நாட்டில் இன்று இடம்பெற்ற அடையாளப் பணிப்புறக்கணிப்பு காரணமாக கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டது. முற்பகல் 10 மணியளவில் மத்திய தபால் பரிமாற்ற மையத்திற்கு சென்ற தபால் தொலைத் தொடர்புகள் அமைச்சர் மகிந்த விஜேசேகர பணியில் ஈடுபட்டிருந்த சில ஊழியர்களை கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். நேற்று நள்ளிரவு 12 மணிமுதல் இன்று மற்பகல் 10 மணிவரை கொழும்பு மத்திய தபால் பரிமாற்று மையத்தில் இருந்து ஒரு தபாலேனும் வெளியில் செல்லவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இன்றைய அடையாள பணிப்புறக்கணிப்பு பாரிய வெற்றி தந்துள்ளதாக இலங்கை தபால் ஊழியர் சங்கத்தின் செயலாளர் ரோஹண பெர்ணாந்து தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பெருந்தோட்ட பகுதிகளில் இன்று நடைபெற்ற அடையாளப் பணிப்புறக்கணிப்பு 99 வீதம் வெற்றியளித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனவிரட்ன மற்றும் ஜே.வீ.பீயின் பெருந்தோட்ட தொழிற்சங்கத் தலைவர் ராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். தொழிற்சங்க நடவடிக்கை வெற்றியளிக்கவில்லை என அரசாங்கம் தெரிவிப்பது முற்றும் முழுதான பொய் எனவும் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட அனைவருக்கும் தமது கட்சியின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் செனவிரட்ன குறிப்பிட்டுள்ளார். எதிhக்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஊழியர் அச்சுறுத்தி, அவர்களை பணிக்கு திரும்புமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் லக்ஸ்மன் செனவிரட்ன கூறியுள்ளார்.