இந்தியாவை தன் காலனி நாடாக ஆட்சி செய்து வந்த பிரிட்டன் அரசின் ரௌலட் சட்டத்திற்கு எதிராகப் போராடிய மக்களை ஒரு குறுகிய இடத்திற்குள் சுற்றி வளைத்து சுட்டதில் ஆயிரம் பேர் இறந்தனர். இந்திய விடுதலை வரலாற்றில் மிகப்பெரிய உயிர் ஈகையைக் கொண்ட ஜாலியன் வாலாபாக்கில் கொல்லப்பட்ட அனைவரையும் மத்திய அரசு தியாகிகளாக அறிவித்தது.
1919-மார்ச் மாதம் இயற்றப்பட்ட ரௌலட் சட்டம் இயற்றப்பட்ட குழுவின் தலைவராக சிட்னி ரௌலட் இருந்தார். இச்சட்டம் மக்களின் பேச்சுரிமை, எழுத்துரிமை, கூடும் உரிமைகளை தடை செய்தது. இச்சட்டத்திற்கு எதிராக 1919 ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி மாலை 4-30 மணிக்கு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் 7 ஏக்கர் பரப்பளவு கொண்ட மைதானத்தில் கூடிய மக்கள் இச்சட்டத்திற்கு எதிராக போராடினார்கள். அந்த மைதானத்திற்கு ஒரே ஒரு நுழைவாயில்தான்.அப்போது 150 ராணுவ வீரர்களுடன் அவ்விடத்திற்கு வந்த ஜெனரல் ஓ டயர் என்பவர் அந்த நுழைவாயிலை மூடி விட்டு சுமார் 1600 ரவுண்டுகள் துப்பாக்கிச்சூடு நடந்ததாக தெரிவிக்கின்றன தகவல்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்தேறிய அந்தக் கொடூரத்தில் சுமார் 1000 பேர் இறந்தனர்.
பின்னர் அந்த இடத்தில் ஜாலியன்வாலாபாக் படுகொலை நினைவிடம் கட்டப்பட்டது. இந்த நினைவில்லம் அக்காலத்தில் நிகழ்ந்த கொடூரத்தை நினைவூட்டும் படி குண்டுகள் சிதறிய அடையாளங்களோடு உருவாக்கியிருந்தார்கள். இப்போது மோடி அரசு இந்த நினைவில்லத்தை புனரமைப்பதாகக் கூறி அதன் தியாகத்தையும் வடிவத்தையும் மாற்றி விட்டார்கள்.
குறிப்பாக அந்த குறுகிய நுழைவு வாயில் இடிக்கப்பட்டு பெரிய பிரமாண்டமாக ஆடம்பரமான நுழைவு வாயிலாக மாற்றப்பட்டு விட்டது. இப்போது அதற்குள் நுழையும் எவரும் அங்கு நடந்த அநீதியை நினைக்க முடியாத படி பள பளப்பாக மாறி விட்டது. ஜாலியன் வாலாபாக் நினைவில்லம்.
இதனைக் கவனித்த ஜாலியன் வாலாபாக் நூலை எழுதிய வரலாற்றாசிரியர் . கிம் ஏ. வாக்னர், “ படுகொலையின் கடைசி
தடையங்களும் அழிக்கப்பட்டு விட்டன” என பதிவிட்டிருக்கிறார். அதே போன்று வரலாற்றாசிரியர் இர்பான் ஹபீப்,குர்மித் ராய் சங்கா உள்ளிட்ட பலரும் மோடி அரசின் இந்த செயலை கண்டித்து வருகிறார்கள்.