தமிழ் சிவில் சமூகம் என்ற கோதாவில் ‘கூட்டமைப்பிற்கான பகிரங்க விண்ணப்பம்’ என்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில அம்சங்கள் தொடர்பாக புளொட்டின் நிலைப்பாட்டை மக்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.
புதுடில்லியில் கடந்த ஆகஸ்ட் 23ம், 24ம் திகதிகளில் இந்திய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து தமிழ் கட்சிகள் மாநாட்டில் தேசியம், சுயநிர்ணயம் என்ற வார்த்தைப் பிரயோகங்கள் உள்ளடங்கிய தீர்மானத்தை புளொட் அமைப்பு எதிர்த்ததாக தமிழ் சிவில் சமூகம் தமது விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளது. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவலாகும் என்பதை நாம் தெரியப்படுத்துகின்றோம். அந்த மாநாட்டில் இந்திய பாராளுமன்றத்திற்கு பொதுவாக சமர்ப்பிக்கவென மாநாட்டில் பங்குபற்றும் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக தீர்மானமொன்றை இயற்றித் தருமாறு சுதர்சன நாச்சியப்பன் அவர்களால் கோரப்பட்டது.
அதற்கமைய அனைத்து கட்சிகளின் கருத்தை உள்வாங்கி தீர்வொன்றை வரையும் பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடமும், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடமும் விடப்பட்டது. அதன்படி வரையப்பட்ட தீர்மானம் சுதர்சன நாச்சியப்பனால் பரிசீலிக்கப்பட்டபோது, தமது பாராளுமன்றத்திற்கு கொண்டு செல்லக்கூடியவகையில் தீர்மானத்தில் உள்ள ‘சுயநிர்ணயம்’ என்கின்ற பதத்தை மாத்திரம் மாற்றித் தருமாறு அவர் கேட்டிருந்தார். அதனையடுத்து கட்சிகளுக்கிடையில் வாத, பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இதன்போது புளொட் அமைப்பினராகிய நாம் இம் மாநாட்டிற்கு தனிக் கட்சியாக எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டு பங்குபற்றியிருந்தாலும்கூட நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டு வருவதன் அடிப்படையில் இவ்விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டையே நாமும் கொண்டிருப்போமென எமது பிரதிநிதிகளால் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரிடம் அக்கூட்டத்தில் பகிரங்கமாகவே கூறப்பட்டது.
இறுதியில் அனைத்துக் கட்சிகளும் ஒரு பொது நிலைப்பாட்டிற்கு வர முடியாமற்போன காரணத்தினால் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான பொது தீர்மானமொன்றை சுதர்சன நாச்சியப்பனிடம் கையளிக்க முடியாமல்போனது. இதற்கு புளொட் அமைப்பு எவ்வகையிலும் பொறுப்பாகாது என்பதை பகிரங்கமாக தெரியப்படுத்துகிறோம்.
தேசியம், சுயநிர்ணயம் ஆகியவற்றை முன்னிறுத்தியே எமது அமைப்பு 70களின் கடைக்கூறுகளில் உருவாக்கப்பட்டது. சுயநிர்ணயம், தேசியம் என்கின்ற சொல்லாடல்கள் எமக்கு புதியனவையும் அல்ல, வேறு எவரேனும் கூறி அதன் அர்த்தம் தெரிந்துகொள்ள வேண்டியவையும் அல்ல.
தவிரவும் தமிழ் இனத்தின் தேசியம், சுயநிர்ணயம் தொடர்பாக எம்மிடம் எந்தவித விட்டுக்கொடுப்புகளோ அல்லது மாற்றுக் கருத்துக்களோ ஒருபோதும் இருந்ததில்லை. மாறாக இவையே எமது அடிப்படைத் தீர்வுக்கான மூலோபாயமாக கருதி நாங்கள் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றோம்.
இந்த நிலைப்பாட்டையே 1985ல் நடந்த திம்பு பேச்சுவார்த்தை, 2009 நவம்பரில் சூரிச்சில் நடைபெற்ற அனைத்து சிறுபான்மை இனக் கட்சிகளின் மாநாடு, உள்ளிட்ட தீர்வு தொடர்பான அனைத்து கலந்துரையாடல்களிலும் கொண்டிருக்கின்றோம் என்பதை தீர்க்கமாக கூற விரும்புகின்றோம்.
மேலும் தமிழ் சிவில் சமூகம் என கையெழுத்திட்டுள்ள எவரேனும் புதுடில்லி மாநாட்டில் பங்கேற்றவர்களல்லர். அத்துடன் புதுடில்லியில் நடந்தவை பற்றி எமது அமைப்பிடம் எந்த சந்தர்ப்பத்திலும் கருத்து கேட்டவர்களுமல்லர். இந்நிலையில் தான்தோன்றித்தனமாகவோ அல்லது சிலரின் தூண்டுதலாலோ எமது அமைப்பின் நிலைப்பாடு தொடர்பாக தவறான கருத்துகள் குறிப்பிடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். நிகழ்வுகளை திரிவுபடுத்தும் இவ்வாறான செயற்பாடுகளை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
மேலும், தமிழ் மக்களின் ஒற்றுமை ஒன்றே விடிவை நோக்கிய பயணத்தை பலப்படுத்தும் என்ற நம்பிக்கையுடனேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நாம் இணைந்து செயற்பட்டு வருகின்றோம்.
இன்றைய காலகட்டத்தில் தமிழ்க் கட்சிகள் அனைத்துமே தீர்வு விடயத்தில் ஒன்றுபட்டு ஒருமித்த கருத்துடன் செயற்படும்போது மட்டுமே தேசியம், சுயநிர்ணயம் என்பவை சாத்தியப்பாடுள்ளவையாகும். இதனை மனதிலிருத்தி பொது அமைப்புக்களும் புத்திஜீவிகளும் மதத் தலைவர்களும் அனைத்து தமிழ்க் கட்சிகளையும் ஒன்றுபடுத்த முயல வேண்டுமேயொழிய தற்போது காணப்படுகின்ற ஒற்றுமையினை பலவீனப்படுத்தும் வகையிலான கருத்துக்களை வெளிப்படுத்துவது அனைத்து வகையிலும் நலிந்து போயுள்ள எமது தமிழ்ச் சமூகத்திற்கு எந்தவகையிலும் உதவிசெய்யாது என்பதை வலியுறுத்துகின்றோம்.