தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களை விடுவிக்க சர்வதேச அழுத்தம் : ரஜீவ விஜேசிங்க

வன்னிப் பகுதியில் இடம்பெயர்ந்திருக்கும் மக்களை விடுவிப்பதற்கான அழுத்தத்தை சர்வதேச சமூகம் விடுதலைப் புலிகளுக்குக் கொடுக்கவேண்டும் என அரசாங்க சமாதானச் செயலகத்தின் தலைவர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

வன்னிப் பகுதியிலுள்ள மக்கள் விடுதலைப் புலிகளால் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டியிருக்கும் அவர், அங்குள்ள மக்களைப் பாதுகாக்கவேண்டிய முழுப் பொறுப்பும் அரசாங்கத்துக்கு இருப்பதால் இடம்பெயர்ந்த மக்களை அங்கிருந்து வெளியேற்றி மீளக்குடியமர்த்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்திருப்பதாகக் கூறினார்.

அப்பகுதி மக்கள் விடுவிக்கப்பட்டால் அவர்களை பாதுகாப்பான சூழலில் மீளக்குடியமர்த்த அரசாங்கம் தயராக இருப்பதாகவும் “அவர்கள் எமது மக்கள் ஆனால் அவர்களை பயங்கரவாத அமைப்பினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் பலவந்தமாத் தடுத்துவைத்துள்ளனர்” எனவும் விஜேசிங்க தெரிவித்தார்.

அதேநேரம் வன்னிப் பகுதியில் இடம்பெயர்ந்து அங்கிருந்து வெளியேறமுடியாதிருக்கும் மக்கள் போதியளவு மனிதநேய உதவிகளைப் பெற்றுக்கொள்வதாக அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார்.

பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் மக்களுக்காக அத்தியாவசியப் பொருள்களை அனுப்பும் ஒரே நாடு இலங்கை எனவும் அவ்வாறு அனுப்பப்படும் பொருள்களிலிருந்து விடுதலைப் புலிகள் நன்மையடைகிறார்கள் என்பது தெளிவாகத் தென்படுதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“விடுதலைப் புலிகள் இவற்றின்மூலம் நன்மையடைகிறார்கள் என்பது எமக்குத் தெரியும். எனினும் அங்கு இடம்பெயர்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மனிதநேய உதவிகளைத் தடைசெய்யமுடியாது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள மக்கள் தமது விருப்பத்துக்கு மாறாகவே தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அப்பகுதி மக்கள் பட்டிணியில் வாடுவதற்கு நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்” என்றார் அமைச்சர்.

இதேவேளை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்குத் தேவையான உதவிகளை அரசாங்கம் வழங்குவதில்லையென சர்வதேச மன்னிப்புச் சபை அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

எனினும் இந்த அறிக்கையை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என அரசாங்க சமாதானச் செயலகத் தலைவர் ரஜீவ விஜேசிங்க, சர்வதேச மன்னிப்புச் சபைக்கு அனுப்பியிருந்த கடிதத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.

தடுத்துவைத்திருக்கும் மக்களை விடுவிப்பதற்கான அழுத்தங்களை சர்வதேச மன்னிப்புச் சபை, விடுதலைப் புலிகளுக்கு வழங்க வேண்டும் என அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.