ஜெய் பீம் திரைப்படத்தையும், வெற்றிமாறனின் விசாரணையும் ஒரே தளத்தில் வைத்து சிலர் பேசுகிறார்கள். தவறு. விசாரணை எப்போதாவது யாருக்காவது நடக்கும் சம்பவம். ஜெய் பீம் அப்படியல்ல. இருளர் பழங்குடியினர் தொடர்ச்சியாக சாதிய சமூகத்தின், காவல்துறையின் அடக்குமுறைக்கு ஆளாகிறார்கள். அதில் ஒரு தொடர்ச்சி உள்ளது. விசாரணை போலீசின் கொட்டடி வன்முறையை பேசுவது. ஜெய் பீமில் அது ஒரு பகுதிதான். பழங்குடியினருக்கு குடும்ப அட்டை, ஆதார், ஓட்டு என்று அரசுசார் உரிமைகள் எதுவும் இல்லை.
ஏன் உரிமைகள் தரப்படவில்லை? தேர்தலுக்கு கண்ட சாதிக்காரன் முன்னால குனிய வேண்டியிருக்கு, இவனுங்களுக்கு ஓட்டுரிமை குடுத்து இவனுங்க கால்லயும் விழணுமா? என்கிறார் ஊர் பிரசிடென்ட். ஓட்டுரிமை இல்லாததால் உதவி என்று ஒரு பழங்குடிப் பெண் வந்து நிற்கையில், நீ ஓட்டு போட்டா நான் ஜெயிச்சேன் என்கிறார் அதே பிரசிடென்ட். பழங்குடியினரின் அரசியல் உரிமை ஏன் மறுக்கப்படுகிறது, மறுக்கப்படுவதால் என்ன நிகழ்கிறது என்பதை போகிற போக்கில் சொல்கிறது படம். 12 இயர்ஸ் ஆஃப் ஸ்லேவ் படத்தில் வெள்ளைக்காரர்கள் பைபிளையும் கிறிஸ்துவையும் தங்களின் கறுப்பு அடிமைகளுக்குப் போதிப்பார்கள். ஆழ்ந்த மத நம்பிக்கையுடன் அவர்கள் இதைச் செய்தாலும், உன்னைப் போல் பிறரையும் நேசி என்ற பைபளின் வாசகத்தை மட்டும் கறுப்பின அடிமைகள் விஷயத்தில் கடைப்பிடிப்பதில்லை. அவர்கள் அதனை பைபிளுக்கு எதிரானதாக நினைப்பதில்லை. அவர்களைப் பொறுத்தவரை பிறர், சக மனிதன் என்பது இன்னொரு வெள்ளைக்காரன் மட்டுமே.
கறுப்பர்கள் பிறரோ, சக மனிதர்களோ அல்ல, அவர்களது உடமைகள். அதை அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆண்டை மனோபாவத்தின் இந்தத் தடித்தனத்தை ஜெய் பீம் நுட்பமாகவும், தொடர்ச்சியாகவும் முன் வைக்கிறது.சிறையிலிருந்து விடுதலையாகிவரும் பழங்குடியினரை சிறை வாசலிலேயே பொய் வழக்கிட்டு இழுத்துச் செல்கிறார்கள். வயல் எலிகளைப் பிடித்து விவசாயத்துக்கு உதவி செய்தாலும், உங்களையெல்லாம் ஊருக்குள்ள விடறதே தப்பு என்கிறார் பிரசிடென்ட். பாம்பு பிடிக்க உதவிக்கு ஒன்றாக பைக்கில் சென்றாலும் தொடாமல்தான் உட்கார வேண்டியிருக்கிறது. ஒரே ஊர்க்காரங்க என்றால், ஊருக்கு வெளியே கிடக்கிறவன் ஊர்க்காரனாடா என்று எரிச்சலாகிறார்கள். இதற்கெல்லாம் உச்சமாக, உயிர் பிச்சைக் கேட்டு காலைப் பிடித்து கதறினால், தொட்டுப் பேசறியாடா என்று எஸ்.ஐ. எட்டி உதைக்கிறார்.
ஒருவன் உயிர் பிச்சைக் கேட்டு கதறி கால் பிடிக்கிற நிலையிலும், நீ என்னை தொடறியா என்ற அகங்காரமே ஒருவனிடம் முன் நிற்கிறது என்றால், இந்த சமூகத்தில் சாதிய வன்மம் எப்படி தலைக்கேறி நிற்கிறது.என்னதான் நீ அநீதி இழைத்தாலும், உன் சாதியும், அதிகாரமும் உனக்கு துணை நின்றாலும், நீதிக்காக குரல் கொடுக்க எப்போதும் இரண்டு பேர் இருப்பார்கள். எந்த எல்லைக்கும் சென்று அவர்கள் நீதியை நிலைநாட்டுவார்கள் என்ற நேர்மறை நம்பிக்கையை ஜெய் பீம் விதைக்கிறது. இங்க ஒண்ணுமே மாறாது சார், நீங்க மட்டும் பேசி என்னாகப் போகுது சார் என்ற மொண்ணைக் குரல்களுக்கு எதிராக ஜெய் பீம் தரும் நம்பிக்கை முக்கியமானது. சமூக நீதிக்காக நாலுவரி எழுதும் பேசும் செயல்படும் எல்லா மனங்களுக்குப் பின்னாலும் இருப்பது இந்த நம்பிக்கைதானே.
11TJoy Pandiaraju, Gandhi Study Circle and 9 others5 comments1 shareLikeComment