05.04.2009.
.
ஸ்வாட் பள்ளத்தாக்குப் பகுதி தாலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் தற்போது உள்ளது. சமீபத்தில் பாகிஸ்தான் அரசுடன் தாலிபான்கள் செய்து கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி தற்போது இங்கு ஷாரியா சட்ட திட்டங்கள் அமலில் உள்ளது.
இந்நிலையில், பாலியல் குற்றச்சாற்றுக்கு இளம்பெண் ஒருவரை தெருவில் இழுந்து வநத தாலிபான்கள் அவரை 34 முறை பிரம்பால் அடித்தனர். இரண்டு தாலிபான்கள் இளம் பெண்ணை தரையில் அழுத்திப் பிடித்திருக்க, மற்றொரு தாலிபான் அவரை பிரம்பால் அடித்தார்.
வலி தாங்க முடியாமல் அந்தப் பெண் கதறி அழுததை அவரது உறவினர்களும், பொதுமக்களும் சுற்றி நின்று வேடிக்கை மட்டுமே பார்த்தனர். தாக்குதலுக்கு உள்ளான பெண்ணுக்கு உதவ யாரும் முன்வரவில்லை.
இளம் பெண்ணுக்கு வழங்கிய தண்டனை செல்போன் மூலம் வீடியோ படம் எடுத்து அந்த பகுதியில் தாலிபான்கள் வினியோகித்ததாகவும், பெண்கள் தவறு செய்தால் இதுபோன்ற கடும் தண்டனை கிடைக்கும் என்று எச்சரித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வீடியோ காட்சி உலகம் முழுவதும் பல்வேறு தொலைக்காட்சிகளில் வெளியானதைத் தொடர்ந்து தாலிபான்களுக்கு எதிரான அலை வீசத் துவங்கியுள்ளது. இதையடுத்து இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு அதிபர் சர்தாரி உத்தரவிட்டுள்ளார்.
தாலிபான்களின் இந்த காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையால் பாகிஸ்தான் மக்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சர்தாரி கண்டனம் தெரிவித்ததாக அவரது பேச்சாளர் ஃபர்ஹத்துல்லா பாபர் கூறியுள்ளார்.