இலங்கை அரசாங்கம் தமது காவலில் உள்ள 12,000 தமிழ் இளைஞர்கள், யுவதிகள் பற்றிய மௌனத்தைக் கலைத்தல் வேண்டும் என பிரித்தானியாவில் உள்ள ‘தமிழ் தகவல் நடுவம்’ வேண்டுகோள் விடுத்துள்ளது.
யுத்தம் முடிவடைந்து ஒரு வருடம் நிறைவேறியுள்ள இக்கட்டத்தில் மனித உரிமை பேணும் சமூகம், குறிப்பாக புலம்பெயர் தமிழ்மக்களிடையே உள்ள பல்வேறு குழுக்கள் ஒன்றிணைந்து வெளியார் தொடர்பின்றித் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் விபரங்களை வெளியிடும்படி இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென ‘தமிழ் தகவல் நடுவம்’ கேட்டுள்ளது.
கைதிகளைத் தடுப்புக்காவலில் வைத்திருப்பதை மறுத்தும், அவர்களின் இருப்பை உறுதிப்படுத்தாமலும், அவர்களின் இருப்பிடத்தையும் நிலைமைகளையும் வேண்டுமென்றே மறைத்தும் அரசாங்கம் தொடர்ந்து செயற்பட்டு வருகிறது.
இந்த வெளிஉலகத் தொடர்பற்ற சிறைக்காவல், ஒரு கைதியின் உரிமைகளான, நடுநிலையான வழக்காடல், தனக்கு விருப்பமான வழக்குரைஞரைத் தேர்ந்தெடுத்தல் ஆகியவற்றிற்குத் தடையாக நிற்கிறது. அத்துடன் குடும்ப அங்கத்தவர்கள் தமது உறவினர்களைச் சந்திக்க முடியாமல் உள்ளது. கைதிகளின்மீது அழுத்தம் கொடுப்பதற்காக மருத்துவ வசதிகள் பயன்படுத்தப்படுகிறது.
செஞ்சிலுவைச் சங்கம், தமக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளோரில் ஒரு சிலரை மாத்திரமே அணுகக்கூடியதாக இருந்தது என முறைப்பாடு செய்துள்ளது. ஜெனீவா விதிமுறைகளின்படி, போர்க்கைதிகள் சர்வதேச சட்டதிட்டங்களுக்கமைய நடாத்தப்படுகிறார்களா எனக் கண்காணிக்கும் பொறுப்பை சர்வதேச சமூகம் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்துள்ளது. இருந்த போதிலும் கைதிகளைப் பார்வையிடுவதற்கு செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அநுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்த வெளிஉலகத் தொடர்பற்ற தடுப்புக்காவல் கைதிகள் துன்புறுத்தப்படுவதற்கும், சித்திரவதைக்கு உட்படுத்துவதற்கும் ஏதுவாக அமைகிறது. தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டம், கைதிகளை நீண்டநாட்களுக்கு தடுத்து வைப்பதற்கும், அதன் விளைவாக சித்திரவதை, காணாமற்போதல், சட்டத்தை மீறிய கொலைகள் ஆகியவை நடப்பதற்கும் உதவுவதாக அமைகின்றது.
வெளியார் தொடர்பற்ற தடுப்புக்காவலைத் தடைசெய்வதற்கு, வேறுபட்டதும் இணைப்புடையதுமான செயற்பாடுகள் தேவைப்படுகின்றன. அத்துடன் தடுப்புக் காவலில் உள்ளோர் யாவருக்கும் அவசரமாக சுயாதீனமான வழக்கறிஞர்களுடைய ஆலோசனைகள் கிடைப்பதற்கு வழிசெய்தல் அவசியம். அதற்குத் தேவையான வழிகாட்டி நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
தமது பிள்ளைகள் அல்லது கணவன்மார்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை அறியாது மனநிம்மதியை இழந்த ஏராளமான பெற்றோரும் மனைவியரும் செய்வதறியாது உதவிகேட்டு ‘தமிழ் தகவல் நடுவத்திடம்’ வேண்டுகோள் விடுத்துள்ளனர். “தயவு செய்து, எமது உறவினர்களுக்கு என்ன நடந்தது? என்பதை அறிய எமக்கு உதவி செய்யுங்கள். அவர்கள் கொல்லப்பட்டிருந்தால் அதையாவது அரசாங்கம் உறுதி செய்யட்டும். எமது மனதை ஆற்றிக்கொள்ள முயற்சிப்போம்.” என்பதே அவர்களது அழுகுரலாக உள்ளது.
இலங்கையில் தடுப்புக் காவலில் உள்ள மக்களது உரிமைகளைப் பாதுகாக்க எம்முடன் இணைந்து நில்லுங்கள் என்பதே எமது வேண்டுகோளாகும்.