இலங்கையில் ராஜபக்சவைப் போர்க்குற்றத்திற்காகத் தண்டிக்கப் போகிறோம் என புலம்பெயர் அரசியல் அமைப்புக்கள் ஒரு புறத்தில் கூற மறுபுறத்தில் அதனாலேற்படும் அனுதாப அலையைப் பயன்படுத்தி ராஜபக்ச இலங்கையில் வாக்குகளைப் பெற்றுக்கொள்கிறார். இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பினராக இல்லாத காரணத்தால் போர்க்குற்றத்திற்கான தண்டனையை வழங்க வாய்ப்புக்கள் இல்லை. நீண்டகாலமெடுக்கும் விசாரணைகளை மட்டுமே நடத்த முடியும். இவ்வாறான விசாரணை ஐ.நா இனால் நடத்தப்பட்டு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டாயிற்று. நடவடிக்கை மட்டும் எடுக்கப்படவில்லை.
பிரித்தானியா சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பு நாடு. அந்தவகையில் பிரித்தானியப் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட முடியும். ஈராக்கில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதற்கான விசாரணைகளின் முடிவின் அடிப்படையில் சில அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் பிரித்தானியாவில் தண்டிக்கப்படலாம் எனக் கருதப்படுகின்றது. ஆனால், போர்க்குற்றங்களின் சூத்திரதாரியான பிரித்தானியாவின் முன்னை நாள் பிரதமர் ரொனி பிளேர் இன்னும் தண்டிக்கப்படவில்லை.
இந்த நிலையில்ன் பிரித்தானியாவில் உணவகம் ஒன்றில் வேலைபார்க்கும் ஒருவர் ரொனி பிளேரை கைது செய்ய முற்பட்டிருக்கிறார். ஈராக்கில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டமைக்காக கைது செய்வதாகக் கூறி பிளேரை கைது செய்ய அவர் முற்பட்டிருக்கிறார்.
ருவிக்கி கார்சியா என்பவர் லண்டனில் உள்ள உணவகம் ஒன்றில் மதுபானம் வழங்குபவராக வேலைசெய்கிறார். பிளேர் அவர் வேலை செய்யும் உணவகத்தில் உணவருந்திக்கொண்டிருக்கும் போதே கைது செய்ய முற்பட்டுள்ளார்.
பிளேர் மேலும் எட்டுப் பேருடன் உணவருந்திக்கொண்ட்ருந்த வேளையில் அவரின் தோழில் கைவைத்த கார்சியா, ஈராக்கில் படைகளை அனுப்பி போர் செய்து சமாதானத்திற்கு எதிராகப் போர்தொடுத்ததற்காக உங்களைக் கைது செய்கிறேன். இது மக்கள் கைது. என்னுடன் போலிசிற்கு வந்து உங்கள் நியாயத்தைச் சொல்லுங்கள் என்றார்.
அதற்குப் பதிலளித்த பிளேர் பேய்க்குச் சமனான சதாம் அகற்றப்பட வேண்டியவரில்லையா எனக் கேள்வியெழுப்பினார். பதிலளித்த கார்சியா, சட்டவிரோதமான போரினால் அல்ல என்றார். பின்னர் சிரியா தொடர்பாகப் பேச்சை மாற்றிய ரொனி பிளேர் அதனைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். பிளேரின் மெய்க்காப்பாளர்களின் உதவியோடு கார்சியா வெளியேற்றப்பட்டார்.