ஆன்லைன் ரம்மி விளையாட்டை தமிழ்நாடு அரசு தடை செய்தது. ஆனால், சில நிறுவனங்கள் நீதிமன்றம் சென்ற தடையை உடைத்து மீண்டும் ரம்மி விளையாட்டுக்கு அனுமதி பெற்றன.
ஆனால், இந்த விளையாட்டால் பல குடும்பங்கள் வாழ்வையே இழந்து வருகிறார்கள். சமீபத்தில் மணிகண்டன் என்ற வங்கி அதிகாரி தன் மனைவி மற்றும் இரு குழந்தைகளைக் கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அதிர்வலைகளை உருவாக்கியது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு பகுதியில் தினேஷ் என்பவர் இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட தினேஷ் கோயம்பேடு பகுதியில் பிரவுசிங் மையம் நடத்தி வருகிறார். ஓரளவு வருவாய் வந்த போதும் அவரே அலுவலகத்தில் அமர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாடியிருக்கிறார்.ஆன் லைன் சூதாட்டத்தில் துவக்கத்தில் சில விளையாட்டுகளில் வென்ற தினேஷ் அந்த விளையாட்டிற்கு அடிமையாகி ஏராளமான பணத்தை வைத்து விளையாடி உள்ளார். மனைவியின் நகைகள், வங்கியில் இருந்த பணம் என அனைத்தையும் வைத்து விளையாடியதாக தெரிகிறது. முடியில் எல்லா பணத்தையும் தோற்ற நிலையில் கடன் கொடுத்தவர்கள் அவரை நெருக்கியதாக தெரிகிறது.
ஒரு கட்டத்தின் என்ன செய்வதென்று தெரியாத தினேஷ் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.வாழ்க்கையில் வெற்றிக்கு பழக்கப்பட விரும்பும் இளம் தலைமுறையினர் தோல்விக்கு பழக்கப்படவில்லை. இந்தியாவில் நிலவும் வேலை யில்லா திண்டாட்டமும் தொழில்துறை நசிந்திருப்பதும், ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகள் இளையோரிடம் செல்வாக்குச் செலுத்த காரணம். விளையாடி பணம் சம்பாதிக்கலாம். கோடீஸ்வரர் ஆகலாம் என்ற எண்ணம் இந்த தலைமுறை இளைஞர்களிடம் இருக்கிறது. அதுவே சீரழிவுக்குக் காரணம்.
ஆன்லைன் விளையாட்டை தடை செய்வதற்கான பணிகளை மீண்டும் அரசு துவங்கியுள்ளது.