மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் மெட்ராஸ் மாகாணம் என்ற சொல் அழகிய தமிழில் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் பெற்றது. தேசியக் கட்சிகள் பெரிதாக செல்வாக்கு செலுத்த முடியாத அளவு தமிழுணர்வும் மாநில உணர்வும் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் நிலையில் சாதி மதத்தை வைத்து அரசியல் செய்யும் பாஜக தமிழகத்தை சிதைக்கப் பார்க்க்கிறது.
UNION GOVERNMENT என்ற சொல்லை தமிழில் ஒன்றிய அரசு என்று திமுக குறிப்பிடுவதில் கடுப்பான பாஜகவினர் மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் திணறி வருகிறார்கள். சமீபத்தில் ஒன்றிய இணை அமைச்சராக பதவியேற்ற பாஜக தலைவர் எல்.முருகன் அமைச்சரவை விண்ணப்பித்தில் மாவட்டம் என்ற பிரிவில் கொங்குநாடு என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கொங்குநாடு என்று தமிழகத்தில் எந்த ஒரு மாவட்டமும் இல்லாத நிலையில் கொங்கு நாடு என அவர் குறிப்பிட்டிருப்பது கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாகப் பிரிக்க மத்திய அரசிடம் திட்டம் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
கல்வி அறிவும் ஓரளவு அரசியல் விழிப்புணர்வும் அடைந்துள்ள எந்த மாநிலங்களிலும் பாஜக பெருமளவு வெற்றி பெறுவதில்லை. ஒரு ஆச்சரியமான விஷயம் கர்நாடகம் உட்பட பிற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை உடைத்து தங்களை வளர்த்துக் கொண்டது போலக் கூட தமிழக காங்கிரஸ் கடசியை பாஜகவால் பெரிய அளவு உடைக்க முடியவில்லை. ஆனால் புதுச்சேரியில் அதைச் செய்து ஆட்சியைப் பிடித்துள்ளார்கள். விரைவில் ரெங்கசாமியை தூக்கி கடாசி விட்டு ஆட்சியை கைப்பற்றிக் கொள்வார்கள். தமிழகத்தில் அதிமுக தயவில் நான்கு தொகுதிகள். கொங்குநாடு என்ற ஒன்று தமிழகத்தில் இல்லை. அப்படி ஒன்றை சட்டத்திற்கு புறம்பாக பாஜக தலைவர் எல். முருகன் உருவாக்குகிறார். அவர் அமைச்சராக பதவியேற்ற படிவத்தில் மாவட்டம் என்ற இடத்தில் கொங்கு நாடு என்று பதிந்திருப்பது சட்ட ரீதியாக கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டியது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் சாதி, மதம் உள்ளிட்ட குறுகிய நலன்களுக்காக தமிழ்நாட்டை பிரிப்பதை எவரும் அனுமதிக்கக் கூடாது. சாதி வெறியர்கள் ஏற்கனவே குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுகிற முட்டாப் பயல்கள். அவர்களால் அவர்களின் சாதி மக்களையே வெல்ல முடியவில்லை. சாதி கடந்த தமிழக மக்கள் மனங்களை வென்ற அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, வரிசையில் ஸ்டாலின் அவர்கள்தான் பரந்து பட்ட மக்கள் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்திருக்கிறார்.
அதிமுகவில் இன்று பொதுவான தலைவர் என எவரும் இல்லை. திமுக அப்படி பொதுத் தன்மையோடு இருப்பது இவர்களின் கண்களை உறுத்துவதால்தான் கொங்குநாடு என விளையாடிப் பார்க்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரு பதில் இருக்கிறது.கொங்கு மண்டலத்தில் உள்ள அத்தனை மாநகாரட்சிகளையும். ஒன்றியங்களையும் திமுக கைப்பற்றுவது ஒன்றுதான் இதற்கெல்லாம் ஒரே பதில்.