இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதாக உதட்டளவில்தான் மத்திய அரசு கூறுகிறது என டி.ராஜா கூறினார்.
உண்மையிலேயே அக்கறை இருந்தால் பாக் நீரிணையில் உள்ள கச்சத் தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்திய மீனவர்களுக்கான பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் இலங்கை அரசுடன் மேற்கொண்ட கச்சத்தீவு உடன்பாட்டை காரணம் காட்டி, அதை மறுபரிசீலனை செய்ய முடியாது என மத்திய அரசு கூறுகிறது.
உலகில் பல நாடுகள், இதுபோன்ற உடன்படிக்கைகளைத் திருத்தியும், திரும்பப் பெற்றும் உள்ளன. இந்தியா கூட நேபாளம், பூடான் போன்ற நட்பு நாடுகளுடன் மேற்கொண்ட பல உடன்படிக்கைகளை திருத்தியும், திரும்பப் பெற்றும் உள்ளது.
கச்சத்தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் இந்திய மீனவர்களுக்கு மீன்பிடி உரிமை மறுக்கப்பட்டால், இலங்கை அரசுடனான உடன்படிக்கை முறித்துக்கொள்ளப்படும் என பகிரங்கமாக எச்சரிக்க வேண்டும்.
நெறிமுறையை மீறும் இலங்கை கடற்படை: கடல் பரப்பில் தத்தளிக்கும் அல்லது திசைமாறிப் போகும் மீனவர்களின் உயிருக்கு ஊறு விளைவிக்கக்கூடாது என்பது சர்வதேச கடல் பாதுகாப்பு நெறிமுறையாகும். ஆனால், அதை மீறி இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது.
சில தினங்களுக்கு முன்புதான், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இலங்கை சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அந்த பயணத்தைக் கேலிக் கூத்தாக்கும் வகையில் தமிழக மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தனது குடிமக்கள் தாக்கப்படுவதை இந்தியாவுக்கே இழைக்கப்படும் அவமானமாகக் கருதாமல் மத்திய அரசு இப்பிரச்னையை மென்மையாக அணுகுவது ஏமாற்றம் அளிக்கிறது என்று டி. ராஜா கூறினார்.
சில தினங்களுக்கு முன்பு, ராமேஸ்வரம் மீனவர்கள் நடுக்கடலில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். செவ்வாய்க்கிழமையன்று காலை, நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் பெட்ரோல் குண்டுகளை வீசியதாகக் கூறப்படுகிறது.
இது எங்கள் தலைஎழுத்து
என்னிக்கு எங்க பிணம் கரைஏறுமோ
அன்றைக்கு கண்டனம் என்ற வார்த்தை எங்கள் வாழ்க்கையை முடித்து வைக்கும் (இந்தியா)