தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அடுத்தடுத்து வரும் கருத்துக்கணிப்புகள் திமுக கூட்டணியின் வெற்றியை உறுதி செய்திருக்கிறது.
பிரபல வட இந்திய ஊடகமான டௌம்ஸ் நௌவ்- சி வோட்டர்ஸ் நிறுவனம் இணைந்து கடந்த மூன்று மாதங்களாக தமிழகத்தில் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளன.
அதில் திமுக கூட்டணி 177 இடங்களில் வெற்றி பெறும் என்றும், அதிமுக கூட்டணி 49 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்றும் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஸ்டாலின் முதல்வராக 43.1 சதவிகிதம் பேர் ஆதரவளித்துள்ளனர்.பழனிசாமி முதல்வராக 29.7 சதவிகிதம் பேர் ஆதரவளித்துள்ளனர்.
கமலின் மய்யம் கட்சி மூன்று தொகுதிகளில் வெல்லும் என்றும் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மூன்று தொகுதிகளில் வெல்லும் என்றும் இந்த கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தின் யார் ஆட்சியமைப்பார்கள் என்பதை கொங்கு மண்டலமே தீர்மானிக்கும் இந்த பகுதியில் மட்டும் மொத்தம் 52 தொகுதிகள் வருகின்றன.இதில் 38 தொகுதிகளை திமுக கைப்பற்றும் என்றும் 12 தொகுதிகள் அதிமுக கூட்டணிக்கு என்றும் 2 தொகுதிகள் இதர கட்சிகளுக்கு என்றும் தெரிவிக்கிறது.
அதே போன்ற காவிரி டெல்டா மண்டலத்தில் 31 தொகுதிகளில் திமுகவும் 9 இடங்களில் அதிமுகவும் வெல்லும் என்கிறது அந்த கருத்துக்கணிப்பு.தென் மாவட்டங்களில் திமுக 42 இடங்களிலும் அதிமுக கூட்டணி 13 இடங்களிலும் வெல்லும் என்கிறது கருத்துக்கணிப்பு. டாக்டர் ராமதாஸின் வன்னியர் வாக்கு வங்கி அதிகம் உள்ள வட மாவட்டங்களில் திமுக கூட்டணி 37 இடங்களில் பிரமாண்ட வெற்றி பெறும் என்றும் 7 இடங்களில் அதிமுக கூட்டணி வெல்லும் என்றும் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
கேரளம், தமிழகம், மேற்குவங்கம் என தேர்தல் நடைபெறும் முக்கியமான மூன்று மாநிலங்களிலும் பாஜக படு தோல்வியடையும் என்று கருத்துக்கணிப்பு தெரிவித்தாலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பாஜக கூட்டணியில் உள்ள என்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் என்கிறது முடிவுகள்.