தமிழினம் முற்றிலுமாக அழிந்துவிடும்: இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுங்கள்-மன்மோகன்சிங், சோனியாகாந்திக்கு கருணாநிதி தந்தி : இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் தமிழினம் முற்றிலுமாக அழிந்துவிடும் என்றும் முதல்-அமைச்சர் கருணாநிதி பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோருக்கு தந்தி அனுப்பியுள்ளார்.
இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. அப்பாவி தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் இலங்கை ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகிறது. கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்றிய இலங்கை ராணுவம் தற்போது புதுக்குடியிருப்பு பகுதியில் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகிறது.
அங்கு விஷவாயு குண்டுகள் வீசப்பட்டு தாக்குதல் நடந்துகொண்டிருக்கிறது. விஷவாயு குண்டு தாக்குதலுக்கு விடுதலைப்புலிகள் மட்டுமின்றி நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களும் பலியானார்கள். இலங்கை ராணுவம் விஷவாயு குண்டுகளை வீசியிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. விஷவாயு குண்டு தாக்குதல் தொடர்ந்தால் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படாவிட்டால் அங்கு தமிழ் இனம் முற்றிலுமாக அழிந்துவிடும். எனவே, இந்திய அரசு உடனடியாக தலையிட்டு போர் நிறுத்தம் ஏற்படவும், சமாதான பேச்சுவார்த்தை தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோருக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி தந்தி அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள தந்தியில், "இலங்கையில் தமிழ் இனம் முற்றிலுமாக அழிந்துவிடுவதில் இருந்து காப்பாற்றுங்கள், போர் நிறுத்தம் செய்யப்பட்டு உடனடியாக சமாதான பேச்சுவார்த்தை தொடங்குவதை உறுதி செய்யுங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு மட்டுமின்றி மத்திய வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி, மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் ஆகியோருக்கும் முதல்-அமைச்சர் கருணாநிதி தந்தி அனுப்பியுள்ளார்.
TNC