குறுகிய தமிழ்த் தேசியவாதம் தன்னை நிலைநிறுத்துவதற்காகப் பல்வேறு தந்திரோபாங்களைப் பயன்படுத்தி வந்துள்ளது. இன, மொழி உணர்வுகளை வெறித்தனமான உணர்ச்சிகளாக விருத்தி செய்வது அவற்றுள் அடிப்படையான ஒரு உபாயமாக அமைந்தது எனலாம். இன்னொன்று தனக்கும் தன்னால் எதிரியாகக் கொள்ளப்படும் சமூகத் திற்குமிடையிலான வேறுபாடுகளை மிகைப்படுத்துவதுடன் பொதுவான பண்புகளைக் குறைத்துக் கூறுவது அல்லது மறுப்பதாகும்.
இது நம் தமிழ்த் தேசியவாதத்தின் நடத்தைக் கோளாறு மட்டுமல்ல. ஒவ்வொரு குறுகிய தேசியவாதத்தின் உள்ளும் இவ்வாறான போக்குக்களை நாம் காணலாம். இப் போக்குக்கள் மக்களைத் தனித் தனிச் சமூகங்களாகப் பிரிப்பதுடன் பகைமையை மூட்டிவிடுகிற காரியங்களாகவும் விருத்தி பெறுகின்றன.
சமூகங்களிடையே நட்புணர்வு போன்றதே பகை யுணர்வும். ஒன்றின் நட்புணர்வு மற்றதன் நட்புணர்வால் ஊட்டம் பெறுவது போல, ஒன்றின் பகையுணர்வு மற்றதன் பகையுணர்வுக்கு ஊட்டமளிக்கிறது. அதன் விளைவாக ஒன்றுபடக் கூடிய வாய்ப்பை அதிகளவிற் கொண்ட சமூகங்கள் பிரிந்தும் பிளவுபட்டும் நிற்கின்றன. ஈற்றில் நன்மையடைவோர் எச் சமூகத்தைச் சேர்ந்த மக்களும் அல்லர். குறுகிய தமிழ்த் தேசியவாதத்தின் தவறான அணுகுமுறை தமிழரைப் பிற சமூகத்தினரிடமிருந்து தனிமைப்படுத்த உதவியுள்ளது.
சிங்களம் மட்டுமே சட்டமாக்கப் பட்டதன் பின்பு தமிழ்த் தலைமைகள் முன்னெடுத்து வந்த சில நடவடிக்கைகளையும் குறுகிய தேசியவாதம் பிரிவினைக் கோரிக்கையாகி ஆயுதப் போராட்டமான போது கடைப் பிடித்த அணுகுமுறையின் சில வெளிப்பாடுகளையும் பற்றி இக் கட்டுரையிற் சுருக்கமாக ஆராயப்படும்.
சுதந்திர தினம்
எந்த நேர்மையான இடதுசாரியும் இலங்கைக்கு 1948 பெப்ரவரி 4ஆம் நாளன்று சுதந்திரம் கிடைத்ததாகச் சொல்லியதில்லை. அன்று பிரித் தானியக் கொலனிய நிருவாகம் தனது நேரடியான அதிகாரத்தைத் தனது விசுவாசிகளான சில மேட்டுக்குடிகளின் கைகளில் ஒப்படைத் தது. இந்த நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்தும் ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கும் உலகச் சந்தைப் பொருளாதாரம் என்ற பேரில் சமனற்ற முறையில் ஏற்றுமதி-இறக்குமதிப் பண்டப் பரிமாறலுக்கும் உட்பட்டு வந்தது. முழுமையான பொருளாதாரச் சுதந்திரமில்லாது மூன்றாமுலக நாடுகள் கொலனிய ஆதிக்கத்தின் இடத்தில் நவ கொலனிய ஆதிக்கத்தை அனுபவித்தன.
எனவே சுதந்திர தினம் என்பதிற் கொண்டாடுவதற்கு அதிகம் இல்லை என்பது சரியான ஒரு நிலைப்பாடு. ஆயினும் நேரடியான கொலனி ஆட்சி நீக்கம் என்பது நிராகரிக்க வேண்டிய ஒன்றல்ல. தொடர்ந்தும் நேரடியான கொலனிய ஆட்சியே இருக்க வேண்டும் என்பது சரியான நிலைப்பாடாகாது.
