ஈழத் தமிழர்களின் ஒரே தேவையான “தனித் தமிழ் ஈழம்’ கிடைக்கும் வகையில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று கூறியுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழீழ விடுதலைக்கான போரில் பலியான ஈழத் தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னையில் மே 28ஆம் தேதி அமைதிப் பேரணி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னை வேளச்சேரியில் உள்ள தாய்மண் அறக்கட்டளை அரங்கில் வியாழக்கிழமை (நேற்று) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற தமிழீழ விடுதலைக்கான போரில் வீரமரணம் அடைந்த படைத்தளபதிகள், போராளிகள் மற்றும் களப்பலியான ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு வீர வணக்கம்.
இலங்கை அரசு மேற்கொண்ட தமிழின அழிப்பு நடவடிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது. இலங்கை அதிபர் ராஜபட்சவை அனைத்துலக நீதிமன்றத்தின் மூலம் விசாரணை நடத்தி தண்டிக்க ஐ.நா.சபை முன்வர வேண்டும்.
பிரபாகரனையும், அவரது குடும்பத்தினரையும், விடுதலைப் புலிகளின் முன்னணி தலைவர்களையும் படுகொலை செய்துவிட்டதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இலங்கை அரசு, கொல்லப்பட்டவர்களின் உடல்களை எஞ்சியிருக்கும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
உறவினர்கள் அடையாளம் காணும் வரை உடல்களை பாதுகாப்பாக வைத்திருக்க உரிய ஏற்பாடுகளை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் செய்ய வேண்டும்.
போர் முடிந்து விட்டது என்று இலங்கை அரசு அறிவித்துள்ள நிலையில் ஈழத் தமிழர்களுக்குத் தேவையான உணவு, மருந்து, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மூலம் செய்ய வேண்டும்.
ஈழத் தமிழர்களின் ஒரே தேவையான “தனித் தமிழ் ஈழம்’ கிடைக்கும் வகையில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். இதற்காக எஞ்சியுள்ள விடுதலைப் புலிகளின் தலைவர்களோடு மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். புலிகள் அல்லாதவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது.
விடுதலைப் புலிகள் அதிகாரபூர்வமாக போர்நிறுத்தம் அறிவித்த பிறகும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை இலங்கை அரசு அழித்தொழித்துள்ளது. இதனை வேடிக்கை பார்த்த இந்தியா உள்ளிட்ட அனைத்துலகச் சமூகத்தின் மனித நேயமற்ற அணுகுமுறையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இலங்கை அரசை கண்டித்தும், பலியான ஈழத் தமிழ்ச் சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் மே 28ஆம் தேதி சென்னையில் அமைதிப் பேரணி நடைபெறும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.








திருவாளர் திருமாவளவன் அவர்களுக்கு.
உங்கள் சுத்துமாத்து அரசியலுக்காக ஈழத்தமிழரை பகடக்காய் ஆக்காதீர்கள்.