இலங்கைத் தமிழ் மக்களின் இன்றைய அரசியல் குறித்துப் பெருமளவு விமர்சனங்கள் முன்னெழுந்துள்ளதனைக் காணமுடிகிறது. புலிகள் ஒரு தனி இயக்கமாக ஆகிக்கொண்டபின், ‘அரசியல் குறித்துப் பேசுதலில்’ இருந்து வந்த தேக்க நிலை உடைந்து இவ்வாறானதொரு புதிய போக்குத் தோன்றியிருக்கிறது. விமர்சனங்கள் குறித்து ஆழமான நம்பிக்கைகளும், அதற்கான தேடலும் காணப்படுகிறது என்பது நல்ல விடயமே.
முன்னெழுந்துள்ள விமர்சனங்களில் பிரதானமானது, புலிகளைப் புரிந்து கொள்ளல், “சனநாயகப் பண்புகளற்ற” புலிகளை ( மேலும் ஆழமான சொற்பதங்களும் பயன்படுத்தப்படுகின்றன) ஆதரித்து நின்ற தமிழ் மக்களைப் பரிந்து கொள்ளல், தெற்கின் ‘கொடுங்கோண்மையான” சிங்களப் பேரினவாத்தின் சமூக இருப்பைப் புரிந்து கொள்ளல், பிராந்திய-சர்வதேச நிலைமைகளைப் புரிந்து கொள்ளல் என்னும் விடயங்களேயாகும்.
தோன்றியுள்ள விமர்சனச் சூழலானது, தவிர்க்க இயலாத வகையில் இப் பிரச்சினைகளை அல்லது விடயங்களை சமூக உருவாக்கம் – சமூகக் கட்டமைவு – சமூக ஒழுங்கமைப்பு மற்றும் வர்க்க நிலையில் வைத்து நோக்கும் தேவையை உருவாக்கியிருக்கிறது. இத்தகைய தேவையை உருவாக்கியிருப்பவர்கள் மார்க்சியர்கள் அல்ல! மாறாக தமிழ் அரசியல் விமர்சகர்கள்!!
தமிழ் அரசியல் விமர்சகர்களில், “சனநாயகப் பண்புகளற்ற” புலிகளை ஆதரித்து நின்ற ‘உயர்மட்ட குழாத்தினர்’, புலிகள் தமிழ் சமூகத்தின் உருவாக்கம் என்ற வாதத்தை இன்று முதன்மைப்படுத்தி வருவது வெளிப்படையானது. இவர்களால், இந்த தமிழ்ச் சமூகத்தில் புலிகளல்ல வேறு எந்த இயக்கமாகவும் இருந்தாலும் இப்படியானதொரு இயக்கமாகவோ தோன்ற முடியும் என்ற வாதம் வலுவுடையதாக முன்வைக்கப்படுகிறது. அதற்குச் சான்றாக முன்னர் பல்வேறு இயக்கங்களும் செயற்பட்ட தன்மைகள் உதாரணங்களாகக் காட்டப்படுகின்றன. அறிஞர்களால் எமது சமூகம், படிநிலை அமைப்புச் சமூகம், இராணுவ வாதக் கண்ணோட்டமுடைய சமூகம், அச்சமூகத்திலிருந்து தோன்றிய இயக்கமும் அதன் பிரதிபலிப்பாகவே இருக்கும் என்று விளக்கம் கூறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
யாழில் மிகப்பிரபல்யமான ஒரு தற்காலப் புது மொழி, யாழ்ப்பாணத்தில் தமிழர்களின் தற்கால அடவாடித்தனங்களைப் பார்த்த சிங்கள இராணுவ வீரன் ஒருவன், “இந்தத் தமிழர்களுக்காகவா பிரபாகரன் போடினார்” என்று அமைகிறது. இதன் உள்ளர்த்தம் தமிழ்ச் சமூகம் பிழையானது என்பதே. ஆக, பிரச்சினையின் மையம் தமிழ்ச் சமூகமே என்று மார்க்சியர்களல்லாத அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.
மேலே கூறிய நிலைமைகளும், தமிழ் மக்களின் கடந்து நூற்றாண்டுகால அரசியல் வரலாறும் – இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னரான அரசியல் வரலாறும், பிரச்சினைகளை சமூக உருவாக்கம் மற்றும் வர்க்க நிலையில் வைத்து நோக்கும் தேவையை உருவாக்கியிருக்கிறது. இத்தேவை குறித்துப் பல்வேறு சமூக ஆய்வாளர்களும் பலமுறை வலியுறுத்தியிருக்கின்றனர். இதற்கு தவிர்க்க இயலாத வகையில் மார்க்சிய ஆய்வாளர்களின் அனுசரணை நமக்குத் தேவைப்படுகிறது.
