முத்துக்குமார், அப்துல் ரவூஃப், பள்ளப்பட்டி இரவி, சீர்காழி எத்திராசன், சென்னை அமரேசன், வானியம்பாடி சீனிவாசன், கொத்தமங்கலம் பாலசுந்தரம் ஆகியோர் உள்ளிட்ட 19 பேர் ஈழத்தில் தமிழின மக்கள் இனப் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து தீக்குளித்து உயிர் நீத்தனர். அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில், பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு தமிழர் அமைப்புகளை ஒன்றிணைத்து வீரத் தமிழன் முத்துக்குமார் நினைவேந்தல் குழு இன எழுச்சி சுடர் ஊர்திப் பயணம் எனும் பிரச்சார ஊர்திப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முத்துக்குமார் பிறந்த தூத்துக்குடி மாவட்டம் கொளுவைநல்லூரில் இருந்தும், கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து இந்த நினைவு சோதி ஊர்த் பிரச்சார நெடும் பயணம் கடந்த 24, 25ஆம் தேதிகளில் தொடங்கி, கடந்த 5 நாட்காள தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பிரச்சாரம் செய்து வந்தது. முத்துக்குமாரைத் தொடர்ந்து உயிர் நீத்த தியாகிகள் ஒவ்வொருவரின் ஊரையும் தொட்டுக்கொண்டு, அவர்களின் வீடுகளுக்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, தொடர்ந்த இந்த பிரச்சார ஊர்திகள் இன்று முத்துக்குமார் உடல் வைக்கப்பட்டிருந்த சென்னை கொளத்தூருக்கு வந்தடைந்தன.
சென்னையில் பல்வேறு இடங்களில் முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. பல இடங்களில் அவருடைய உருவப் படத்திற்கு மாலையிட்டு வைத்திருந்தனர். இதேபோல் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முத்துக்குமார் உள்ளிட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.