திமுகவின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு தலைமையிலான பத்து பேர் கொண்ட குழுவினர் நாளை இலங்கைக்கு ஐந்து நாள் பயணமாகச் செல்கின்றனர். ஐந்து பேர் திமுக உறுப்பினர்கள். நான்கு பேர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்கள். ஒருவர் திருமாவளவன் என ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் எம்பிக்களின் பயணமாக இது நடைபெறுகிறது. வன்னிப் போரில் இந்திய காங்கிரஸ் கட்சியின் பங்கும், அதன் டில்லித் தலைமைக்கு ஏற்றவாறு எப்படி ஈவிரக்கமற்ற முறையில் தமிழக காங்கிரஸ்காரர்களும் நடந்து கொண்டார்கள் என்பது குறித்தும் ஏராளமாக எழுதப்பட்டாகி விட்டது. மாநில முதல்வர் கருணாநிதி போரின் போது நடந்து கொண்டவிதமு, அதையொட்டி உலக்த் தமிழர்களின் அவருக்கு எழுந்துள்ள கசப்பும் கூட ஏராளமாக படித்த விஷயமாகிவிட்ட சூழலில், மூன்று லட்சம் வன்னி மக்கள் அவர்களின் வீடு, நிலம், உறவுகளை இழந்து முகாம்களுக்கு வந்து சேர காரணமான காங்கிரஸ் கட்சியின் தமிழக ஏஜெண்டுகளே இப்போது வன்னி மக்களை பார்வையிடச் செல்லும் கொடுமையை என்னவென்று சொல்வதென்று தெரியவில்லை. ஒரு நாடாளுமன்ற பதவிக்காக இந்த பதவிப் பித்தர்களோடு கூட்டு வைத்த திருமாவளனும் இவர்களோடு சேர்ந்து இயங்க வேண்டிய காலக்கொடுமை நேர்ந்துள்ளது.
இப்பயணத்திற்கு முன்னரே முன்னாள் துணைத்தூதர் அம்சா கருணாநிதியின் மகள் கனிமொழியைச் சந்தித்து பேசியதும், இப்போது புதிய தூதராக வந்துள்ள வடிவேல் கிருஷ்ணமூர்த்தி திமுக அமைச்சர்களோடு நெருங்கிப் பழகுவதும் கண்கூடாகத் தெரிகிற நிலையில், முகாமிற்குச் செல்கிற சர்வதேச ஊடகவியளார்கள். முகாம்களை வதை முகாம்கள் என்றே சொல்கிறார்கள். சென்னை துணைத்தூதர் வடிவேலின் வார்த்தைகளில் சொல்லப் போனால், மனிதர்கள் அடைக்கப்பட்டுள்ள மிருகக்காட்சிச் சாலை.
தமிழக எம்பிக்கள் முகாம்களை பார்வையிட்டு விட்டு அதிபர் ராஜபட்சேவையும் சந்திக்கிறார்களாம். இவர்கள் மக்களிடம் என்ன பேசுவார்கள். ராஜபட்சேவிடம் என்ன பேசுவார்கள். இவர்களுடம் ஊடகவியளார்கள் யாரேனும் செல்கிறார்களா? அப்படி என்றால் அவர்கள் யார்? என்கிற கேள்விகளுக்கு நம்மிடம் பதிலேதும் இல்லை ஏனென்றால் இப்பயணமே இரகசியப் பயணம் போலத்தான் இருக்கிறது. வெளிப்படையாக எதுவுமே இல்லை.
இந்தக் குழுவிற்கு தலைமையேற்றிருக்கும் டி.ஆர். பாலுவிடம் பத்திரிகையாளர்கள் இலங்கைக்கு தூதுத்துகுழுவை அனுப்ப நடவடிக்கை எடுப்பீர்களா? என்று கேட்டதற்கு. டி.ஆர். பாலு ” ஒரே நாளில் கதவை உடைத்துக் கொண்டு இலங்கைக்கு பாய முடியாது” என்று ஏளனம் செய்தார். இவரது தலைவர் கருணாநிதியிடம் ஒரு பத்திரிகையாளர் “ஈழப் பிரச்சனையில் அடுத்த என்ன? என்று கேட்டார்.கருணாநிதி சொன்னார் “அடுத்து காப்பி சாப்பிட்டு விட்டு கிளம்பலாம்” என்று நக்கல் செய்தார். இவர்களின் ஏளனத்துக்கும்,,, எக்கலிப்புக்கும் ஆளான அம்க்களை இவர்கள் சென்று பார்த்து என்ன சான்றிதழைக் கொடுக்கப் போகிறார்களோ.. பல நேரங்களில் கண்ணீரே கசந்து விடுகிறது. இல்லையா?