தமிழருக்குரிய சமத்துவ அந்தஸ்து வழங்கப்பட்டாலே பிரச்சினைக்கான தீர்வுத்திட்டங்களை சுலபமாக அணுகலாம்

க்ரைஸ் அமைப்பின் பணிப்பாளர் பிரான்சிஸ் ஸ்டுவர்ட் கூறுகிறார் இலங்கையின் தேசியப் பிரச்சினைக்குச் சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு இடையில் காணப்படும் அரசியல் சமநிலையற்ற தன்மையே முதன்மையான காரணியென ஒக்ஸ்போர்ட்டை மையமாகக் கொண்டியங்கும் க்ரைஸ் அமைப்பின் பணிப்பாளர் பிரான்சிஸ் ஸ்டுவர்ட் தெரிவித்துள்ளார்.
அரசியல், பொருளாதாரம், சமூகவியல் மற்றும் கலாசாரம் போன்ற பல்வேறு பரிமாணங்களில் அரசியல் சமநிலை பேணப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆட்சி உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசியல் அதிகாரங்கள் குறித்த ஒரு பிரிவிடம் காணப்படுவதாகவும் ஏனைய பிரிவுகளுக்கு எந்தவொரு அதிகாரமும் கிடைக்கப்பெறாத நிலை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இலங்கையில் நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
“இடைச்சமநிலையின்மை மற்றும் பல்லின மக்களுக்கு இடையேயான முரண்பாடுகளைப் புரிந்துகொள்ளல்’ என்ற செவ்விக்காக இந்தத் தகவல்களை ஸ்டுவர்ட் வெளியிட்டுள்ளார். ஆச்சரியப்படும் வகையில் இந்த நிலைமையை உலக நாடுகள் சரியான முறையில் புரிந்துகொள்ளவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பல்லின மக்கள் வாழும் ஓர் சமூகத்தில் ஜனநாயகம் என்ற எண்ணக்கரு மிகச் சூட்சுமமாக அணுகப்படவேண்டும் எனவும், அனைத்து இன மக்களுக்கும் சரியான முறையில் உரிமைகள் கிடைக்கப்பெறாவிட்டால் அந்த நிலைமை ஜனநாயகத்தின் முதல் எதிரியாக மாறிவிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பிட்ட ஓர் சமூகத்தில் ஓர் பெரும்பான்மை இனம் காணப்பட்டால் அந்த இனம் ஏனைய சிறுபான்மை சமூகங்களை மிக எளிதில் கட்டுப்படுத்தக்கூடிய நிலைமை உருவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், பல்லின மக்கள் வாழும் சமூகத்தில் அதிகாரப்பகிர்வு மிகவும் இன்றியமையாத ஒன்று எனவும், அவ்வாறானதொரு பொறிமுறை இல்லாதபட்சத்தில் முரண்பாடுகள் வெடிக்க வழிகோலும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அநேக சந்தர்ப்பங்களில் அரசியல் சமநிலையற்ற தன்மையே பல்வேறு முரண்பாடுகளுக்கும் கிளர்ச்சிகளுக்கும் முதன்மை ஏதுவாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இனத்துவ அடையாளங்களைச் சமநிலையில் பேணுவதில் ஏற்படும் குறைபாடுகள் சர்ச்சைகளை ஏற்படுத்துவதாகவும், இதற்கு இலங்கையை ஓர் சிறந்த உதாரணமாகக் குறிப்பிடமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் சிங்களவர்களைவிட தமிழர்களுக்கு சிறப்புரிமை வழங்கப்பட்டிருந்ததாக ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளதெனவும் தமிழ் மக்களின் கலாசார தனித்துவங்களைப் பேணுவதற்கு இலங்கை அரசாங்கங்கள் எவ்வித முனைப்பும் காட்டவில்லை எனவும் இந்த நிலைமை நில ரீதியான பிளவைக் கோருமளவிற்கு வியாபித்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்வி, தொழில்துறை, பொருளாதார நிலைமை போன்றவற்றில் தமிழர்களுக்கு உரிய சமத்துவ அந்தஸ்து வழங்கப்படவேண்டும் எனவும் இவ்வாறு வழங்கப்படுவதன் மூலம் பிரச்சினைக்கான தீர்வுத்திட்டங்களை சுலபமாக அணுக முடியும் எனவும் பிரான்சிஸ் ஸ்டுவர்ட் தெரிவித்துள்ளார்.