ஜம்மு அருகில் ஒரு வீட்டிற்குள் புகுந்திருந்த 3 லஷ்கர்- இ தாயிபா தீவிரவாதிகளையும் கொன்று, அவர்களிடம் பிணையக் கைதிகளாக இருந்த 4 குழந்தைகள் உள்பட 7 பேரையும் சிறப்பு ராணுவப் படையினர் வெற்றிகரமாக மீட்டனர். 19 மணி நேரம் நீடித்த இந்த மோதலில் மேலும் 3 பேர் பலியாகினர்.பூஞ்ச் எல்லையில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் படையினர் நடத்திய அத்துமீறிய தாக்குதலைச் சாதகமாக்கிக் கொண்டு ஊடுருவிய லஷ்கர்- இ தாயிபா தீவிரவாதிகள் 3 பேர், நேற்று காலை சரக்கு வாகனம் ஒன்றில் ஏறி வந்து ஜம்மு- அக்னூர்- பூஞ்ச் நெடுஞ்சாலையில் தோமனா- மிஸ்ரிவாலா பகுதியில் உள்ள ராணுவச் சோதனை சாவடியை தாக்கியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில், பணியில் இருந்த இளநிலை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். காக்கி உடையணிந்திருந்த அந்தத் தீவிரவாதிகள் பின்னர் ஆட்டோ ஒன்றைக் கடத்தி, பன்னாட்டு எல்லையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜம்முவின் புறநகர்ப் பகுதியான சின்னூருக்கு வந்துள்ளனர்.
அங்கு சாலையில் சென்றுகொண்டிருந்த அப்பாவிகள் 4 பேரைச் சராமாரியாகச் சுட்டுக்கொன்றுவிட்டு, பில்லு ராம் என்பவரின் வீட்டிற்குள் புகுந்து, அவரின் மனைவி, 4 குழந்தைகள் உட்பட 7 பேரைப் பிணையக் கைதிகளாகப் பிடித்து வைத்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் அந்த இடத்தைச் சுற்றி வளைத்த படையினர், தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்த முயற்சித்தபோது இரு தரப்பினருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை மூண்டது. தீவிரவாதிகளிடம் ஏ.கே.47 துப்பாக்கி, கையெறி குண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்ததால், பிணையக் கைதிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடாது என்று கருதி பாதுகாப்புப் படையினர் அதிகமாகத் தாக்கவில்லை.
இதில் நேற்று மாலை 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில், நீண்ட முயற்சிக்குப் பிறகு நேற்று நள்ளிரவு 11.45 மணியளவில் கடைசித் தீவிரவாதி கொல்லப்பட்டதாக ராணுவப் பேச்சாளர் லெப்டினன்ட் கலோனல் எஸ்.டி. கோஸ்வாமி தெரிவித்தார்.
19 மணி நேரம் நீடித்த மோதலிற்குப் பிறகு, தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியிருந்த பில்லு ராமின் மனைவி சுனிதா தேவி (35), குழந்தைகள் சீதல் (9), விபின் (2), ஆஷாத் (7), கஜல் (4) ஆகியோரும், பில்லு ராமின் உறவினர்கள் இருவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இதில் சுனிதா தேவி மற்றும் குழந்தைகள் 4 பேர் ஆகிய 5 பேருக்கும் கால்களில் துப்பாக்கி குண்டு காயம் உள்ளதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதற்கிடையில், பிணைக் கைதிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட அசோக் குமார் என்ற ஆசிரியர், அண்டை வீட்டார் ஒருவர், தீவிரவாதிகள் இருந்த வீட்டிற்குள் தாக்குதல் நடத்தச் சென்ற படையினர் ஒருவர் ஆகிய மூன்று பேர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். |