ஆனால், ‘அத்தகைய ஆய்வுகள் போதுமானளவு இல்லை’ என்பதனால் நிலைமை இலகுவானதல்ல என்பதனை உணர்ந்து கொள்ள வேணடியிருக்கிறது. மேலும் கிடைக்கக் கூடிய ஆய்வுகளும் ‘சரிதிட்டமான விபரங்களை’ முன்வைத்து செல்லாமையும் நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது. இந்தப் பிரச்சினையின் ஆழத்தினை உணர்த்துகிறது பேராசிரியர் க. சிவத்தம்பி அவர்கள், “தமிழில் இலக்கிய வரலாறு – வரலாறெழுதியல் ஆய்வு”(1988) எனும் நூலில் தமிழ் நாட்டு நிலை பற்றிக் கூறிய கூற்று. அது,
“உற்பத்தி உறவுகளின் சரிதிட்டமான இயல்புகள் பற்றிய நுண்ணிய, காத்திரமான ஆய்வுகளைச் செய்யாதிருத்துங் கூட, சோழர்கால, விஜய நகர காலப் பொருளாதார அமைப்புக்களை நிலமானியப் பொருளதாரங்கள் என, திட்டவட்டமாக நிருபிக்கப்பட்ட உண்மை போன்று, எடுத்துக் கூறி வந்துள்ளோம். இப்பொழுது இதற்கு மாறுபாடான ஒரு கருத்துக் கூறப்பட்டுள்ளது.” என்பதாகும்.
இன்று நாம், பாட்டாளி வர்க்கப் புரட்சி, சனநாயக- பண்பாட்டுப் புரட;சி, தேசிய விடுதலை, சனநாயகப் புரட்சி, அபிவிருத்திப் பாதை போன்றன பற்றிக் கவனம் செலுத்த வேண்டியவர்களாக உள்ளோம்.
மறுபுறம் நிலமானிய அல்லது அரை நிலடமை சமூகத்தில் ஐரோப்பிய குடியேற்ற ஆட்சியாளர்களால் கட்டமைக்கப்பட்ட முதலாளித்தும் பற்றியும், மார்க்சினால் எடுத்துக் கூறப்பட்ட “ஆசிய முறைமை” , மற்றும் “ சுயதேவைப் பொருளாதாரம்” பற்றியும், றிபேய்ரோ(Riberio) வின் “தெய்வ ஆட்சி நீர்ப்பாசன அரசு” பற்றியும் , விற்கோவலின் “நீர்ப்பாசனவியல் சமூகம்” பற்றியும், கிழக்கு ஆபிரிக்கச் சமூகம் பற்றிய ஆய்வின் பொழுது பெறப்பட்ட ஒரு வகைமாதிரியான “கூறாக்கநிலை” அரசு (Segmentary State) பற்றியும் , “கீழைத்தேய ஏதேச்சதிகார-கொடுங்கோண்மை ஆட்சி” (Oriental despotism) பற்றியும் எனப் பல்வேறு வகை மாதிரிகள் குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும்.
மற்றொருபுறம் உள்ள சிக்கல் என்னவெனில், தமிழர் சமூக அமைப்புப் பற்றிய விளக்கங்கள் குறித்து அவதானிக்கிற போது, தென்னிந்தியச் சமூகம் ; ‘நிலமானிய அல்லது ‘அரை நிலமானிய’ சமூகமாக, சமூக-மார்க்சிய ஆய்வாளர்களால் விளக்கப்பட்ட நிலையில், அதற்கண்மையில் உள்ள இலங்கையின் தமிழ் சமூகத்தினதும் சமூக உருவாக்குமும் அத்தகையதாகத்தான இருக்க வேண்டும் என்ற ஒரு முடிவு மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்றே கருவேண்யிருப்பதாகும்.
நிலைமைகள் எளிமையானவையல்ல. ஆயினும் இவ்விடயம் குறித்து கனதியான கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. நாம் ஒரு பரந்த தேடலையும் விவாத்தினையும் தொடங்கவேண்டும்.







