட்டு பேரினவாத அரசின் திட்டமிட்ட அழிப்பிற்குத் துணை செல்வார்கள்.
சுன்னாகத்தில் ஆரம்பித்த நிலக்கீழ் நஞ்சு நீர் இன்று திருநெல்வேலி வரை பரவியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தை மக்கள் வாழ்வதற்கு உதவாத கட்டந்தரையாக மாற்றுவதே அதிகாரவர்க்கத்தின் திட்டமா எனச் சந்தேகங்கள் எழுகின்றன.
முப்பதாயிரம் போராளிகளை மண்ணுக்கு உரமாக்கிய மண் கொடிய நச்சுப் பதார்த்தங்களின் உறைவிடமாகிறது. அதுவும் விக்னேஸ்வரனின் காலடியில்.
சுன்னாகத்தில் இறங்கிய சித்திரகுப்தன் திருனெல்வேலி வரை ஊர்ந்து செல்லும் போது இந்துத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் விக்னேஸ்வரன் மூச்சின்றி வாழாவிருப்பது ஏன்?