தனிநாயகம் அடிகளார் பாடசாலை விழாவில் மனோ கணேசன்
தமிழர்கள் வணபிதா தனிநாயகம் அடிகளாரை அறியாமல் இருக்க கூடாது. அடிகளாரை அறியாத தமிழர்கள் உண்மைத் தமிழர்களாக இருக்கவும் முடியாது. உலக தமிழாராய்ச்சி இயக்கத்தின் ஸ்தாபகர் தனிநாயகம் அடிகளாரின் சொந்த ஊர் நெடுந்தீவு. அடிகளாரின் பெயர் சூட்டப்பட்ட பாடசாலைகள், யாழ்ப்பாணத்தின் தீவு பகுதிகளிலோ அல்லது யாழ்குடாவின் ஏனைய பகுதிகளிலோ இருக்கின்றனவா என எனக்கு தெரியாது. ஆனால் இன்று கொழும்பு தலைநகரிலே நாங்கள் வணப்பிதா கலாநிதி தனிநாயகம் தமிழ் வித்தியாலயம் என்ற பெயரை இப்பாடசாலைக்கு சூட்டுவதன் மூலமாக அடிகளாருக்கு உரித்தான கௌரவத்தை வழங்குகின்றோம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பு பொரளை வணாத்தமுல்லை ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்திற்கு, வணபிதா தனிநாயகம் தமிழ் வித்தியாலயம் என்ற பெயர்சூட்டும் விழாவிலே பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
விளை நிலத்தை உழுது நாற்று நடுவதை கூட்டங்கூட்டமாக ஆடிப்பாடி சந்தோஷமாக செய்யலாம். ஆனால் பயிர் வளர்ந்த பிறகு, பயிரோடு பயிராக தளைத்துவரும் களைகளை தேடி அகற்றுவதுதான் கஷ;டமான காரியமாகும். ஏனென்றால் நாற்றின் நடுவே களை பிடுங்க கைவைக்கும் பொழுது, அங்கே பாம்பு, தேள் என்ற விஷ ஜந்துக்களை எதிர்கொள்ள வேண்டிவரும். அதனால்தான் நாற்றுநடுவதற்கு வருகின்ற பெருங்கூட்டம், களை பிடுங்குவதற்கும், கிருமி நாசினி தெளிப்பதற்கும் வருவதில்லை. உண்மையை பேசுங்கள் என்றும், நீதியாக நடந்துகொள்ளுங்கள் என்றும் போதனை செய்வதற்கு நிறையபேர் இருக்கின்றார்கள். ஆனால் பொய்மையை எதிர்ப்பதற்கும், அநீதியை எதிர்ப்பதற்கும் எத்தனைபேர் இருக்கின்றார்கள்? இந்த கஷ;டமான காரியத்தை செய்து ஆபத்தில் விழுவதற்கு மிகப்பெரும்பாலானோர் முன்வருவதில்லை. எனவே இங்கேதான் மக்களின் வாக்குகளை பெற்று மக்கள் மன்றங்களுக்கு செல்லுகின்ற மந்திரிகளுக்கு கடமையாற்றுவதற்கான வேளை வருகின்றது. பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடுகளை செய்வது சாதனைகள் இல்;லை. ஒதுக்கீடுகளை எழுதி அனுப்புவதற்கு மந்திரிகள் தேவையில்லை. இதற்கு ஒரு எழுதுவினைஞர் போதும். மக்கள் பிரதிநிதிகள் என்றால் சவால்களை ஏற்று வெற்றிகரமாக காரியங்களை செய்து முடிக்கவேண்டும். அத்தகைய பல்வேறு காரியங்களை தலைநகரிலே நான் செய்துகாட்டியிருக்கின்றேன். இதில் ஒன்று, இந்த பாடசாலை சம்பந்தப்பட்டதாகும். கடந்த காலத்திலே இந்த பாடசாலை மூடப்பட இருந்தது. இப்பாடசாலையின் மைதானம் உட்பட்ட பௌதீக வளங்கள் பெரும்பான்மையினரால் அபகரிக்கப்பட இருந்தன. அவற்றை நான் தடுத்து நிறுத்தியிருக்கின்றேன். அதேபோல் இந்த பாடசாலை தொடர்பிலான எனது கனவை எங்களது மேல்மாகாணசபை உறுப்பினர் கலாநிதி நல்லையா குமரகுருபரன் இன்று நனவாக்கி காட்டியிருக்கின்றார். இதேபோல் கிருளபனையில் மூடப்படவிருந்த ஒரு தமிழ் பாடசாலையையும் அவர் மறுசீரமைத்து காப்பாற்றியுள்ளார். இவைகளையிட்டு கட்சி தலைவர் என்ற முறையில் நான் பெருமையடைகின்றேன்.
இந்த சவால்களை சந்தித்து மக்கள் பணி ஆற்றுகின்ற ஆற்றலை நாங்கள் தனிநாயகம் அடிகளாரை பார்த்துத்தான் கற்றுக்கொண்டோம். உலக தமிழாராய்ச்சி இயக்கத்தை உருவாக்க அவர் பட்டபாட்டை ஒவ்வொரு தமிழ் மாணவரும் அறிந்துகொள்ள வேண்டும். 1974ல் நான்காவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டை அன்றைய அரசாங்கத்தை எதிர்த்துகொண்டு யாழ்ப்பாணத்திலே பெரும் சவால்களுக்கு மத்தியிலே தனிநாயகம் அடிகளார் நடத்தி முடித்த சாதனையை ஒவ்வொரு தமிழ் மாணவரும் படித்து அறிந்துகொள்ளவேண்டும்.
