ஜார்ஜியா நெருக்கடி குறித்து தான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக அதிபர் புஷ் கூறுகின்றார்!.

09.08.2008.

ஜார்ஜியாவில் உருவாகியுள்ள நெருக்கடி குறித்து தான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக அதிபர் புஷ் கூறுகின்றார்.

ஒலிம்பிக் துவக்கவிழாவில் கலந்துகொண்டிருந்த அதிபர் புஷ் பீய்ஜிங்கிலிருந்து கருத்து வெளியிடுகையில், ஜார்ஜிய நிலப்பரப்பின் ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்ததோடு, குண்டுவீசுவதை ரஷ்யா நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆனால் ரஷ்யா, தனது முன்னாள் சோவியத் ஒன்றியப் பகுதிகளின் நிலப்பகுதிகளை அபகரிக்கும் எண்ணம் கொண்டிருக்கிறது என்ற குற்றம்சாட்டின் மூலம் ரஷ்ய நடவடிக்கையை ஜார்ஜியா ஊதிப்பெரிதுபடுத்துகிறது என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரொவ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஜார்ஜியத் துருப்பினருக்கு இராக்கில் சண்டையில் ஈடுபடுதற்கு பயிற்சியளித்துவந்த அமெரிக்க இராணுவக் குழுவினர் ஜார்ஜியத் தளங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ரஷ்ய தாக்குதலைத் தொடர்ந்து ஜார்ஜியாவில் யுத்த நிலை பிரகடனம்..
————————————————————————-
ஜார்ஜியாவிலே பிரிவினை கோரும் தெற்கு அஸ்ஸெட்டியா பிராந்தியத்தின் அருகில் அமைந்துள்ள கோரி நகரில் ரஷ்ய விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், ஜார்ஜியாவில் யுத்த நிலையை பிரகடனம் செய்யும் அதிபரின் ஆணைக்கு அந்நாட்டின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஜார்ஜியத் துருப்புகள் குவிக்கப்பட்டுவருகின்ற இராணுவ நிலைகளை இலக்குவைத்து ரஷ்ய விமானங்கள் தாக்கின என்றாலும், ஒரு தாக்குதலில் இரண்டு அடுக்குமாடிக் குடியிருப்புகள் சேதப்படுத்தப்பட்டிருந்தன.

இதில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டும் இருக்கிறார்கள். தங்களது விமானங்கள் இரண்டு சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன என்பதையும் ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ளது.

தெற்கு அஸ்ஸெட்டியாவின் தலைநகர் ஷின்வாலியைக் முற்றுகையிட ஜார்ஜியர்கள் செய்த முயற்சிக்குப் பின்னர், அந்நகரின் கட்டுப்பாட்டை ரஷ்யத் துருப்பினர் கைப்பற்றியுள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

அப்காஸியப் பிரிவினைவாதிகளும் ஜார்ஜியப் படைகள் மீது தாக்குதல்.
————————————————————————
ஜார்ஜியாவில் இருக்கின்ற மற்றுமொரு பிரிந்துபோன பிராந்தியமான அப்காஸியாவில் இருக்கின்ற பிரிவினைவாதிகள், கொடொரி கோர்ஜில் உள்ள ஜோர்ஜியப் படைகள் மீது தாம் வான் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக கூறுகிறார்கள்.

கோர்ஜில் இருக்கின்ற ஜார்ஜியப் படைகளை அங்கிருந்து விரட்டுவதே தமது நோக்கம் என்று, அப்காஸியாவில் சுய-அரசாங்கத்தை பிரகடனம் செய்துள்ள ஆட்சியாளர்களின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த கோர்ஜ் பகுதிதான் அங்கு, ஜார்ஜிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரே பகுதியாகும்.

.