ஆந்திர மாநில கடப்பா தொகுதி எம்.பி. ஜெகன்மோகன் ரெட்டி மீது சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநில சுங்கவரி மற்றும் தடுப்புத்துறை அமைச்சர் மோபிதேவி வேங்கட ரமணா சி.பி.ஐ.யினரால் கைது செய்யப்பட்டார்.
இவர் முன்னாள் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி அமைச்சரவையில் உள்கட்டமைப்பு, முதலீடு மற்றும் துறைமுக அமைச்சராக இருந்தார். அப்போது, வான்பிக் போர்ட் பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனத்திற்கு ஒதுக்கீடுகள் வழங்குவதில் சலுகைகள் காட்டியதாகவும், அதனால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கைதைத் தொடர்ந்து மோபிதேவி தன் ராஜினாமா கடிதத்தை ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டிக்கு அனுப்பினார். அவர், அதனை ஆந்திர கவர்னர் நரசிம்மனுக்கு அனுப்பி வைத்தார். அதனை கவர்னரும் ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனக்கு எதிராக காங்கிரஸ் கட்சியும், தெலுங்கு தேசம் கட்சியும் சதி செய்வதாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார்.