நேரடியான கொலனிய ஆட்சியின் நீக்கத்தை அடுத்து நாட்டைச் சுதந்திரமாக்கும் பணி நிறைவேற்றப் படாமல் உள்ளது என்பதால் சுதந்திர தினம் பெறுமதியற்றது என்பது ஒரு விடயம். அது துக்கதினம் என்பது முற்றிலும் வேறொரு விடயம்.
நமது தமிழ்த் தேசியத் தலைவர்கள் 1956ம் ஆண்டு வரை சுதந்திர தினக் கொண்டாட்டங்களிற் பங்குபற்றினவர்கள் தான். எனவே, இடது சாரிகள் போலன்றி, 1948 பெப்ரவரி 4ஐச் சுதந்திர தினமாக ஏற்றவர் களாவர். எனினும் 1956ம் ஆண்டு சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வரப்பட்டதன் பின்பு சோல்பரி யாப்பு தமிழரசுக் கட்சியினரால் கடுமை யான விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டதுடன் சுதந்திர தினத்தைத் துக்கதினமாக அனுட்டிப்பது என்றும் முடிவெடுக்கப் பட்டது.
1948ம் ஆண்டு மலையகத் தமிழரின் வாக்குரிமை பறிக்கப்பட்ட போது இல்லாத விதமாக, இலங்கையின் சுதந்திர தினம் என்பது மறுக்கப்பட வேண்டியதாகவும் துக்கதினமாகவும் கொண்டாடப்பட வேண்டுமென முடிவெடுக்கப்பட்டது.
சுதந்திர தினக் கொண்டாட்டங்ளிற் பங்கெடுக்க மறுப்பது நமது குறைபாட்டை எடுத்துரைக்கும் ஒரு செயல்முறை. அதைப் பற்றிச் சிங்கள மக்கள் அதிகம் குற்றங் காண இடமிருந்திராது. 1957 சுதந்திர தினத்தைத் துக்கதினமாக்கிக் கறுப்புக் கொடியேற்றுவது என்ற தமிழரசுக் கட்சியின் தீர்மானத்தின் பொரு ளென்ன? தமிழரசுக் கட்சித் தலைவர்கள் சிலர் மேடையேறிப் பிரகட னம் செய்தது போல அது ஒரு துக்க தினமா?
எட்டு ஆண்டுகளாக அவர்கள் எல்லாரும் கொண்டாடிவந்த நாள் எப்படித் துக்க தினமாகும்? அந்த நாளில் அவர்களும் அவர்கள் எதிர் பார்த்தவாறு தமிழ் மக்களும் துன்புறும் விதமாக என்ன நடந்தது? கொலனிய எசமானர்கள் பேரளவிலாவது நாட்டை விட்டுச் சென்றது தான் துன்பத்திற்குரிய நிகழ்வா?
கொண்டாட மறுப்பதை யாரும் தவறாக விளங்கிக் கொள்ள அதிகம் நியாயமில்லை. அது நாட்டின் பெரும்பான்மையினருக்கு உண்மையான சுதந்திரத்தைக் கொண்டுவரவில்லை. இவ்வாறான அணுகுமுறை இந்தியாவின் புரட்சிகர இயக்கங்களாலும் இந்தியச் சுதந்திர தினத்தையும் குடியரசு தினத்தையும் பற்றிக் கடைப் பிடிக்கப்பட்டு வந்துள்ளது. எனவே கொலனிய ஆட்சி நீக்கம் நடந்த நாள் உண்மையான சுதந்திர நாளல்ல என்பது போல, தமிழருக்கு அதனால் நன்மை இல்லை என்று கூறுவதில் நியாயமுண்டு. அது துக்கதினம் எனும் போது கொலனிய எசமானர்கட்குப் போன்று தமிழர்கட்கும் துன்பமானது என்று சொல்லப்படுகிறது என்றே சிங்கள மக்கள் கருத இடமுண்டு.
