போர்க் காலப்பகுதியில் அரசாங்கத்திடம் சரணடைந்த மக்கள் குறித்தும் இராணுவத்தினரிடம் சரணடைந்த கைதிகள் குறித்தும் சட்டரீதியாக செயற்படவேண்டும். அவ்வாறின்றி தொடர்ந்தும் அவர்கள் தடுத்துவைக்கப்படுவார்களாயின், பாரிய பிரச்சினையொன்று உருவாகக்கூடும். தடுத்துவைத்துள்ளவர்களை அடிப்படையாக வைத்து சர்வதேச நாடுகள் தலையீட வாய்ப்புக்கள் உள்ளன| என ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
போரின் பின்னர் வடக்கில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர்ப் பட்டியல் பெற்றுக்கொள்வது| என்ற தலைப்பில் மிலிந்த மொரகொடவிற்கு நேற்று (16) அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நாட்டின் சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்காக சட்டத்திற்கு அமைவாக முகாம்களில் உள்ள சந்தேக நபர்களும், குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு நியாயம் தீர்க்கப்படுவது அவசியமாகும். இதுகுறித்து எதிர்காலத்தில் சர்வதேச ரீதியாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை வெளியிடுவதன் மூலமும் அவர்களுக்கெதிராக நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பதன் மூலமும் மாத்திரமே இதனைச் செய்ய முடியும்.
இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் விடயத்தில் சர்வதேசம் தலையிடுவதற்கு முன்னர் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை நாடாளுமன்றத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிமல் ரத்னநாயக்க அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.