ஐக்கியதேசியக் கட்சி வருகின்ற மேதினத்தை கூட்டமைப்பின் உதவியோடு யாழ்ப்பாணத்தில் நடாத்தமுடிவு செய்துள்ளது. இது தமிழ்த் தேசிய அரசியலை பௌத்த சிங்கள பேரினவாதத்தினுள் கரைக்கும் ஒரு சதி முயற்சி. இதனை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இன்று இலங்கைத் தேசியம் என எதுவுமில்லை. அதற்கான பன்மைத்துவ கட்டமைப்புக்கு சிங்கள தேசம் தயராக இல்லை. தென்னிலங்கையில் இரு பிரதான கட்சிகளிடமும் இருப்பது சிங்களத் தேசியம் தான். இது விடயத்தில் இரு பிரதான கட்சிகளிடத்தேயும் பெரிய வேறுபாடுகள் எதுவும் கிடையாது. சிங்களத் தேசியம் சிங்கள பௌத்த பேரினவாதமாக எழுச்சியடைந்து பல்வேறு ஆக்கிரமிப்புகளின் மூலம் தமிழ் மக்களின் இருப்பைச் சிதைத்த போது தான் ஒரு தற்காப்பு முயற்சியாக தமிழ்த் தேசியம் வீறு கொண்டெழுந்தது. 60 வருட காலம் பல்வேறு தியாகங்களைச் செய்து விலைபோகாத போராட்டத்தை நடாத்தியது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னரும் கூட நாம் ஒரு தனியான தேசம் என்பதை நிலைநாட்ட தமிழ் மக்கள் தயங்கவில்லை. தேர்தல்களில் கூட்டமைப்புக்கு கிடைத்த வெற்றிகள் இதன் வெளிப்பாடுகள்தான்.
இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியை கூட்டமைப்பு யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வருவது பௌத்த சிங்கள பேரினவாத அரசியலுக்குள் தமிழ்த் தேசிய அரசியலைக் கரைப்பதற்கு வழிவகுப்பதாகவே அமையும். போருக்கு பின்னர் பேரினவாதிகளின் பிரதான இலக்கும் இது தான். ஒரு பக்கத்தில் நிலப்பறிப்பு, தொழில் பறிப்பு, வளப் பறிப்பு, பௌத்த மதத்திணிப்பு, காலசாரஅழிப்பு, தமிழ் மொழிஅழிப்பு, என தமிழ் மக்களின் இருப்பை சிதைக்கும் வேலைத்திட்டத்தினை பேரினவாதிகள் தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளனர். பேரினவாத நிறுவனங்கள், அரசாங்கம், இராணுவம், பௌத்த பிக்குமார்கள் என்போரின் கூட்டு முயற்சியாக இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. கிழக்கு முழுமையாக ஏப்பமிடப்பட்டுள்ள நிலையில் வடக்கிற்கும் இவ் ஆக்கிரமிப்பு பாய்கின்றது.
மறுபக்கத்தில் அரசியல் ரீதியாக தமிழ் மக்களின் உளவியலைச் சிதைக்கும் வகையில் பேரினவாத அரசியலுக்குள் தமிழ் அரசியலைக் கரைக்கும் முயற்சி முன்னெடுக்கப்படுகின்றது. இதுவரை காலமும் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஊடாக அரசாங்கம் இதனை மேற்கொண்டு சில வெற்றிகளையும் கண்டது. ஈபிடிபி அமைப்பு பேரினவாத அரசியலுக்குள் இன்று கரைந்துள்ளது. பௌத்த விகாரைகள் கட்டுவதைக் கூட தடை செய்ய அதனால் முடியவில்லை. அரசாங்கம் வீசி எறிந்த எலும்புத் துண்டுகளை பெரிய விடயங்களாக மக்களுக்கு அது காட்டியது.
தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதனைக் கையிலெடுத்திருக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சியை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்து கூட்டு மேதினத்தை நடாத்துவதன் மூலம் இதனைத் தொடக்கி வைக்கப் போகின்றது.
சில வாரங்களுக்கு முன்னர் தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ வடக்கு மக்களை அணி திரட்ட தேசியக் கட்சிகள் முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோளை கூட்டமைப்பு ஏற்று அதற்கான வாசல்களைத் திறந்திருக்கின்றது.
கூட்டமைப்பின் இந்த முடிவு எமக்கு பெரிய ஆச்சரியத்தைத் தரவில்லை. போருக்கு பின்னர் கூட்டமைப்பின் வரலாறு என்பதே இதுதான். தாயகம், தேசியம், சுய நிர்ணயம் என்கின்ற தமிழ்த் தேசிய வாதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைக் கைவிட்டமை, தமிழ் மக்களின் கூட்டிருப்பைச் சிதைக்கின்ற வட-கிழக்கு இணைப்பினைக் கைவிட்டமை, எந்தவித சுயாதீனமும் இல்லாத மாகாண சபைகளைக் கொண்ட 13வது திருத்தத்தினை ஏற்றமை என அனைத்துமே ஒரு வகையில் பேரினவாத அரசியலுக்குள் தமிழ் அரசியலைக் கரைக்கும் முயற்சிகள் தான். இவர்கள் இதனைக் கைவிட்டமைக்கு சர்வதேச இராஜதந்திரிகளே சாட்சி. கூட்டு மேதினம் இம்முயற்சிகளின் உச்சநிலையாக உள்ளது.