சிங்களப் பேரினவாதிகளைப் பொறுத்த வரை, இது, தமிழர் பற்றிய பகையுணர்வை வளர்க்க வசதியான ஒரு வாதத்தை அவர்கட்கு எடுத்துக் கொடுக்கிறது பேரினவாதச் சிந்தனை யற்ற சிங்களவர்களின் மனதில் இது எத்தகைய உணர்வை எழுப்பும்? தமிழர் கொலனி ஆட்சி தொடர்ந்தும் இருப்பதையே விரும்புகின்றனர் என்ற எண்ணத்திற்கு அது இடமளியாதா? அதனாலேயே, இடது சாரிகள் பெப்ரவரி 4ஆம் நாளைத் துக்கதினமாக அனுட்டித்துக் கறுப்புக்கொடி ஏற்றுவதைக் கடுமையாக விமர்சித்தனர்.
திருகோணமலையில் 1957 சுதந்திர தினத்தன்று மணிக்கூட்டுக் கோபுரத்தில் கறுப்புக்கொடி ஏற்ற எடுக்கப்பட்ட முடிவு ஒரு அப்பாவித் தமிழரின் சாவுக்குக் காரணமாயிற்று. மணிக்கூட்டுக் கோபுரத்தின் அயலில் குழுமியிருந்தோரை நோக்கிச் சந்தைக்குள் இருந்து ஒருவர் சுட்டார். அதில் நடராசன் என்பவர் இறந்தார். அச் சம்பவம் திரிக்கப் பட்டு ஒரு வீரசாகசச் செயலின் போதான வீர மரணமாகக் காட்டப் பட்டது. சுதந்திர தினத்தன்று கறுப்புக்கொடி ஏற்றுவது விரைவிலேயே விடுபட்டுப் போனாலும் சுதந்திர தினத்தைக் கொண்டாடாமல் துக்க தினமாக அனுட்டிக்க வேண்டும் என்ற கருத்து தமிழரசுக் கட்சியின ரால் 1965ம் ஆண்டு அரசாங்கத்தில் பங்காளிகளாகும் வரை சொல்லப்பட்டே வந்தது.
தேசிய கீதம்
இலங்கையின் தேசியகீதத்தை எழுதிய ஆனந்த சமரக்கோன் வங்கத்தில் சாந்தி நிகேதனில் இசை பயின்றனர். ரபீந்திர சங்கீதம் என்ற இசைமரபு வங்காளத்தின் மக்கள் இசை வடிவங்களை அடிப்படையாகக் கொண்டு ரபீந்திரநாத் தாகூரால் விருத்தி செய்யப்பட்டது. அந்த மெட்டுகளின் அடிப்படையில், சமரக்கோன் தான் எழுதிய பாடலுக்கு இசையமைத்தார். அதுவே இலங்கையின் தேசிய கீதமாகத் தெரிவு செய்யப்பட்டது. 1972ல் சோதிடர்களின் ஆலோ சனைப்படி முதலடி ‘ஸ்ரீ லங்கா மாதா’ என மாற்றப்பட்ட ‘நமோ நமோ நமோ மாதா’ என்கிற பாடலின் சிறப்பு ஏதெனில் அதில் எந்த ஒரு இனமோ மதமோ குறிப்பிடப்படாமையாகும். நாட்டை மட்டுமே உயர்த்திப் பாடுகிற பாடல் என்ற வகையில் அதில் வரும் ‘ஸ்ரீ லங்கா’ என்ற பேரை மாற்றினால் பல நாடுகட்கும் பொருந்தி வரக் கூடிய ஒரு சிறப்பான பாடல்.
அதைவிட, அதற்கான ஒரு தமிழ் வடிவம் அமைக்கப்பட்டு, அது அதிகார பூர்வமானதாக ஏற்கப்பட்டு முள்ளது. தேசிய கீதங்களைப் பொறுத்தவரை இது நல்லதொரு விதிவிலக்கான ஏற்பாடு. எனினும் குறுகிய தமிழ்த் தேசியவாதிகள் தேசிய கீதத்தைத் தமிழர் பாடக் கூடாது என்ற கருத்தை வலியுறுத்தி வந்தனர்.
