ஜேர்மனில் வெளிநாட்டவர்களுக்கு எதிரான பயங்கரவாதக் கட்சியினர் வெடிமருந்துகளுடன் கைது

germany-மக்களின் உரிமைக்கான போராட்டங்களைத் திசைதிருப்பும் நோக்குடன் அதிகாரவர்க்கம் அடிப்படைவாதிகளையும், தேசிய வெறியர்களையும், இனவாதிகளையும் தூண்டிவிடுவதைக் காண்கிறோம். இலங்கையில் பொதுபல சேனா, தென்னிந்தியாவில் சீமான் போன்றவர்களின் குழுக்கள், பிரான்சின் நிறவாதக் கட்சியான தேசியமுன்ணணி,இஸ்லாமிய நாடுகளில் ஜிகாதி அமைப்புக்கள், மத்திய கிழக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற அமைப்புக்கள் உலகின் சந்துபொந்துக்களில் எல்லாம் நுளைந்து அழிப்பு வேலைகளில் ஈடுபடுகின்றன.

அழிவு சக்திகளால் தோற்றுவிக்க்கப்படும் இவ்வாறான அமைப்புக்களின் உணர்ச்சியைத் தூண்டும் வார்த்தைகளால் ஆயுதமேந்திய வன்முறைக் குழுக்கள் தோன்றுகின்றன.

ஜேர்மனியில் தேசிய வெறியை விதைக்கும் குழுக்களால் உணர்ச்சிவ்சப்பட்ட இளைஞர் கூட்டமொன்று அகதிகளுக்கும் வெளி நாட்டவர்களுக்கும் எதிராக ஆயுதம் ஏந்த ஆரம்பித்துள்ளது.

ஹிட்டலின் நாஸி சின்னம் பொறிக்கப்பட்ட இவர்கள் சார்ந்த குழுவின் சுலோகம் ‘ஒரு குண்டு போதும்’ என்பதாகும்.

வெளி நாட்டவர்களுக்கும் அகதிகளுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிரான ஆயுதக் குழு ஒன்றைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜேர்மனியப் போலிஸ் அறிக்கை கூறுகின்றது.

இஸ்லாமியர்களையும் அகதி முகாம்களையும் தாக்குவதற்கான வெடி மருந்துகளை வைத்திருந்தார்கள் என்று இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஜேர்மனியிலுள்ள பல அகதி முகாம்கள் தாக்கபட்டதன் பின்னணியில் இவர்களில் பங்களிப்பு இருக்கக் கூடுமா என விசாரணைகளை மேற்கொள்வதாக ஜேர்மன் போலிஸ் கூறுகின்றது.

மூன்று ஆண்களும், 22 வயது நிரம்பிய பெண் ஒருவரும் வெடி மருந்துகளை வைத்திருந்தமைக்காகக் கைது செய்யப்பட்டனர்.

ஜேர்மனியில் இதுவரை நடந்திராத இஸ்லாமிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் PDGIDA கட்சியினரால் நடத்தப்பட்டது. அரசியல்வாதிகள் தமது வாக்குப் பொறுக்கும் தேவைக்காக வெளி நாட்டவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சிக்கல்களை ஆரம்பித்துவைக்க அடிப்படைவாதக் கட்சிகள் அதனை நிறுவனமயப்படுத்துகின்றன. வன்முறைக் குழுக்கள் அதற்குச் செயல்வடிவம் கொடுக்கின்றன. அச்சத்தில் வாழ நிர்பந்திக்கப்படும் வெளி நாட்டவர்களை வியாபார நிறுவனங்கள் மலிவான கூலிகளாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.