2004ம் வருடத்தில் நான் ஒரு முறை நெடுந்தீவிற்கு சென்று அங்கு ஒரு நாள் தங்கியிருந்தேன். அப்போதுதான் அன்றைய பாராளுமன்றம் திடீரென கலைக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினராக நெடுந்தீவிற்கு சென்ற நான், படகிலே யாழ்ப்பாண கரைக்கு திரும்பிவரும்பொழுது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக திரும்பி வந்தேன். இன்றும் நான் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்தான். பதவிகள் வந்து, போவதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. பதவிகளில் இருக்கும் பொழுது என்ன செய்கின்றோம் என்பதுதான் முக்கியமாகும். நான் கொழும்பைவிட்டு வேறு மாவட்டத்திற்கு தேர்தலில் போட்டியிட சென்றதால்தான் இன்று நான் பாராளுமன்றத்தில் இல்லை. இதற்கு காரணம் நானேதான்.
அப்போது நெடுந்தீவிற்கு சென்றபொழுது, தனிநாயகம் அடிகளாரின் சொந்த ஊர் அதுதான் என நான் அறிந்திருக்கவில்லை. தற்பொழுது மீண்டும் நெடுந்தீவிற்கு செல்லவிரும்புகின்றேன். யாழ்ப்பாணத்திற்கு சென்று அங்கே தனிநாயகம் அடிகளாரின் பெயர் சூட்டப்பட்ட பாடசாலைகள் இருக்கின்றனவா என்று தேடிப்பார்க்க விரும்புகின்றேன்.
இன்று கொழும்பு தலைநகரிலே நாங்கள் வணபிதா கலாநிதி தனிநாயகம் தமிழ் வித்தியாலயம் என்ற பெயரை சூட்டி இந்த பாடசாலையின் எழுச்சிக்கு அடித்தளம் இட்டுள்ளோம். இனிமேல் இதை முன்னெடுப்பது உங்களது பொறுப்பாகும். இப்பாடசாலையில் கல்விபயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மிகவும் வறியவர்கள். எனவே இப்பாடசாலையின் பழைய மாணவர்களுக்கும், அதிபர் திருமதி. பிரபுதேவா, பிரதி அதிபர் திருமதி தியாகராஜா ஆகியோர் தலைமையிலான இப்பாடசாலை சமூகத்திற்கும் பாரிய பொறுப்புகள் இருக்கின்றன. வணபிதா தனிநாயகம் அடிகளாரின் பெயரிலே திரு. ராஜ்குமாரினால் முன்னெடுக்கப்படும் நிதியமும், தலைநகரிலே வாழ்ந்துகொண்டிருக்கக்கூடிய தமிழ் உணர்வாளர்களும் குறிப்பாக யாழ்ப்பாண தீவு பகுதிகளை பூர்வீகமாகக்கொண்ட நன்கொடையாளர்களும் இப்பாடசாலையை வளர்த்து எடுப்பதற்கு உதவிடவேண்டும். அதுதான் தமிழ் மூதறிஞர் வணபிதா தனிநாயகம் அடிகளாரின் நினைவுகளுக்கு நாம் செலுத்தும் மரியாதையாகும்.
தமிழ் மண் மறைத்த மனிதர்களில் ‘தனிநாயகம்’ ஒருவர்.மனோ கணேசன்! எங்கும் தேடாதீர்கள்;அது கிடைக்காது;ஏனெனில் அது பெயரின் மகிமை.
நெடுந்தீவில்ப் பிறந்த வணபிதா தனிநாயகம் அடிகளாரை உலகம் மறந்து போய்விட்டது. நெடுந்தீவையும், நெடுந்தீவில் தோன்றி மானிடக்குலத்து மகிமையைப் பேணத்துடித்த பல நல்லமனிதர்களையும் கூட உலகம் கண்டு கொள்ளவில்லை. இற்றைக்கு 26 வருடங்களுக்கு முன்னதாக வேண்டுமென்றே கடற் பெரு வெளியில் சிங்கள இனப்போக்குவாதிகளால் குமுதினிப்படகோடு கொன்றொளிக்கப்பட்ட அத்தீவு மக்களுக்கு இற்றைவரைக்கும் நீதியும் நியாயமும் கிடைக்கவில்லை. ஆக தமிழர்கள் தனிநாயம் அடிகளாரை அறியாமல் இருக்க கூடாது என்கின்ற மனோ கணேசன்
அவர்களின் சீற்றம் மதிக்கத்தக்கதென்ற போதிலும் பாடசாலைகளுக்குப் பெயர் வைப்பதாலும் எந்தப்பாடசாலைக்கு எந்தபெயர் என்று அவதானிப்பதாலும் மனித விடியல் பிறந்து விடப்போவதில்லை.எனினும் அவரின் நெடுந்தீவு பற்றிய அக்கறைக்கு என் வாழ்த்துகள்