அதன் விளைவாகத் தேசிய கீதத்தைத் தமிழிற் பாட உரிமை இல்லை என்ற எண்ணமே தமிழ் மக்கள் மனதில் இன்னமும் பரவலாக உள்ளது. தேசிய கீதத்தைப் பாடமறுத்த ஒரு பரம்பரை இப்போது சிங்களத்தில் தேசிய கீதத்தைப் பாடுகிறது. உரிய இடத்தில் அதைத் தமிழிற் பாடித் தமிழரின் மொழியுரிமையை நிலை நிறுத்துகிற எண்ணங்கூட எந்த முன்னாள் தமிழ் இன விடுதலை இயக்கத் தமைமையினரிடமும் இல்லை.
சிங்களம் கற்றல்
சிங்களப் பேரினவாதம் சிங்களத்தை அரசகரும மொழியாக்கியதன் நோக்கம் தமிழரின் மொழியை அழித்துத் தமிழரைச் சிங்களவ ராக்குவதாக இருந்திருந்தால், சிங்களம் அரசகரும மொழியாக மட்டு மல்லாது கல்விக்கான மொழியாகவும் திணிக்கப் பட்டிருக்கும்.
சிங்களம் மட்டுமே என்ற கோஷம் மொழிவழி இன உணர்வைக் கிளறிவிட வசதியாயிருந்தது. வாக்குகளைப் பெற்றுத் தேர்தல்களை வெல்ல உதவியாயிருந்தது. தமிழர் சிங்களத்தைப் படித்துச் சிங்கள வருடன் போட்டியிடுவார்களேயாயின் சிங்களத்தை அரசகரும மொழி யாக்கியதன் முக்கியமான ஒரு நோக்கமே முறியடிக்கப் பட்டிருக்கும். எனினும், சிங்களம் மட்டுமே சட்டம் முழுமையாக நிறைவேற்றப் படுமானால் தமிழ் அழிந்துவிடும் என்ற வாதம், தமிழரசுக் கட்சியால் நீண்டகாலமாகவே முன்வைக்கப்பட்டு வந்ததாகும்.
ஆனால் சிங்களம் அரசகரும மொழியாக்கப்பட்ட பேரினவாத நோக்கங்களில் ஒன்று அரசாங்க உத்தியோகங்களில் தமிழரின் தொகையைக் குறைப்பதாகும். அது வெளிப்படையான பாரபட்சமாக ஒரு காலத்தில் வடிவெடுத்திருக்கும் என்பது ஒரு புறமிருக்க, சிங்க ளத்தைக் கற்க வேண்டாம் என்று தமிழரை வற்புறுத்தியதன் மூலம் தமக்கிருந்த அரசாங்க வேலைவாய்ப்புக்களைத் தமிழராகவே மறுக்கு மாறு தூண்டப் பட்டனர்.
எந்த விதமான சிங்கள மொழித் திணிப்பும் 1950களிலோ 60களி லோ 70களிலோ கூடப் பாடசாலைகளில் இருந்ததில்லை. சிங்க ளத்தை ஒரு விருப்பப் பாடமாகக் கற்பிக்கும் நடைமுறை யாழ்ப்பா ணத்தின் வசதி படைத்த பாடசாலைகள் பலவற்றில் இருந்து வந்தது. எந்த விதமான சிங்கள மொழித் திணிப்புமே இல்லாத ஒரு சூழ்நிலையில் பாடசாலைகளில் சிங்களம் கற்பிக்கக் கூடாது என்ற தடை சமூக நெருக்குவாரங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதன் பெரிய அபத்தம் என்னவென்றால் சிங்களத்தைக் கற்றால், தமிழ் மொழியின் உரிமை மறுப்புக்கு இடமளிப்பதாகி விடும் என்ற வாதமாகும். தமிழரில் அரசாங்க உத்தியோகங்களில் இருந்தோர் ஒருசில சதவீதத்தினரே ஆவர். சில அரசாங்கத் துறைத் தொழில் கட்குச் சிங்கள அறிவு தேவைப்பட்டிராது. அப்படித் தேவைப்பட்ட உயர் தொழில்களில் சிங்களம் அரசகரும மொழியாக்கப்பட முன்பி ருந்த தமிழிலும் சிங்களத்திலும் குறைந்தபட்ச உரையாடல் ஆற்றல் தேவையாயிருந்தது. ஆங்கிலத்திற் கருமமாற்றிய இடத்தில் சிங்க ளத்தில் மட்டுமே கருமாற்ற வேண்டிய தேவை ஏற்படக்கூடிய சூழலிலும் அது தமிழ்ச் சமூகத்தின் கணிசமான சதவீதத்தினரைப் பாதித்திருக்க இயலாது.
