டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவி குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான்கீமூன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவி மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மிருகத்தனமான செயலை வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை நீதிமன்றத்தின் முன்பு நிறுத்த வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை எப்போதும் ஏற்றுகொள்வதோ அல்லது மன்னிப்பதோ கூடாது என்று கூறியுள்ளார்.
போலிசாராலும், ஆதிக்க சாதியினராலும் அதிகாரத்திற்காகப் பயன்படுத்தப்படும் வழமையான நிகழ்வாகியுள்ள பாலியல் வன்முறை சாதாரண நிகழ்வாக ஒவ்வொரு நாளும் நடைபெறும் போது ஏன் இந்த சம்பவத்திற்கு மட்டும் இவ்வளவு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என அருந்ததி ராய் நேர்காணல் ஒன்றில் கேள்வியெழுப்பினார். பன் கீ மூன் இன் புதிய தலையீடு இந்த சம்பவத்தின் பின்னணியில் ஏகாதிபத்திய அரசியல் நோக்கங்கள் உள்ளனவா என்ற சந்தேகங்களை உருவாக்கியுள்ளது.
முழு நாட்டையும் இப்படிப்பட்ட கொடுமையான சம்பவங்களால் அதிர்ச்சியில் வைத்துக் கொண்டு நாட்டின் ஏனைய முக்கிய மக்கள் போராட்டங்களிலும் பிரச்சனைகளிலும் இருந்து திசைதிருப்புவிக்க அதிகாரத்தில் உள்ளவர்கள் திட்டமிடுகிறார்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது.
வாஷிங்டன்: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக இந்தியாவுக்கு உதவ அமெரிக்கா விருப்பம் தெரிவித்திருக்கிறது. டெல்லி பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலந்த் கூறுகையில்இ இந்தியாவில் மட்டுமல்ல.. உலகெங்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் அமைப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் இலக்கு. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கான கட்டமைப்பு சிறப்பாக இருக்கிறது. இதற்கான நிறைய செயல்திட்டங்களை நாங்கள் வைத்திருக்கிறோம். அனைத்து வகையான பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் விதமாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக இந்தியாவில் இந்த செயல்திட்டங்களை நிறைவேற்ற விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.