டெல்லி விமான நிலையத்தில் மர்ம மனிதர்கள் துப்பாக்கியால் சுட்டதைத் தொடர்ந்து அங்கிருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். காவல்துறையினர் மர்ம மனிதர்களை பிடிக்க முயன்ற போது அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 4வது நுழைவு வாயில் பகுதியில் அதிகாலை 2 மணிக்கு 2 தடவை துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதனால் பயணிகள் அலறியபடி விமான நிலையத்தில் இருந்து வெளியேறினார்கள்.
இதைத் தொடர்ந்து அங்கு மத்திய தொழில் பாதுகாப்புப்படையின் அதிரடிப்படை வீரர்கள், கமாண்டோ வீரர்கள் விரைந்து வந்து தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு வெள்ளை நிற குவாலிஸ் கார் வேகமாக விமான நிலையத்தில் இருந்து வெளியேறியது. அந்த காரை டெல்லி காவல்துறையினர் விரட்டி சென்றனர். ஆனால் குவாலிஸ் காரை காவல்துறையினரால் பிடிக்க முடியவில்லை.
போக்குவரத்து நெருக்கடியைப் பயன்படுத்தி மற்றொரு சாலை வழியாகத் குவாலிஸ் காரில் மர்ம மனிதர்கள் தப்பினர்.
விமான நிலையத்துக்குள் பலத்த பாதுகாப்பையும் மீறி மர்ம மனிதர்கள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தி இருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.