சிங்களம் மட்டுமே சட்டத்தின் அநீதியான ஒரு பக்கம் இருந்தது. அதற்கெதிரான போராட்டத்தைச் சிங்கள மொழி எதிர்ப்பு என்ற வடிவத்திற் கொண்டு சென்றதன் பயனாகத் தமிழர் இழந்தது அதிகம். அந்த இழப்பின் முக்கியமான பகுதி நடுத்தர வர்க்கத்தினரை குறிப்பாக அரச உத்தியோகங்களை எதிர்பார்த் திருந்தோரையே பாதித்தது. வசதி படைத்தவர்கள் தேவைக்கேற்பச் சிங்களத்தைப் படித்தோ படிக்காமலோ தம்மை மேலும் வளப்படுத்திக் கொண்டனர்.
சிங்கள மொழித் திணிப்பு என்பது, பிற்காலத்தில், தமிழ் மொழியின் நியாயமான பிரயோகம் பற்றிய சட்டத்திற்குப் பின்பு, அச் சட்டத்தை நடைமுறைப் படுத்தாமல் தமிழ் மொழியைப் பயன்படுத்துவதற்குத் தடைகளை விதிக்கும் முறையில் பல்வேறு அரசாங்கத் திணைக்களங் களிலும் செயற்படுத்தப்பட்டது. வருமானவரித் திணைக்களம் குறிப்பிடத் தக்க ஒரு விலக்காக இருந்ததற்கான காரணங்கள் விளங்க எளியன என நினைக்கின்றேன். எனினும் 1970களின் போக்கிலேயே சிங்கள மொழிப் பற்று என்பது படித்த நடுத்தர வர்க்கத்தினரிடையே குறைந்து விட்டது. அதே அளவுக்குத் தமிழ் நடுத்தர வர்க்கத்தினரிடையிலும் தமிழ்ப் பற்று நலிந்து விட்டது.
சிங்கள மொழிக்கு எதிரான தமிழ்த் தேசிய அரசியல் நடவடிக்கை தொடக்கப்பட்ட காலத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப் படவுமில்லை, சிங்களம் தமிழர் மீது திணிக்கப்படவுமில்லை, தமிழர் சிங்களம் கற்க மறுத்ததைச் சிங்களப் பேரினவாதிகள் அதிகம் கவனத்தில் எடுக்கவும் இல்லை. ஏனெனில் தமிழர் சிங்களம் படிக்காமல் விடுவது சிங்களவர் களது வேலை வாய்ப்புக்கட்குச் சாதகமானது என்று அவர்கள் கண்ட னர்.
தமிழரசுக் கட்சி வெறுமனே மொழியையே பிரச்சினையாக்கிய போது, பேரினவாதம் தமிழரை அரசாங்க உத்தியோகத் துறையி னின்றும் உயர் தொழில்களினின்றும் ஓரங்கட்டுவதிலேயே குறியாய் இருந்தது. பாடசாலைகளிற் சிங்களம் கற்கும் வாய்ப்பு மறுக்கப் பட்டதன் மூலம் பொருள் வசதி குறைந்த தமிழரே நட்டப்பட்டனர். அதைவிடச் சிங்கள மக்களுடன் தமிழர் உறவுகளைப் பேணுவதற் குரிய வாய்ப்புக்களும் இழக்கப்பட்டன. பல்வேறு துறைகளிலும் தமிழ ரும் சிங்களவரும் சமூகங்களாக ஒருவரை ஒருவர் அறிய ஒரு கொலனி ஆதிக்க மொழியே பாலமாக அமைய வேண்டிய நிர்ப் பந்தத்திற்குக் குறுகிய தேசியவாதக் கண்ணோட்டங்களே முக்கிய மாகப் பங்களித்தன.
