“இலங்கைக்கு எதிரான தீர்மானம்” என்று பிரச்சாரப்படுத்தப்படும் ஜெனீவ தீர்மானத்தில் குறிப்பாக எதுவும் கூறப்படவில்லை. போர்க்குற்றவாளிகளே தம்மை விசாரணை செய்துகொள்வதாகக் கூறும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அமரிக்காவின் வேண்டுகொள். இத்தீர்மானத்தை உலக மக்கள் அபிப்பிராத்தை உருவாக்கும் கருவியாகப் பயன்படுத்துவதை விடுத்து புலம்பெயர் சந்தர்ப்பவாத சமூக விரோதக் குழுக்கள் அமரிக்கா தொடர்பான அபிப்பிராயத்தை தமிழ் மக்கள் மத்தியில் உருவாக்க முனைகின்றன. இதன் வழியாக தமிழ் மக்களை உலக மக்கள் விரோதியான அமரிக்காவை எதிர்க்கும் உலக மக்கள் மத்தியிலிருந்து தமிழ் மக்களை அன்னியப்படுத்துகின்றன.
இதன் அமரிக்கா தனது நலனுக்காக உருவாக்கிக் கொள்ள முற்படும் இந்தக் குறைந்த பட்ச தீமானத்தைக் கூட இலங்கை இனப்படுகொலையை திட்டமிட்டுக் கொடுத்த இந்தியா ஆதரிக்க மறுக்கிறது.
இலங்கைக்கு எதிராக ஐ.நா., சபை மனித உரிமைக் குழுவில், அமெரிக்க தாக்கல் செய்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என, பிரதமர் மன்மோகனுக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி இரு கடிதங்களை எழுதியிருந்தார்.
இந்த நிலையில் மன்மோகன் சிங் கருணாநிதிக்கு மழுப்பலான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதற்கு பதிலளித்து மன்மோகன் எழுதியுள்ள கடிதம்: இலங்கையில், 2009ல் நடந்த போருக்குப் பின், தமிழர்களுக்கு நியாயமான நலன்கள் கிடைக்கும் வகையில், அரசியல் தீர்வு ஏற்படுத்த வேண்டும் என, இலங்கை அரசை கேட்டுக் கொண்டுள்ளோம். அதே வேளையில், வீடுகளை இழந்து வெளியேற்றப்பட்ட தமிழர்களை, அவர்களது சொந்த இடங்களில் மிக விரைவில் மறு குடியமர்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம். மேலும், தமிழர்கள் பகுதியில் அவசர சட்டங்களை திரும்ப பெற்று, இயல்பு நிலையை கொண்டு வர வேண்டும். நடந்துள்ள மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதோடு, மனித உரிமை மீறல் மூலம் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் இழப்பீடு அளிக்க வேண்டும். இதற்கு, பொருளாதார மற்றும் நிதியுதவிகளையும் அளிக்க வேண்டும்.
இலங்கை தமிழர் பகுதிகளில், இயல்பு நிலை திரும்ப இந்தியா அனைத்து உதவிகளையும் செய்துள்ளது. இந்தியாவின் சார்பில், வீடு, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு பயிற்சி, வேளாண்மை மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த திட்டங்கள் வகுத்து செயல்படுத்தப்படுகிறது. அவசர நிலை திரும்ப பெற்று, வடகிழக்கு பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. மறுகுடியமர்வில் நியாயமாக செயல்படுவதோடு, தமிழர்களின் குறைகளை பாரபட்சமற்ற முறையில் தீர்க்க வேண்டும் என, இலங்கை அரசை இந்தியா வலியுறுத்தியுள்ளது. போருக்கு பின், இலங்கை அரசு அமைத்துள்ள சமரசக் குழுவை இந்தியா வரவேற்கிறது.
இக்குழு அளித்துள்ள பரிந்துரைகளை இலங்கை அரசு அமல்செய்யும் என நம்புகிறோம். சமரசக்குழு பரிந்துரையின் அடிப்படையில், போரின் போது நடந்த மனித உரிமை மீறல் தொடர்பாக, காலக்கெடு நிர்ணயித்து சுதந்திரமாக விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம். ஐ.நா., சபை மனித உரிமைக் குழுவில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில், அனைத்து தரப்புகளையும் இந்தியா தொடர்பு கொண்டு பேசி வருகிறது. இதில், இரு தரப்புக்கும் மோதல் ஏற்படாமல், சமரசமாக தீர்வு காண இந்தியா முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, இலங்கை தமிழர்கள் எதிர்காலத்தில், சுயமரியாதையுடன், சமத்துவமாக வாழ வேண்டும் என்பதே குறிக்கோள் என கடிதத்தில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.