இன்று மோடியில் காலடிகளில் விழுந்து கிடக்கும் எடப்பாடி பழனிசாமி கூட தான் சசிகலாவிடம் பதவி பெற்று பதவியேற்கும் வரை பாஜகவை எதிர்த்தவர்தான்.இப்போது, SDPI கட்சி தினகரனுடன் கூட்டணி வைத்து 6 தொகுதிகளைப் பெற்று விட்டு அதற்கு ஒரு விளக்கமும் கொடுத்திருக்கிறது. “தினகரனும் பாஜகவை எதிர்க்கிறார் அதனால் தினகரனுடன் கூட்டு வைத்தோம்” என்கிறார். இல்லை இல்லவே இல்லை.
தினகரன் தமிழகத்தின் சிராக் பாஸ்வான் . அவர் எப்படி தலித் மக்கள் வாக்குகளை நிதிஷ்குமாருக்கும், தேஜஸ்விக்கும் செல்ல விடாமல் தடுத்தாரோ அதே போன்று இஸ்லாமிய வாக்குகள் திமுக கூட்டணிக்குச் செல்லவிடாமல் தடுக்கும் முயற்சியே ஓவைசி, எஸ்.டி.பி.ஐ கூட்டணி. ஓவைசி பாஜகவை எதிர்க்கும் எவருடனும் இணைய மாட்டார். தனித்து நிற்பார் இந்தியாவின் எந்த மாநிலத்திலாவது ஒரு முஸ்லீம் தலைவர் தனித்து நின்று முதல்வராக முடியுமா? முடியாது முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும். ஆனாலும் தனித்து நிற்பார்கள். அது பாஜகவுக்கு சாதகமாக முடியும். அப்படி முடிந்தது பிகார் தேர்தல். இதை முன்பே முகநூலில் எழுதியும் இருக்கிறேன்.
சரி தினகரன் விவகாரத்திற்கு வருவோம். ஜெயலலிதா மறைந்த பிறகு இரு விழாக்கள் முக்கியமாக நடக்கிறது. ஒன்று துக்ளக் ஆண்டு விழா. இன்னொன்று சசிகலா நடராசன் தலைமையில் நடந்த பொங்கல் விழா. நிஜமாகவே இந்த இரு விழாக்களும் தமிழக வரலாற்றில் முக்கியமானவை. குருமூர்த்தி சசிகலா குடும்பத்தை இல்லாமல் ஆக்குவேன் என்றார். நடரசான் ஒரு திராவிடப் போராளி போல கொந்தளித்தார்.
பின்னர் எடப்பாடியே போய் பாஜகவோடு செட்டில் ஆனால். சசிகலா விடுதலையாக வேண்டும் என்ற சூழல் வந்த போது விட மாட்டார்களோ என்ற சூழல் உருவானது. விடுதலைக்கு சில மாதங்கள் முன்னால் வரை பல்லாயிரம் கோடி அளவுக்கான சசிகலாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. பின்னர்தான் தினகரன் சைலண்ட் ஆனார்.
டெல்லியில் பாஜகவுக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்தது. எப்படி பாஜக ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரையும் பாஜக இணைத்ததோ அதே போன்று அமமுகவையும் அதிமுகவையும் இணைக்க பேச்சுவார்த்தை நடந்தது. இதை நான் சொல்லவில்லை அமமுக ஆதரவு ஊடகவியலாளர்களே தொலைக்காட்சி விவாதங்களில் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகச் சொன்னார்கள்.
அதன் அடிப்படையில்தான் தொந்தரவுகள் எதுவும் இன்றி சசிகலா விடுதலையானார். ஆனால், அந்த இணைப்புக்கு எடப்பாடி சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பொது எதிரி திமுக அதை வீழ்த்த நாம் இணைய வேண்டும் என பச்சையாக பிச்சை எடுத்தார்கள் சசிகலாவும், தினகரனும் அதற்கெல்லாம் அசைந்து கொடுக்கவில்லை எடப்பாடி. சிறையில் இருந்து வந்த சசிகலா “தமிழ் பண்பாட்டை சிதைத்தவர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளார்கள் என முதலில் அதிமுகவைத்தான் விமர்சித்தார். ஆனால், என்ன நடந்ததோ அவரது அந்த பயணத்திலேயே அவர் பேச வேண்டியதை எழுதிக் கொடுத்தார்கள். அதில், அன்புக்கு நானடிமை, தமிழ்பண்புக்கு நானடிமை என்று பள்ளிச் சிறுவர்கள் பேச்சுப் போட்டியில் பேசுவது போல இருந்தது.
ஜெயலலிதா நினைவு நாளில் சசிகலாவே பொது எதிரி திமுக என்றார் எதுவும் நடக்கவில்லை. பின்னர் பாஜகவினர் நேரடியாகவே பேசி அவரை ஒதுங்கியிருக்குமாறு சொன்னதால் அரசியலை விட்டே ஒதுங்கி விட்டார். தினகரனைப் பொருத்தவரை எடப்பாடியோடு மோதிக் கொள்ளுங்கள். பாஜக போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் நீங்கள் பெரிதாக கவனம் செலுத்த வேண்டாம் என்று கோரிக்கையும் வைத்திருக்கிறார்கள். என்ன செய்கிறார் பார்ப்போம்.
தேர்தல் சின்னங்களுக்காக அலைக்கழிக்கப்பட்ட தினகரனுக்கு இம்முறை குக்கர் சிரமம் எதுவும் இல்லாமல் கிடைக்கவும் இதுவே காரணம் என்கிறார்கள்.
கடந்த பல மாதங்களாக தினகரன் பாஜக பற்றி சைலண்ட் மோடில் இருக்க்கிறார். மென்மையாக பாஜக பற்றி பேசாமல் அரசு திட்டங்கள் பற்றி மட்டும் பேசுகிறார்.
பாசிச எதிர்ப்பு என்பது அரசியல் ரீதியாக திவீரமான ஒரு நடவடிக்கை. உலகம் முழுக்க பாசிச எதிர்ப்பை முன் வைத்த அணிகள் அதை மூர்ககமாகவே முன்னெடுத்தன. தமிழகத்தில் தேர்தல் அரசியலில் பாசிசம் அதிமுக மூலம் வர முனையும் போது நாம் முன்னரங்களில் எதிரியாக அதிமுகவைத்தான் வைக்க வேண்டும்.
ஆனால் தினகரனோ பொது எதிரி திமுக என்கிறார். பாஜக பற்றி அமைதி காக்கிறார். எஸ்.டி.பி.ஐ போன்ற கட்சிகள் பாசிச எதிர்ப்பை கடந்த பல ஆண்டுகளாக முன் வைக்கும் கட்சிகளுன் எப்போதும் இணைந்து நிற்காமல் தேர்தல் வந்ததும் தினகரனுடன் இணைந்து விட்டு அவர் பாஜகவை எதிர்க்கிறார் என்பது ஏமாற்று வேலை.
இந்த தேர்தல் இரு கோட்பாடுகளுக்கு இடையில் நடக்கும் யுத்தம் இதில் சிறுபான்மை மக்களை எவரும் ஏமாற்றுவதை அனுமதிக்க முடியாது!