வடக்கில் ஜனநாயக சூழ் நிலையை உருவாக்குவதற்காக நாம் ஐக்கிய தேசியக் கட்சியை அழைத்து வருகின்றோம் என கூட்டமைப்பு இதற்கு கொள்கை விளக்கம் கொடுக்கின்றது. தமிழ் மக்களின் விவகாரத்திற்காக ஐக்கிய தேசியக் கட்சி இதுவரை எத்தனை போராட்டங்களை நடாத்தியது? ஒரு மேதினக் கூட்டத்துடன் ஜனநாயக சூழல் வந்து விடுமா? சொந்த மக்களை இணைத்து போராட்டம் நடாத்துவதன் மூலம் ஜனநாயக சூழலைக் கொண்டு வரலாமே தவிர இரவல் கட்சியின் செயற்பாடுகள் மூலம் ஒருபோதும் அதனைக் கொண்டு வர முடியாது.
மேலும் மேற்படி மேதின கூட்டத்தில் மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியும், விக்கிரமபாகு கருணாரத்தின தலைமையிலான நவசமாஜக் கட்சியும் கலந்துகொண்டு ஆதரவு வழங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த காலங்களில் தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமை மற்றும் தாயகக் கோட்பாடு என்பவற்றை பகிரங்கமாக ஏற்றுக் கொண்டிருந்த இவ்விரு தரப்பினரும் மேற்படி நிகழ்வில் கலந்து கொள்வதனை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தமிழ் தேசியவாதத்தை சிங்கள தேசியவாதத்தினுள் கரைப்பதற்காக மேற்கொள்ளும் இந்த முயற்சிக்கு மனோகணேசன் மற்றும் விக்ரமபாகுகருணாரட்ண ஆகியோர் ஆதரவு வழங்குவதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
யாழ்ப்பாண மக்கள் இம் மேதினத்தை புறக்கணிப்பதன் மூலம் இக்கரைப்பு நடவடிக்கைகளுக்கு நாம் ஒருபோதும் துணை நிற்கமாட்டோம். என்பதை தெளிவாக வெளிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செல்வராசா கஜேந்திரன்
தலைவா் பொதுச் செயலாளா்
இலங்கையில் தேசியம் என்பது ஒன்றுமில்லை. அங்கே பேரினவாத இனவாத பெளத்த கட்டமைப்பே உள்ளது. ஐதேக என்பதும் ஒரு பேரினவாத போக்குடைய கட்சியே. எமது அவலங்களுக்கு இந்தக் கட்சியும் உடந்தை. இவர்களுடன் சேர்ந்து அரசியல் நடத்த முயலுவது தமிழ் தேசியத்தின் அழிவுக்கே மேலும் வலுச் சேர்க்கும். அத்துடன் தமிழ்க் கூட்டணியின் சிதறலுக்கும் வழிகோலும். தமிழ் மக்கள் விரும்பாத தீர்வுகளுக்கே சிங்கள இனவாத பேரினவாத கட்சிகள் கச்கை கட்டிக் கொண்டு நிற்கின்றது. இதற்கு நாமும் துணைபோவது எம்மை நாமே அழித்துக் கொள்வதற்கு ஒப்பானது. தனித்து நின்று செயற்படுங்கள். அதுவே தமிழ் மக்களின் அவா.
ஐதேக வுடன் சேராமல் யாழ்ப்பாணிகள் தனியாக போராடிநாறி போகவேண்டும் என தங்கள் விருப்பமோ
1964 ல்-LSSP , CP ஆகிய இரு கட்சிகளும் SLFP யுடன் சேர்ந்து ஈற்றில் தாமும் அழிந்து தம்மை நம்பிய மக்களையும் அநாதரவாக விட்டுச்சென்றனர்.இது அப்படியானதொன்றல்ல.
இது ஒரு மேதின கூட்டம்.அதில் சகல எதிர்கட்சிகளும் ஒன்று சேர்ந்து தமது எதிர்ப்பை காட்டுவது சிறந்ததே. இந்த கூட்டத்தில் NSSP கலந்துகொள்வது ஒரு சிறப்பு அம்சமாகும்.மேலும் இது ஒரு தொழிலாளர் தினமாகும்.எமது வர்க்க ஒற்றுமையை காட்ட ஒரு அரிய சந்தர்பம். எம்மை பிரிக்கும் பேரினவாதம், குறும்தேசியவாதம்,சாதியம், ஆணாதிக்கம் சகலதையும் புறம் தள்ளி வர்க்க உணர்வை காட்ட இது ஒரு அரிய சந்தர்ப்பம்.
1976 க்கு முன்னதாக (ஆண்டு சரியாக ஞாபகமில்ல்லை ) பரந்தன் கெமிக்கல் வேலைத்தலத்தில் வேலை நிறுத்தம் நடந்தபோது தமிழரசு கட்சிக்கும் CMU பேச இடமளித்தபோதும் பலர் விமர்சித்தனர். ஈற்றில் அது சரியான நிலைப்பாடு என Genaral council லால் ஏற்றுக்கொள்ளப்பட்டது எனக்கு இன்றும்ஞாபகம். மற்றைய முற்போக்கு அமைப்புகளும் இதனுடன் சேர்ந்து தொழிலாளர் ஒற்றுமையை காட்ட வேண்டும் .இந்த ஊக்குவிப்பினை ஏதோ ஒரு ஸ்த்தாபனம் ஆரம்பிக்க வேண்டும். ரட்னம் கணேஷ்
Dr. Wickremabahu Karunaratne also once mentioned the name Gajendrakumar who once talked about the use of heavy artillery in the later stages of the war.