தமிழக காவல்துறையில் வெவ்வேறு காலக்கட்டங்களில் பாலியல் சர்ச்சைகள் எழுந்தாலும் முதன் முதலாக சிறப்பு டிஜிபி மீதே பாலியல் புகார் எழுந்துள்ளது தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பணியிடங்களில், வசிப்பிடங்களில் பொது வெளியில் என பெண்கள் சந்திக்கும் பாலியல் வன்கொடுமைகள அதிகம். குழந்தைகள் முதல் முதிய வயதுடைய பெண்கள் வரை வயது வேறுபாடின்றி பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகிறார்கள் பெண்கள்.
தமிழக சிறப்பு டி.ஜி.பியாக இருப்பவர் ராஜேஷ் தாஸ், இவர் முன்னாள் சுகாதாரத்துறை அதிகாரி பீலா ராஜேஷின் கணவர். பீலா ராஜேஷ் மீதே பல்வேறு முறைகேடு புகார்கள் கூறப்பட்டது. இவர்கள் இருவருமே அரசியல் செல்வாக்குள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ வின் மகள்தான் பீலா ராஜேஷ்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் சென்னைக்கு அருகே கட்டியுள்ள பண்ணை வீட்டில் முருங்கை மரத்தில் சில சிறுவர்கள் முருங்கைக்காய் திருட அவர்களை பிடிக்க ராஜேஷ் தாஸ் தனி போலீஸ் படையை அமைத்து தேடி அவர்களை கண்டு பிடித்து சிறையில் தள்ளினார். இது எப்போது சில ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
2001-ஆம் ஆண்டு ஒரு பெண் எஸ்.பியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக இவர் மீது எழுந்த புகாரையடுத்து ஜெயலலிதாவால் ஆறு மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் மீண்டும் பதவிக்கு வந்தவர் தென் மாவட்டங்களில் பொருப்பு வகித்தார். அப்போது கூடங்குளம் அணு உலை போராட்டம் நடந்தது. இடிந்தகரைக்குள் புகுந்து துப்பாக்கியைக் காட்டி மிரட்ட கடலோடிகளோ ராஜேஷ் தாஸிடம் இருந்த துப்பாக்கியை பிடுங்கி விட்டு அவரை துரத்தி விட்டார்கள். துப்பாக்கி இல்லாமல் திருபிப் போக முடியாது என்பதை புரிந்து கொண்ட ராஜேஷ் தாஸ் பின்னர் தூத்துக்குடி பிஷப்பை சந்தித்து துப்பாக்கியை வாங்கிக் கேட்டார்.
இந்த ராஜேஷ் தாஸ் எடப்பாடி பழனிசாமி வந்த பிறகு கூடுதல் டிஜிபியாக பதவி பெற்றார். ஆனால் பெண்கள் மீதான அவரது பார்வையும் பழக்கவழக்கங்களும் மாறவில்லை என்று போலீஸ் துறைக்குள்ளேயே புலம்புகிறார்கள்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்டிருக்கும் பெண் டிஜிபி ஒருவரிடம் மிக மோசமான முறையில் பணியிடத்திலேயே நடந்திருக்கிறார் ராஜேஷ் தாஸ். இப்படி பலரிடமும் இவர் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பெண் அதிகாரி துணிச்சலாக இவர் மீது புகார் அளித்திருக்கிறார். ஆனால், இந்த புகாரை அரசும் காவல்துறையும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் இந்த விவகாரம் ஊடகங்களில் வெளி வந்து விட எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கடுமையான அறிக்கையொன்றையும் விட்ட பிறகு இந்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஏ.டி.ஜி.பி சீமா அகர்வால், ஐ.ஜி அருண், டி.ஐ.ஜி சாமுண்டீஸ்வரி உட்பட 6 பேர் இந்தக் குழுவில் இடம் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை முடியும் வரை ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.ஆனால் அவரை பதவியில் நீட்டிக்க அனுமதித்து விட்டு விசாரணைக் கமிஷனும் அமைத்திருப்பது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.