இந்தியாவில் தேசிய மொழி என்ற ஒன்று இல்லை, வட இந்தியாவில் சில மாநிலங்களில் இந்தி பேசுகிறார்கள் என்பதால் இந்தியை இந்தியாவின் தேசிய மொழியாக திணிக்கும் வேலைகள் நடந்து வருகிறது.
ஆனால், இதை தீர்க்கமாக கடந்த 60 ஆண்டுகளாக எதிர்த்து வரும் மாநிலம் தமிழ்நாடு மட்டுமே. ஆனால், இதே உணர்வு இன்று மேற்குவங்கம்,கர்நாடகம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும் பரவி வரும் நிலையில், மோடி அரசு இந்தியை திணிப்பதில் பிடிவாதமாகவும் தீவிரமாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விகாஷ் என்ற இளைஞர் நேற்று சோமேட்டோவில் உணவு ஆர்டர் செய்திருக்கிறார். அவருக்கு டெலிவரி செய்யப்பட்ட உணவில் ஏதோ குறைகள் இருக்க அவர் சொமேட்டோ நிர்வாகத்தை தொடர்பு கொண்டு ஆங்கிலத்தில் பேசுகிறார். அதற்கு சொமேட்டோ நிர்வாகி நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவதால் சரியாக பதிலளிக்க முடியவில்லை. இந்தியாவின் தேசிய மொழி இந்தி எனவே இந்தியில் பேசுங்கள் என்று சொல்ல கடுப்பான விகேஷ் அந்த உரையாடலை அப்படியே எடுத்து ட்விட்டரில் பதிய சற்று நேரத்தில் சோமேட்டோவுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவுகளை தமிழர்கள் பதிவு செய்தனர்.
தமிழ்நாட்டின் எதிர்ப்பைப் பார்த்த கேரளம் உட்பட இந்தி பேசாத மாநிலத்தவர்களும் பல பதிவுகளைப் போட #RejectZomato என்ற ஹேஷ் டேக் இந்திய அளவில் டிரெண்டிங் ஆனது. பங்குச் சந்தையில் சொமேட்டோ பங்குகள் வீழ்ச்சியடைந்த சொமேட்டோ உடனடியாக தமிழ் ஆங்கிலம் இரு மொழிகளிலும் தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்டதோடு தமிழ் மொழியில் பரிவர்த்தனை செய்வதற்கான ஆப்பை உருவாக்குவதாக அறிவித்துள்ளது. இது வணிக யுத்தி என்றாலும் 60 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இருக்கும் தமிழ் நெருப்பு இன்றைய இளம் தலைமுறையினரிடம் இருப்பதை பலரும் வரவேற்றிருக்கிறார்கள்.
முதன் முதலாக பதவியேற்ற அறிஞர் அண்ணா தன் உரையில்,
“ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்தில் நாம் சில காரியங்களை செய்திருக்கிறோம். அதை இனி யாராவது மாற்ற முயன்றால், தமிழர்கள் அதற்கு கொந்தளித்து எழுவார்கள். அப்படி எழும்வரை இந்த அண்ணாதுரையின் ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடக்கிறது என்று பொருள்” என்றார். அதையே இன்றைய நிகழ்வும் நினைவூட்டுகிறது.