இலங்கை என்ற பேர்
இந்த நாடு அதன் வரலாற்றில் ஈழம், இலங்கை என்ற இரண்டு பேர்களாலுமே தமிழில் பொதுவாக அறியப்பட்டு வந்துள்ளது. பிரித்தா னியக் கொலனி ஆட்சிக் காலத்தில் இலங்கை என்ற பேரே இந்த நாட்டைக் குறிக்கும் தமிழ்ச் சொல்லாயிற்று. சிங்களத்தில் அது லங்கா என் றும் ஸ்ரீ லங்கா என்றும் அறியப் பட்டுள்ளது. 1972ம் ஆண்டு புதிய அரசியல் யாப்பு ‘ஸ்ரீ லங்கா’ என்ற பேரைச் சிங்களத்தில் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் இந்த நாட்டைக் குறிக்கும் பேராகப் பிரகடனஞ் செய்த போதும், தமிழில் அது ‘இலங்கை’ என்று அறியப்பட இடமளித்தது. பேரினவாதத் தன்மை கொண்டதாக அறியப்பட்ட அந்த அரசியல் யாப்பின் சாதகமான சில அம்சங்களில் இதுவும் ஒன்றாகும்.
முதன் முதலாக ஈழம் என்ற சொல்லால் தமிழ்ப் பிரதேசங்களை மட்டுமே குறிக்கும் போக்குக்கள் ‘தமிழ் ஈழம்’ என்ற கோட்பாட்டை ஒரு அரசியல் இயக்கமாக்கும் வரை, தமிழர் நடுவே இலங்கை என்ற பேரே இந்த நாட்டை அடையா ளப்படுத்தப் பயன்பட்டது. ஆங்கிலம் படித்தோரிடையே, தமிழர் மட்டுமன்றிப் பிறரும், ‘சிலோன்’ என்ற பேரைக் கைவிடச் சில ஆண்டுகள் எடுத்தது.
தமிழ் ஈழம் என்ற தனிநாட்டுக் கோரிக்கையை வலியுறுத்தும் நோக்கில் இலங்கை என்ற பேருடன் தமிழருக்கிருந்த நெருக்கத்தை நீக்கும் நோக்குடனே இந்த நாடு வலிந்து சிறீ லங்கா என்று அழைக்கப்பட்டது.
இந்தப் போக்குத் தம்மை ‘இடதுசாரிகளாகக்’ காட்டிக் கொள்ள விரும்பிய இயக்கங்களையும் விட்டுவைக்கவில்லை. இலங்கை என்பதற்குப் பதிலாக ஒரு அந்நியத் தன்மை கொண்ட சிறீ லங்கா என்ற பேரால் இந்த நாட்டைக் குறித்து, அதன் மூலம் ஈழம், தமிழீழம் என்ற பேர்கள் அதனின்றும் வேறுபட்ட ஒரு மக்களையும் பிரதேசத்தையும் குறிக்குமாறு செய்ய அவர்கள் முயன்றனர்.
சிங்களப் பேரினவாதிகட்கு அது ஒரு பொருட்டே அல்ல. தமிழ் மக்கள் சிங்களப் பேரினவாதம் வேண்டுமாறு தமிழிலும் இந்த நாட்டின் பேரை ஸ்ரீ லங்கா என்று வைத்துக் கொள்வதில் அவர்களுக்கு என்ன குறை? அதே வேளை தமிழ் ஈழக் கோரிக்கையால் அடையாளப் படுத்தப்பட்ட பிரதேசங்கள் ―அவை பற்றிய நிச்சயமின்மைகளும் கருத்து வேறுபாடுகளும் ஒருபுறமிருக்க― என்பன தவிர்ந்த பிரதேசங் களில் வாழும் மலையகத் தமிழரும் முஸ்லிம்களும் தாம் வாழும் நாட்டை இலங்கை என்று அழைக்க உரிமையுடையவர்களா என்ற கேள்வி எழுகிறது. இவ்வாறு ஸ்ரீ லங்கா என்ற பேரை அவர்கள் மீது திணித்த பெருமை சிங்களப் பேரினவாதிகட்கல்லாது குறுகிய தமிழ்த் தேசியவாதிகட்கே உரியதாகிறது.
