தோழர் தா.பா.வின் மறைவு முக்கியமான நேரத்தில் நிகழ்ந்த பேரிழப்பாகவே கருத முடியும். எஞ்சிய வாழ்நாளை இந்துத்துவ ஃபாசிசத்துக்கெதிரான போராட்டத்தில் கழிக்க விரும்புவதாக அவர் சொல்லி இருந்தது முக்கியமானது. இந்தியச் சமூக ஆய்வு மற்றும் திசைவழி தொடர்பாகவும், வலது, இடது பாதைகள், முதலாளித்துவ ஜனநாயக மற்றும் ஆளும்வர்க்கக் கட்சிகள் குறித்த வரையறுப்புகள், நட்பு சக்தி, பகை சக்தி பற்றிய தீர்மானங்கள் என ஒரு கம்யூனிஸ்ட் முரண்பட சாத்தியமுள்ள பல்வேறு விசயங்கள் இருக்கும் போதிலும் ‘எது ஃபாசிசம்?’ என்பதிலும், அது தொடர்பான நிலைப்பாட்டிலும் ஒரு கோட்பாட்டு புரிதல் என்பது ஒரு கம்யூனிஸ்டுக்கு மிக அவசியம். அதனை அவரது அந்திம காலத்தில் கொண்டிருந்தது சிறப்பு.
தா.பா.வின் கடந்தகால நிலைப்பாடுகள் அனைத்தும் ஏற்புடையதல்ல. ஒரு காலகட்டத்தில் துக்ளக் இதழில் அவரது பத்தி எழுத்துகள் வெளிவந்து கொண்டிருந்தன. அனேகமாக துக்ளக்கில் எழுதிய ஒரே கம்யூனிஸ்ட் தா.பா.வாக தான் இருப்பார். அந்தளவுக்கு அவரது கம்யூனிசத் தன்மை வலதுசாரியமாக கரைந்திருந்தது. அந்த சரிவிலிருந்து 2000–ஆம் வாக்கில் அவர் மீண்டார். மறுபடியும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகி வெகு சீக்கிரத்தில் தமிழ் மாநிலக் குழுவின் செயலாளர் ஆனார்.
காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த நேரம். அதன் தவறுகளை விமர்சிக்க வேண்டிய கட்டாயம் ஒரு கட்டத்தில் ஏற்பட்டது. அது காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத அதிமுகவை ஆதரிப்பதில் போய் நின்றது. ஜெயலலிதா மதிக்கவில்லை என்ற நிலையிலும் 2011–ஆம் ஆண்டு தேமுதிகவை அதிமுக கூட்டணியில் இணைப்பதில் தா.பா தனது தனிப்பட்ட செல்வாக்கை காட்டினார். அது தமிழகத்துக்கு எவ்வளவு பெரிய பாதகமாக அமைந்தது என்பது இன்றளவும் அந்த பாரத்தை தமிழகம் இறக்கி வைக்க சிரமப்படுவதில் ஒருவர் உணரலாம்.
2011 – இல் ஜெயலலிதா மதிக்காத நிலையில் தனிக்கூட்டணி அமைத்திருந்தால் தேமுதிக கூட்டணியில் சில தொகுதிகள் வெற்றி பெற்று ஒரு வரலாற்றுப் பிழையிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சி காப்பாற்றப்பட்ட பெருமை ஏற்பட்டிருக்கும். விஜயகாந்துக்கு அப்போது கொஞ்சம் மக்கள் செல்வாக்கும் இருந்தது. எதிர்பார்த்ததை போல ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த உடனே தான்தோன்றித்தனமாக செயல்பட ஆரம்பித்தார். ‘ பால் விலையை ஏற்றி இருக்கிறேன்; பேருந்து கட்டணத்தை உயர்த்தி உள்ளேன். ஆனாலும் சங்கரன்கோவிலில் வெற்றி பெற்றுக் காட்டுகிறேன்’ என்று பாசிஸ்ட்களுக்கே உரிய தொனியில் அறிவித்தார். எந்த பெரிய போராட்டத்தையும் அவர் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி நடத்தவில்லை.
ஜெயலலிதாவை அம்பலப்படுத்த வேண்டிய ஒட்டுமொத்த கம்யூனிஸ்ட் பாரத்தையும் மகஇக போன்ற அமைப்புகள் தான் தோளில் போட்டுக் கொண்டன. தா.பா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் வரை ஜெயலலிதா அதிமுகவின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் வரை இரண்டு கட்சிகளும் முரண்படாது என்ற எண்ணம் ஏற்பட்டது. தா.பாவின் 80–வது பிறந்த நாளின் போது ஜெயலலிதா நேரில் வாழ்த்தினார். ஜெயா மறைந்த சோகத்தில் இருந்த சசிகலாவை சந்தித்த போது தா.பாவின் சிவப்புத் துண்டு தோளில் இருந்து இறங்கி கைகளில் தொங்கிக் கொண்டிருந்தது.
2008–ஆம் ஆண்டில் ஈழப் போரின் பாதிப்புகளை தமிழகம் உணர்ந்து கொள்ள அவர் தலைமையிலான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் பயன்பட்டது என்றால் மிகையில்லை. இந்த பிரச்சினையை கம்யூனிஸ்ட்கள் தொட்டு விட்டார்கள். அது வெற்றி முகாந்திரத்துக்கு எடுத்துக்காட்டு என்று தமிழ் அமைப்புகள் பலவும் வாழ்த்தின. அவருடைய நூல்களில் சே குவேரா பற்றியது மட்டும் வாசித்துள்ளேன். அவருடைய ‘பொதுவுடமையரின் எதிர்காலம்’ என்ற தலைப்பு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தேக்கம் மற்றும் பிரச்சினைகள் பற்றிய அவரது அக்கறையை வெளிப்படுத்துவதாக உணரலாம். தோழர் தா.பா.வுக்கு அஞ்சலி.