கண்ணுக்கெட்டிய தூரம் வரை தனக்கு எதிரிகளே இல்லை என்றார் ஜெயலலிதா அதிமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா அப்படிப் பேசிய போது அதிமுக வரலாறு காணாத வெற்றியை ஈட்டியிருந்தது.
90-க்கும் அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களோடு திமுக சார்பில் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் ஆன போதும் இவர் எப்படி திமுகவை வழிநடத்திச் செல்வார் என்ற கேள்விகளே அரசியல் அரங்கில் விவாதிக்கப்பட்டன.
தத்தி, எழுதி வைத்து வாசிக்கிறவர், ஜாதகம் சரியில்லை, கட்டம் சரியில்லை என்று பாஜக, அதிமுக, நாம் தமிழர் போன்ற கட்சிகள் ஸ்டாலினை கடந்த பல ஆண்டுகளாக மட்டம் தட்டி வந்தனர். பாஜக ஆதரவு ஊடகங்களோ ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்குப் பின்னர் தமிழ்நாடு அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு விட்டதாக பிரச்சாரம் செய்து வந்தது.
2019 நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியைத் தவிற அத்தனை தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றது. முதன் முதலாக கருணாநிதி இல்லாமல் ஸ்டாலின் தலைமையில் திமுக சந்தித்த தேர்தல் அது. ஆனாலும் அந்த வெற்றி குறித்து மவுனமே சாதித்தனர்.
2021 சட்டமன்ற தேர்தலில் வென்று ஆளும் கட்சியாகி முதல்வரும் ஆகி விட்டார் ஸ்டாலின். முன்னர் அவர் மீது வீசப்பட்ட வசவுகளை பொய்யாக்கி அனைத்து மக்களும் பாராட்டும் வகையில் ஆட்சி நடத்தியதன் விளைவு உள்ளாட்சி தேர்தலில் 99 சதவிகித இடங்களை திமுக பெற்றுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சி வெல்லும் என்பது தெரிந்ததுதான் ஆனால் எதிர்க்கட்சிகள் இப்படி ஒரு தோல்வியை சந்தித்ததில்லை. திமுகவை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் என எந்தக் கட்சியும் நெருங்க முடியாத அளவுக்கு இந்த வெற்றி அமைந்துள்ளது.
இப்போதிருக்கும் நற்பெயரை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எப்படி தக்க வைத்துக் கொள்ளப் போகிறார் ஸ்டாலின் என்பதே இப்போது அவருக்கு முன்னாள் உள்ள சவால் ஆகும்.