தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரும் விடுவிக்கப்படுவார்கள். ஆனால் எப்போது விடுவிக்கப்படுவார்கள் என்று கூறமுடியாதென உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழக சமூகத்தினருடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகளை விரைவில் ஆரம்பிக்குமாறு உயர்கல்வி அமைச்சர் இந்தச் சந்திப்பில் வலியுறுத்தியுள்ளார்.
பல்கலைக்கழகக் கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் முன்னர், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் எனப் பல்கலைக்கழக சமுகத்தினர் உயர்கல்வி அமைச்சரிடம் கூறினார்கள்.இந்தச் சந்திப்பில் யாழ். பல்கலைக்கழத் துணை வேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், பீடாதிபதிகள், பேரவை உறுப்பினர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதற்கு பதிலளித்த திஸாநாயக்க, கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள். ஆனால் அவர்கள் எப்போது விடுவிக்கப்படுவார்கள் என்று கூறமுடியாதென தெரிவித்துள்ளார்.
மற்றுருவகையில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் சாகடிக்கப்பட மாட்டார்கள் என திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.
மாணவர்கள் விடுவிக்கப்படுவதற்கு முன்னர் அவர்கள் கைதானதே தமது அடிப்படை உரிமைகளைக் கோரியதனாலே தவிர வேறு எந்தக் காரணங்களும் அல்ல. ஒரு நாட்டின் உயர்கல்வி அமைச்சருக்கே மாணவர்கள் ஏன் கைது செய்யப்பட்டார்கள், எப்போது விடுதலை செய்யப்படுவார்கள் என்பதெல்லாம் குறித்து தெரியாத நிலையில் ராஜபக்ச பாசிசத்தின் கோரம் வேர்விட்டுள்ளது. தவிர, பல்கலைக்கழகக் கல்வியைத் தனியார் மயப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வரும் முனைநாள் ஐ.தே.க குண்டர் படைகளின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைப்பாளரான திசாநாயக்க பல்கலைக்கழங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து மகிழ்ச்சியடைவார் என்பதில் சந்தேகங்கள் இல்லை.