சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி கர்நாடக அரசு நேற்று நள்ளிரவு முதல் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளது. இரண்டு அணைகளில் இருந்து வினாடிக்கு 9,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருவதால் மைசூர், மாண்டியா மாவட்டங்களிலும், தமிழக – கர்நாடக எல்லை பகுதியிலும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முதல்-மந்திரி ஜெகதீஷ் பெங்களூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை மீறமுடியாது. 3 நாட்களுக்கு மட்டும்தான் தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் திறந்து விடப்படும். இதனால் கர்நாடக விவசாயிகள் அமைதிகாக்க வேண்டும். இன்னும் 3 தினங்களில் சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வு மனுதாக்கல் செய்யப்படும்.
காவிரியில் நேற்றிரவு தண்ணீர் திறந்து விடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 8.30 மணி அளவில் மைசூர், சாம்ராஜ் நகர் பகுதியில் தமிழகத்துக்கு பஸ்கள் இயக்க கூடாது என கூறி கன்னட அமைப்பினர் ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து, மைசூர் செல்லும் தமிழக அரசு பஸ்கள் சத்தியமங்கலம் டெப்போவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. பண்ணாரி, திம்பம், ஆசனூர், காரப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் பதற்றத்தை தணிக்க தமிழக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். கர்நாடக மாநில எல்லையிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் திம்பம் மலை பாதையில் நீண்ட வரிசையில் கனரக வாகனங்கள் நிற்கின்றன.