ஜனாதிபதித் தேர்தல் ஏற்பாட்டுப் பணிகளுக்காக பசில் ராஜபக்ச அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு 400 மில்லியன் பணத்தை வழங்கியுள்ளார்.
எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்டத் தலைவரான அமைச்சர் சி.பீ.ரத்னாயக்கவிற்கு 50 ஆயிரம் ரூபா மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி சார்பில் நுவரெலியா மாவட்டத்தின் தலைமைத்துவம் அமைச்சர் தொண்டமானுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் நுவரெலியா சென்றிருந்த பசில் ராஜபக்ச 400 மில்லியன் ரூபாவையும் மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டதற்கான கடிதத்தையும் அமைச்சர் தொண்டமானிடம் கையளித்துள்ளார். அதேவேளை, அமைச்சர் சந்திரசேகரன் வீட்டிற்குச் சென்ற ராஜபக்ச அவரிடம் 200 மில்லியன் ரூபாவைக் கொடுத்துள்ளார்.
பசில் ராஜபக்ச மலையகத் தமிழ் தலைவர்கள் இருவருக்கு இவ்வாறு பெருந்தொகைப் பணத்தை வழங்கிய போதிலும் நுவரெலியா, மஸ்கெலியா, அங்குராங்கெத்த, வலப்பனை ஆகிய தொகுதிகளின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுக்குத் தலா 50 ஆயிரம் ரூபாவையே வழங்கியுள்ளார்.