மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலய சூழலில் மாந்தைசந்திக்கு அருகில் கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியைத் தோண்டும் பணிகள் எட்டாவது தடவையாக வியாழனன்று மேற்கொள்ளப்பட்டபோது மேலும் நான்கு மண்டையோடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அனுராதபுரம் விசேட சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் தனஞ்ஜய வைத்தியரத்ன செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்டவை தவிர்த்து, ஏற்கெனவே இருபத்தேழு மனித உடல்களுக்குரிய பாகங்கள் இதுவரை இந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
“இருப்பினும் அந்த எண்ணிக்கை சரியானதா என்பது தெரியவில்லை. ஏனெனில் இந்த மனித புதைகுழி முழுமையாகத் தோண்டி முடிக்கப்படுவதற்கு முன்னர் சரியான எண்ணிக்கை குறித்த தகவல்களை என்னால் கூற முடியாது. புதைகுழியைத் தோண்டும் பணிகள் நாளையும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். திருக்கேதீஸ்வரம் ஆலயத் திருவிழாவுக்கு முன்னர் இந்தப் பணிகளை முடித்து, இந்த வீதியைப் பயன்படுத்துவதற்காகக் கொடுப்பதற்கு நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றோம்” என்றார் மருத்துவர் தனஞ்ஜய வைத்தியரத்ன. மன்னர் தமிழ் மண்ணில் பேரினவாதிகள் நடத்திய வெறியாட்டத்தில் கொல்லப்பட்ட மனிதர்களின் எலும்புக்கூடுகளே இவை. கொலை செய்துவிட்டு நாமே கொன்றோம் என மார்தட்டிக்கொள்ளும் இலங்கை பாசிஸ்டுக்களையும் பேரினவாததையும் புதைகுழிகளுக்கு அனுப்பும் அரசியல் உருவாக்கப்பட வேண்டும்.
வியாழக்கிழமை -16.01.2014- மதியம் 1.30 மணிவரை புதை குழி தோண்டும் பணி இடம் பெற்றது.மீண்டும் நாளை வெள்ளிக்கிழமை புதை குழி தோண்டும் பணி இடம் பெறவுள்ளது.