நம்மை வலியுறுத்தும் தேவை
தமிழர் தமது உரிமைகளையும் தாம் பங்கு கோர வேண்டிய வற்றையும் மறந்துவிடுவதால் தமிழீழக் கோரிக்கை எவ்வளவு தூரம் வலுப் பெற்றுள்ளது என்று என்னால் நிச்சயமாகக் கூற முடியாது. ஆனால் அது கணிசமான வெற்றி என்று கூறமாட்டேன்.
புலம் பெயர்ந்தோரிடையே சிங்கள மக்களை எதிரிகளாகவும் இந்த நாட்டை அடையாளப்படுத்தும் அனைத்தையுமே அந்நியமானதாகவும் கருதும் போக்கை மேற்கூறிய விதமான அணுகுமுறைகள் ஊக்கு வித்து உள்ளன. அதன் மூலம் தமிழ் மக்களின் விடுதலைப் போராட் டம் சாதித்ததென்ன?
இலங்கைக்குள்ளே தமிழீழப் பிரிவினை பற்றிய நம்பிக்கை சோர்ந் துள்ளது ஒரு புறமிருக்க, உரிமைப் போராட்டத்திற் கூட நம்பிக்கை யற்ற ஒரு மனநிலை தான் இன்று காணப்படுகிறது. இந்த நிலையில், தமிழ் மக்களிடையே தாம் இழந்த, இழந்துவரும் உரிமைகளையும் அவற்றை வெல்ல முன்னெடுக்க வேண்டிய போராட்டங்களையும் பற்றி உணர்வூட்டும் தேவை இருக்கிறது. இதுவரை காலமும் முன்னெடுக்கப் பட்ட போராட்டங்கள் நாட்டின் பெரும்பான்மைச் சமூகத்தை முற்றாக நிராகரித்தும் பிற தேசிய இனங்களின் தேவைகள் பற்றிய அக்கறை யின்றியும் முன்னெடுக்கப்பட்டன. ஒரு வகையில், இவை ஒரு அதிகார மனப்பான்மையுடன், ஒரு ஆண்ட பரம்பரைத் திமிருடன், பெரும் பான்மை இனமொன்றுக்கு உரியதான கண்ணோட்டத்துடன் முன்னெ டுக்கப்பட்டன என்றே கூற வேண்டும். ‘தனித் தமிழ் ஈழம் என்பது தமிழரின் உரிமை, அதை மற்ற அனைவரும் ஏற்றே தீரவேண்டும்’ என்ற மனப்பான்மை உருவாகி வளர்ந்ததற்குரிய கார ணங்கள் பல, தமிழ் மேட்டுக்குடி அரசியலில் காணப்படக் கூடியன.
தமிழ் மக்களின் விடுதலை அவ்விதமான மேட்டிமைத்தனத்தில் இருந்தும் தமிழரைப் பிற சமூகங்களிலிருந்தும் விலக்கி வைக்கும் போக்குகளிலிருந்தும் விடுபட வேண்டும். அற்பத்தனமான சிந்தனைகள் ஒரு திசைக்கு மட்டும் வரையறுக்கக் கூடியவையல்ல. அவை வேறு திசைகளிலும் இயங்கிச் சமூகத்தின் உள் முரண்பாடுகளையும் கூர்மை யடையச் செய்ய இயலும். செய்தும் உள்ளன. தமிழ் மக்கள் எதிர்ப்பது பேரினவாத ஆதிக்கச் சிந்தனையையும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் புறமொதுக்கலையுமே என்றால், அவர்களது செயற்பாடுகள் அந்த ஆதிக்கச் சிந்தனைகளையும் புறமொதுக்கல் களையும் மறுக்கும் நோக்கைக் கொண்டவையாகவும் இந்த நாட்டினில் நமது உரிமைகளை வலியுறுத்து வதுமாகவே அமைய வேண்டும்.
(நன்றி: செம்பதாகை- புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சி- இலங்கை)